பதின் பருவ வாழ்வியல்
ஆசிரியர்கள் : முனைவர் பெ.சசிக்குமார், M. ஜோதிமணி
விலை: 110
ISBN: 9788198410238
முனைவர் பெ.சசிக்குமார் ஒரு விஞ்ஞானி. தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல் பல எழுதி வருபவர். சசிக்குமார் நூல்களை
ஆங்கிலத்தில் தருபவர் அவர் துணைவியார் M.ஜோதிமணி. இருவரும் அறிவியல் பார்வையும் வளரும் குழந்தைகள் மீது அளவற்ற
அன்பும் கொண்டவர்கள். இருவரும் இணைந்து எழுதிய நூல் – பதின் பருவ வாழ்வியல். “பல அறிவியல் நூல்களைத் தொடர்ந்து
எழுதினாலும் இடையிடையே மாணவர்களையும் சந்தித்துப் பேசுகிறேன்” என்கிறார் சசிக்குமார். புத்தகங்களின் பாதை வெறும்
கற்பனை வெளியில் உருவாகவில்லை என்பதை உணர்த்தும் வரி இது. அது சரி! பதின் பருவத்தினர்க்காக நூல் எழுதியது ஏன்?
ஜோதிமணி விடை தருகிறார். “பதின் பருவம் என்பது கட்டடத்தின் அடித்தளம்” என்கிறார் ஜோதிமணி. நூலுக்குள் நுழையும்
முன்பே நூல் பற்றிய தெளிவை இருவரும் தருகிறார்கள்…
பிரமிக்க வைப்பது முக்கியம் அல்ல; மனதோடு பேசுவது முக்கியம். புத்தகம் பேசுகிறது. ஆறுதலாகத் தோளைத்
தொடுகிறது. குறிப்பாக ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளின் இளைத்த தோள்களை! “ நினைத்தது நடக்காமல் போவது
சாதாரணம். ஆனால் தொடர்ந்து ஏன் இப்படி ஆனது என்று அலசி ஆராயும் பொழுது, இன்று இல்லை என்றாலும் ஒரு நாள்
நினைத்தபடி பேசவும் தேர்வு எழுதவும் இயலும்.” இது தோளைத் தொடும் வரி. ஓர் ஆலோசனையும் இருக்கிறது. எதையும் விதி
என்று ஏற்காமல் தோல்விக்கான காரணத்தை ‘அலசி ஆராய்வது’ அவசியம்.
வளர் பருவத்தில் உடலில் மட்டுமா மாற்றங்கள்? மனதில் பல மாற்றங்கள்; சிந்தனைகள்! “அதுவரை யார் கூறினாலும்
ஏற்றுக் கொள்ளும் மூளை சற்று மாற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும்” வயதும் வளர்ச்சியும் உண்டாகின்றன. “ எனக்கென்று தனியாக
அடையாளம் வேண்டும் “ என்று தேடும் வயது. குழந்தைகள் வளரும்போது பெற்றோரும் வளர வேண்டும். அப்போதுதான்
குழந்தைகளையும் அவர்களின் மனமாற்றங்களையும் பெற்றோரால் புரிந்து கொள்ள முடியும்.
வகுப்பறையில் ஒடுங்கிக் கிடப்போரும் பொருத்தமான பொறுப்பு கிடைக்கும்போது மின்னிப் பிரகாசிப்பதை
அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். பொருத்தமான பொறுப்பு என்பது முக்கியம். “அவர்களுக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது
பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்வார்கள்” என்கிறது புத்தகம். அருமை! “ தினசரி பொறுப்புகளை ஏற்பதன் மூலம் வாழ்க்கைக்
கல்வி அனுபவத்தைப் பெறமுடியும்” என்றும் புத்தகம் உறுதிபடக் கூறுகிறது. தினசரிப் பொறுப்பு பெண் ஆண் பேதத்தை
உடைக்கிறது. உதாரணம்- சமையல் பொறுப்பு. அருமையாகச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்: “சமையலைக் கற்றுக் கொள்வது,
பதின் பருவக் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அது பெண்குழந்தையாக இருந்தாலும், ஆண் குழந்தையாக
இருந்தாலும் சமையல் கற்றுக் கொள்வதில் பாகுபாடு இருக்கக் கூடாது”.
பதின் பருவக் குழந்தைகளிடம் பொறுப்பைக் கொடுப்பது மட்டும் போதாது. கொடுத்துவிட்டுப் பெற்றோர்
பொறுமையாக இருக்க வேண்டும். புலம்புவதோ பதறுவதோ ஒரு போதும் தீர்வு அல்ல. பொறுமையுடன் காத்திருப்பது பல
நேரங்களில் தீர்வு. “அவர்களைக் கடிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாகப் பொறுமையாக அழைத்து இதை இன்று நீ
கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் செய்வதைப் பார் என்று கூறுங்கள்” என்று வழிகாட்டுகிறது புத்தகம்.
பொறுப்புகளை எடுப்பவர்கள் முடிவுகள் எடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பதின் பருவ வாழ்வில் முக்கியமான
தருணம் இது. தவறுகளுக்குப் பயந்து பலர் முடிவெடுப்பதில்லை. முடிவெடுக்க ஊக்குவிக்கிறது புத்தகம். பின்வரும் வரிகள்
அற்புதமானவை. “தவறான முடிவுகளை எடுப்பதில் தவறில்லை. ஆனால், முடிவுகளை எடுக்கத் தெரியாமல் காலம் தாழ்த்திக்
கொண்டே இருப்பது மிகப் பெரிய தவறு. முதலில் முடிவுகள் எடுக்கப் பழக்குங்கள். காலப்போக்கில் சரியான முடிவுகளை எப்படி
எடுப்பது என்று புரிய வரும்.
புத்தகம் முன்வைக்கும் மூன்று முக்கியமான யோசனைகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:
* பள்ளிக் கல்வியையும் வாழ்க்கைக் கல்வியையும் ஒரு சேரக் கொண்டு செல்வது மிக மிக முக்கியம்.
* ( வெற்றியை விட) தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைக் கற்றுத் தரும். வெற்றி பெற்றவன் வெற்றி பெற்று
விட்டேன் என்ற சந்தோசத்தில் மட்டும்தான் இருப்பான். தோல்வி அடைந்தவன் நான் ஏன் தோல்வி அடைந்தேன் என்ற
காரணத்தை அறிந்து கற்றுக் கொள்வான்.
* பதின் பருவத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தவர்கள் வாழ்வின் மிகப் பெரிய எல்லைகளை
அடைந்துள்ளார்கள்.
நவீனத்துவம் குறித்த பரிந்துரை, அன்பு கொண்ட எளிய யோசனைகள் – இரண்டும் இப்புத்தகத்தின் கண்கள். கண்கள்
ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கின்றன.
உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட இப் புத்தகம் வீடுகளுக்குள்ளும் வகுப்பறைகளுக்குள்ளும் அவசியம்
போகவேண்டிய புத்தகம்.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
ச.மாடசாமி
Reviews
There are no reviews yet.