அணிந்துரை:

“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்ற தலைப்பில் சசிக்குமார் எழுதியுள்ள இந்தப்
புத்தகம் நுண்ணுயிரிகளின் சிக்கலான உலகத்தை விளக்கும் ஓர் அரிய நூலாகும். எளிமையான
உரைநடையில், மழலையர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் தமிழ் படிக்கத் தெரிந்த ஆனால்
முறையான துறை சார்ந்த கல்வி அறிவு இல்லாத பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியும் வகையில்
விளக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் தலைப்பை அடிக்கடி பல இடங்களில் நாம் கேட்டு இருப்போம். கடவுள் எல்லா
இடத்திலும் இருப்பார் என்று பொருள்படும்படி இந்தச் சொற்றொடரை பலரும் உபயோகிக்கின்றனர்.
ஏன் நடக்கிறது? எதற்கு நடக்கிறது? என்ற அடிப்படை அறிவியலை அறியாத காலத்தில் தெய்வீக
தலையிட்டால் தான் இவை உருவாகின என்று நம்பப்பட்டது. உதாரணமாகப் பெரியம்மை,
சின்னம்மை போன்ற கொள்ளை நோய்கள் தாக்கிய பொழுது நாம் செய்த பாவங்களுக்குக் கடவுளின்
தண்டனைகள் தான் இவை என்று நம்பப்பட்டது.
இப்பொழுது நாம் கலியுகத்தின் முடிவில் இருக்கிறோம். உலகம் அழியப் போகிறது. நாம் செய்த
பாவங்களின் உச்சம்தான் சமீபத்தில் நம்மைத் தாக்கிய கொரோனா வைரஸ் என்று குற்றம்
கூறிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தான் புரிய வந்தது, இது
போன்ற நோய்கள் நுண்ணுயிரிகளால் தான் நமக்கு வந்தது என்று. இந்த நோய்களைக் கட்டுப்படுத்த
உடனடி தேவை தெய்வீக சக்தி அல்ல தகுந்த அறிவியல் கண்டுபிடிப்பு.
சரியான நேரத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படாதது கொள்ளை நோய்களின் அதிகரிப்புக்குக்
காரணமாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும், சில
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசிகள் போடுவதற்கு
எதிர்ப்புத் தெரிவிப்பது அல்லது தடுப்பூசிகள் போடுவதற்குத் தாமதப்படுத்துவது ஆகியவை இதில்
அடங்கும். ஏன் அப்படி அவர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பல ஆய்வுகள் உலகம்
முழுவதும் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பெற்றோரும் கூறும் காரணங்கள் வேறு
வேறாக இருந்தாலும் அவற்றைக் கீழ்காணும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்

 மத நம்பிக்கைகள்
 தனிப்பட்ட அல்லது தத்துவ நம்பிக்கைகள்
 தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றிய கவலைகள்
 முடிவெடுப்பதற்கு முன் மருத்துவர்கள் அல்லது செவிலியர்களிடம் இருந்து மேலும்
அறிந்துகொள்ள விருப்பம்

இந்த நம்பிக்கைகளும் புரிதல்களும் வெவ்வேறு முடிவுகளுக்கு வழிவகுக்கும். சில பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் மறுக்கலாம், மற்றவர்கள் நீண்ட காலத்திற்குத் தடுப்பூசி
போட மறுக்கலாம்.
ஆய்வின் முடிவாகக் குழந்தை பருவ தடுப்பூசிகள் பற்றித் தங்களுக்குக் கேள்விகள் அல்லது கவலைகள்
இருப்பதாகப் பல பெற்றோர்கள் ஒப்புக் கொண்டனர். அதனால்தான் தடுப்பூசிகள் பற்றிய உண்மையை
அறிவியலாளர்கள் பொதுமக்களுக்குப் புரிய வைப்பது முக்கியம்.
தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது? தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எப்படி வருங்காலத்தில்
கொள்ளை நோய்களால் பாதிக்கப்படாமல் இருப்போம் என்பதைப் பெற்றோர்களுக்குப் புரியும்
வகையில் கூறும் பொழுது உரிய நேரத்தில் குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்க முடியும்
அனைத்து நுண்ணுயிரிகளும் மோசமானவை அல்ல என்பதால், நுண்ணுயிரிகளைப் பற்றிய
உண்மைகளைப் புரிந்துகொள்ள எளிய மக்களுக்கு உதவுவதில் நுண்ணுயிரி கல்வி முக்கியமானது.
இந்தத் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் சசிக்குமாரின் இந்தப் புத்தகம் நுண்ணுயிரிகள் குறித்த
நேரடியான அறிவியல் விளக்கங்களை வழங்குகிறது. இது இந்த நோய்களைக் குறித்து அறிந்து

