புவிக்கு மிக அருகில் உள்ள வான் பொருள் நிலா, இது புவிக்கு துணைக்கோளாக விளங்குகிறது. நிலா, கவிதைகள் மற்றும் கதைகள் பலவற்றில் தனக்கென இடத்தைப் பிடித்தது மட்டுமில்லாமல், “நிலா நிலா ஓடி வா என குழந்தைகளுக்கு  குதூகலம் ஊட்டும் சொல்லாகவும் இருக்கிறது. ஆதிகால மனிதன் புவி சூரியனை சுற்றி வருவதால் தான் பருவ காலங்கள் மாறுகிறது என்பது அறியாமல், புவியில் இருந்து பார்க்கும் பொழுது நிலவின் பிரதிபலிப்பு  மாறுபடுவதை வைத்து நாள்காட்டிகள் அமைத்தான். திருவிழாக்களும், விசேஷ நிகழ்வுகளும், அமாவாசை பௌர்ணமியை ஒப்பிடாகக் கொண்டு உருவாக்கப்பட்டன.

 

பின்னர் நீண்ட புரிதலுக்குப் பிறகு சூரிய நாட்காட்டி தான் பருவ காலங்களைக் கண்டறிய உதவும் என்று சூரிய நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. இருந்த போதும் இன்றும் நாம் தீபாவளி போன்ற பல நிகழ்வுகளை நிலவின் அடிப்படையில் கொண்டாடுகிறோம்.

 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, விண்ணை யார் வெற்றிக் கொள்வது என்ற போட்டி வந்த பொழுது, அந்தப் போட்டியின் உச்சபட்ச இலக்காக நிலவில் யார் கால் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா அதில் வெற்றியடைந்து ஆறு முறை தனது 12 விண்வெளி மனிதர்களை நிலவில் தரை இறக்கியது. எண்ணற்ற மாதிரிகள் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்டன. அவற்றில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் நிலவு உருவாகியதை குறித்த புரிதல் பன்மடங்கு உயர்ந்தது. நிலவு புவிக்கு அருகில் இருந்தாலும், 4 லட்சம் கிலோமீட்டர் என்பது சற்று தூரம் தான். நிலவு பயணத்திற்கு அதிகச் செலவும் தேவைப்பட்டது. அதனால் இடையில் சிறிது காலம் நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் சற்றுச் சுணக்கம் ஏற்பட்டது.

 

மனிதர்கள் சென்று மாதிரிகளைக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ததோடு, நிலவு ஆராய்ச்சி அடுத்த 40 வருடங்களாகப் பெரிதாக ஒன்றும் செய்யப்படவில்லை. செவ்வாய் கிரகம் போன்ற அடுத்தக் கிரகங்களுக்குச் சென்றுவிடலாம் என்ற மனிதனின் கற்பனையும், கடந்த 80 வருடங்களாக அதே இடத்தில் தான் இருக்கிறது. அந்தக் கற்பனையை நனவாக்க வேண்டும் என்றால், நிலவு கை கொடுத்தால் தான் முடியும் என்று இன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

அதனால் இரண்டாம் நிலவு பயணம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நாடுகள் மட்டும் தான் விண்வெளியில் கோலோச்சினர். இன்று பத்துக்கும் மேற்பட்ட நாடுகளும், பல தனியார் நிறுவனங்களும் இந்தத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளன.

 

இந்த நிலையில், நிலவு குறித்த முழுமையான புரிதல் அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நிலவு உருவாகிய வரலாறு, எப்படிப் புவியுடன் ஒத்திசைவில் இருக்கிறது என்ற விளக்கத்துடன் புத்தகம் தொடங்கும். அமாவாசை, பௌர்ணமி எப்படி நடைபெறுகின்றன, நிலவைப் போல் எத்தனை துணைக்கோள்கள் மற்ற கோள்களுக்கு இருக்கின்றன என்ற செய்தியையும் காணலாம்.

 

இரண்டாம் நிலவு பயணத்தில் என்ன குறிக்கோள் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிக்கோளை அடைய எந்த விதமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. எந்தெந்த ஆராய்ச்சிகள் இது வரை செய்யப்பட்டுள்ளது போன்றவையும் விளக்கப்பட்டுள்ளது. 

 

இரண்டாம் நிலவு பயணம் குறித்த எனது அனைத்து சந்தேகங்களுக்கும் நான் கண்டறிந்த விடைகளாக, சில இடங்களில் கேள்வி பதிலாகப் புத்தகம் விரிவடையும்.

 

நிலவைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்வதோடு, அதில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், வேறு கோள்களுக்குச் செல்வதற்கு நிலவு எப்படி நமக்கு உதவப் போகிறது என்ற அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்தப் புத்தகம் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிலவு எனும் கனவு”

Your email address will not be published. Required fields are marked *