கொள்வதற்கும், அன்றாட மக்களுக்கு அவை ஏற்படுவதற்கான உண்மையான காரணங்களைப்
புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இது பாரம்பரியத்திற்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான ஒரு
பாலம். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட புரிதலின் மூலம் நுண்ணுயிரி உலகின் மர்மங்களை அனைவரும்
எளிதில் அறிந்து கொள்ள இயல்கிறது.

இந்தப் புத்தகத்தின் கதாநாயகன் அபிநவ், எவரும் புரிந்துகொள்ளும் வகையில் சிக்கலான
விஷயங்களை எப்படி உடைக்கிறார் என்பது நேர்த்தியாக எழுதப்பட்டு இருக்கிறது. கதைப்படி அபி ஒரு
மாணவனாக இருந்தாலும், குழந்தைகள் அவனிடம் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும்
அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பதில் அளிக்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் அது
சம்பந்தமான அறிவியல் தகவல்கள் தெளிவாக விளக்குகிறான். இதை அவன் செய்யும் விதம்
புத்தகத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. மேலும் புத்தகத்தைக் கடைசி வரை படிக்க வைக்கிறது.
குழந்தைகளுக்கு மட்டுமின்றி, இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்காத
பெரியவர்களுக்கும் கூடப் புரியும் வகையில் எளிமையான கேள்விகளுக்கு அவன் எப்படிப்
பதிலளிக்கிறான் என்பதுதான் இந்தப் புத்தகத்தில் மிகவும் அருமையான விஷயம்.
'மைக்ரோபயோட்டா' (Microbiota') என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற அனைத்து சிறிய
உயிரினங்களையும் குறிக்கிறது. இது நம் உடலில் மற்றும் குடலில் உள்ளே வாழும். இந்தச் சிறிய
உயிரினங்கள் நமக்கு உதவலாம், நமக்குத் தீங்கு செய்யலாம் அல்லது எந்தப் பிரச்சனையும் இல்லாமல்
நம்முடன் சேர்ந்து வாழலாம். 'மைக்ரோபயோம்' (Microbiome) என்பது இந்தச் சிறிய உயிரினங்களின்
அனைத்து மரபணுக்களையும் அல்லது மரபணு பொருட்களையும் குறிக்கும் மற்றொரு சொல்.

விஞ்ஞானிகள் பொதுவாக 'மைக்ரோபயோட்டா'வை விட 'மைக்ரோபயோம்' பற்றி அடிக்கடி
பேசுகிறார்கள். ஏனெனில் இந்தச் சிறிய உயிரினங்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவை அவற்றின்
மரபணுக்களைப் படிப்பதன் மூலம் வருகின்றன. இதைக் கற்பனை செய்வது கடினம். ஆனால் நம்
உடலில் இந்த நுண்ணிய உயிரிகள் பெரிய எண்ணிக்கையில் உள்ளன. அதாவது 10 முதல் 100
டிரில்லியன் வரை! (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி). இந்தச் சிறிய உயிரினங்களின்
மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட வகைகள் நம் குடலில் வாழ்கிறது. இத்தகைய சிக்கலான
விஷயங்களைப் புத்தகத்தின் “கதாநாயகன் அபி” எளிமையான எடுத்துக்காட்டுகள் மட்டும் சொற்களின்
மூலம் விளக்குவது புத்தகத்தின் சிறப்பு.
நம்மைச் சுற்றிலும் வாழும் சிறிய உயிரினங்கள் அல்லது நுண்ணுயிரிகள் நம் வாழ்வின் பல பகுதிகளில்
ஈடுபட்டுள்ளன. இங்கே சில உதாரணங்கள்:
1. தயிர் மற்றும் பாலாடைக்கட்டி தயாரித்தல்: பாலை தயிர் மற்றும் பாலாடைக்கட்டியாக மாற்றுவதில்
நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
2. செரிமானம்: அவை நம் குடலில் நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன.
3. அதீத சூழ்நிலைகள்: மற்ற உயிரினங்கள் வாழ முடியாத அதீத சூழ்நிலைகளில் வாழ்வதோடு
மட்டுமல்லாமல் சூழ்நிலையைச் சமநிலையில் வைப்பதற்கு நுண்ணுயிரிகள் உதவுகின்றன.
4. உயிரி எரிபொருள்: நுண்ணுயிரிகள் கரிமக் கழிவுகள் மற்றும் சிக்கலான கரிம சேர்மங்களிலிருந்து
உயிரி எரிபொருட்களை உருவாக்க உதவுகின்றன.
5. விவசாயம்: உணவுக்குத் தேவையான தாவரங்களை வளர்ப்பதில் நுண்ணுயிரிகள் பங்கு
அளப்பரியது.
6. ரொட்டி மற்றும் இட்லி தயாரித்தல்: நொதித்தல் செயல்முறைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல்
சுவையையும் கொடுக்கின்றன.

7. கழிவு மறுசுழற்சி: கழிவுகளைப் பயனுள்ள பொருளாக மாற்ற நுண்ணுயிரிகள் உதவும்.
8. எண்ணெய் கசிவை சுத்தம் செய்தல்: சில நுண்ணுயிரிகள் எண்ணெயை உணவாக உண்டு வாழ
முடியும். இவற்றைக் கொண்டு கசிவை சுத்தம் செய்ய உதவும்.
9. உற்பத்தி: உயிரி உற்பத்தி தொழிற்சாலையில் நுண்ணுயிரிகளின் பங்கும் உண்டு.
எனவே, நுண்ணுயிரிகள் பல வழிகளில் மிகவும் முக்கியமானவை. மேலும் "எல்லா இடங்களிலும்"
வியாபித்துள்ளன.
நமது குடலில் வாழும் நுண்ணுயிரிகள் நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்ற
ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்தக் குடல்
நுண்ணுயிரிகளை மாற்றுவது சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க உதவும்
என்பதில் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளோம். இதைச் செய்வதற்கான ஒரு வழி, ஒருவரின் வயிற்றில்
புதிதாக நுண்ணுயிர்களைக் கொண்டு வந்து சேர்ப்பது FMT (fecal microbiota transplantation) என்று
அழைக்கப்படுகிறது.
மருத்துவர்கள் ஆரோக்கியமான ஒருவரின் குடலில் இருக்கும் நுண்ணுயிரியை மற்றொருவரின் குடலில்
வைக்கும் போது இது நடக்கும். நோயுற்ற நபரின் குடலில் உள்ள சிறிய நுண்ணுயிர்களின் கலவையை
அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மாற்ற உதவுவதே இந்தத் தொழில்நுட்பம்.
இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் இது க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (Clostridium difficile)
போன்ற கடுமையான தொற்றுக்குச் சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக உள்ளது. சில குடல் நோய்கள்,
உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி (இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு
அபாயத்தை அதிகரிக்கும் நிலைமைகளின் வகைகள்) போன்ற பிற பிரச்சனைகளுக்கும் இந்த
நுண்ணுயிரி மாற்றுச் சிகிச்சை உதவும் என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
நுண்ணுயிரிகளுடன் சகவாழ்வு முறையில் எப்படி மனிதன் உட்பட மற்ற உயிரினங்கள் வாழ்கின்றன
என்பதைப் புரிந்து கொண்டவுடன் இந்தச் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைப் புரிந்து கொள்வது
அவர்களுக்கு எளிதாகும்.
புத்தகத்தில் குறிப்பிட்டபடி, குழந்தைகளின் கேள்விகளுக்கு அபியின் பதில்கள் ஒரு நாள்
நுண்ணுயிரிகள் குறித்து நம் அனைவரின் அறிவுக்கண்ணைத் திறக்கலாம். நுண்ணுயிரிகளின்
நன்மைகளைப் பாராட்டவும், இந்த நுண்ணுயிர்கள் உண்மையிலேயே எல்லா இடங்களிலும்
இருப்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த விளக்கங்கள் உதவும். நம் முன்னோர்கள் முன்பு கூறிய பல
கதைகளுக்கு இன்று அறிவியல் பூர்வமாக நாம் விடை கண்டறிந்து உள்ளோம்.

அவை ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்ற பதில் தெரியாது இருந்த காலத்தில் பழங்கதைகளை நம்ப
வேண்டியிருந்தது. ஆனால் இன்று அறிவியல் ஒவ்வொன்றிற்கும் சரியான விடையை நமக்கு
அளிக்கிறது. எந்தவிதமான படிப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளும் மற்றும் சாமானிய மக்களும்
முக்கியமாக பெண்கள் இந்த நூலை படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

சசிக்குமாரின் இந்தப் புத்தகம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. எங்கள் ஆறு மாத விவாதங்கள்
புத்தகமாக மாறியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. நுண்ணுயிர் உலகின்
சிக்கல்களைப் புரிந்து கொண்டு இப்படி ஒரு புத்தகம் எழுதுவதற்கு அவர் செய்த ஆராய்ச்சிகள்,
வாசிப்புகள், மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களுடன் மேற்கொண்ட விவாதங்கள் எனப் பலவற்றைப்
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது.
நவம்பர் 2022 இல் சென்னை ஐஐடி இல் நான் ஏற்பாடு செய்திருந்த நுண்ணுயிரி குறித்த மாநாட்டில்
கலந்து கொண்டது இந்தப் புத்தகத்திற்கு உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். பலரது

நுண்ணுயிரி குறித்த ஆராய்ச்சிகளையும், எனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களைச் சந்திக்கும்
வாய்ப்பையும் அது வழங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள விரிவான புள்ளி விவரங்கள் மற்றும் அதை விளக்கும் நுண்ணறிவு
ஆகியவற்றிற்குக் கணிசமான நேரமும் புரிதலும் தேவைப்பட்டிருக்கும் என்பது திண்ணம். பலகாலமாக
இந்தத் துறையில் பணி செய்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற விஞ்ஞானிகளுக்கும் இந்தப்
புத்தகத்தில் சில புதிய தகவல்கள் இருக்கிறது என்பது உண்மையிலேயே என்னை ஆச்சரியமடைய
வைத்தது. உங்கள் அர்ப்பணிப்புக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். மேலும் அறிவியலை
எளிமையாக விளக்கி சாமானியர்களுக்குக் கொண்டு செல்லும் தனித்துவமான வேலையைத்
தொடருங்கள். உங்கள் திறமை அளப்பரியது.

டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன்
மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி, நுண்ணுயிரியலாளர்; நாசா- ஜெட் ப்ராபல்ஷன் லேப்., பசடேனா,
கலிபோர்னியா 91109, அமெரிக்கா
Senior Research Scientist, Microbiologist
NASA – Jet Propulsion Lab.,
Pasadena, California 91109, USA

Reviews

There are no reviews yet.

Be the first to review “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்”

Your email address will not be published. Required fields are marked *