சுட்டிக் குழந்தைகள் நமது வீட்டில் வளரும் போதுதான் நாம் எப்படி வளர்ந்து இருப்போம் என்ற எண்ணம் நமக்குள் உதிக்கிறது. நமக்குத் தெரிந்த செய்திகள் எப்படி நமக்குத் தெரிய வந்தது, யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பெரும்பாலும் மறந்து போயிருக்கும். புதிதாக அதைப் பார்க்கும் குழந்தை அது என்ன? என்ன அவர் கூறினார்? நீங்கள் இப்போது என்ன கூறினீர்கள் எனக்குப் புரியவில்லை. அங்கே எழுதி இருப்பது என்ன என்று கேள்விகளை எழுப்பும்போது தான் அடடா இதை நான் இத்தனை நாள் பார்க்காமல் விட்டு விட்டேனே என்று கைபேசியில் உள்ள கூகுள் புத்திசாலியை கேட்கிறோம்.
எல்லாக் குழந்தைகளும் இப்படிக் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதில்லை. கேள்வி கேட்க பெரும்பாலான குழந்தைகள் பயப்படுகிறார்கள் அல்லது சங்கோஜப் படுகிறார்கள். அதைவிட அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்குத் தேவையானவற்றைக் கூறுவதற்குப் பெரும்பாலான பெற்றோர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட மனது இல்லை என்றே கூறலாம். கைப்பேசியில் தட்டினால் எல்லாம் வீட்டுக்கே வந்து விடுகின்றன. கடையில் சென்று ஒப்பிட்டு வாங்கும் பழக்கம் இன்றைய தலைமுறைக்குக் குறைந்துகொண்டே வருகிறது.
பாடத்தில் படிக்கும் அறிவியலையும் கணிதத்தையும் கூட அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் நிலை வெகுவாகக் குறைந்துள்ளது. எனக்கு யாரும் கூறுவதில்லை, ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது என்று பல காலமாக எனக்குச் சந்தேகம் இருக்கிறது என்று கூறும் எண்ணற்ற குழந்தைகளுக்காக எங்கள் வீட்டு சுட்டிப்பையன் எழுப்பிய கேள்விகளையும் நான் பல சுட்டிப் பையன்களிடம் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலை இந்தப் புத்தகத்தில் எழுத விழைகிறேன். அன்றாட வாழ்வில் நம்மைக் கடந்து செல்லும் பொருட்களும் கணக்குகளும் என்ன சொல்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு சிறிய முயற்சி.
குழந்தைகளோடு எப்பொழுதும் தொடர்பில் இருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்தப் புத்தகத்தை அதன் அறிவியல் வெளியீடாக வெளியிடுவது மேலும் ஒரு சிறப்பு என்று கருதுகிறேன். குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய கேள்விகள் என்று எழுதி இருந்தாலும் உண்மையில் வளர்ந்த பிள்ளைகளாகிய நம்மைப் போன்ற பலருக்கும் இதில் கூறியுள்ள செய்திகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர், தினமணி நடுப்பக்கக் கட்டுரையாளர். –
உலக அளவில் உயர்ந்து நிற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் முனைவர் பெ.சசிக்குமார் அவர்கள் தம் பணிகளுக்கிடையில் சிறிது நேரம் ஒதுக்கி வளரிளம் பருவக் குழந்தைகளுக்காக ஓர் அழகிய அறிவியல் விளக்க நூலை உருவாக்கியுள்ளார்.
நூலின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது. சொல்ல வந்த செய்திகளைத் தொகுத்துக் கட்டுரைகளாய் எழுதும் வடிவத்தை மாற்றி, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உரையாடல், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான உரையாடல் போன்ற அமைப்பில், வினா விடை வடிவில் நூலை அமைத்துள்ளார். இதனால் இந்த நூலை வாசிக்கும் எந்தக் குழந்தைக்கும் எள்ளளவும் சோர்வு எற்படாது. மேலும் அந்தக் குழந்தைக்குத் தன் அப்பாவிடம், தன் தாத்தாவிடம் உரையாடி மகிழும் உணர்வு ஏற்படும்.
நூலாசிரியர் தன் இளமைப் பருவத்தில் கேட்க நினைத்த அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு, இப்போது தாமே பெரிதும் முயன்று விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை அலசி ஆராய்ந்து, ‘யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக’ என்னும் பரந்த நோக்கில் ஒரு நூலாக ஆக்கித் தந்துள்ளார்.
குழந்தைகள் மட்டுமல்ல, மற்றவர்களும் இந்நூலை வாசிக்க நேர்ந்தால். “அடடா இந்தச் செய்தி இதுவரை நமக்குத் தெரியாமல் போயிற்றே!” என்னும் வியப்பு நிச்சயம் ஏற்படும்.
உண்ணும் உணவு நன்கு செரித்து, அதில் உள்ள சத்துகள் உடலின் செயலாற்றும் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதுபோல் படிக்கும் அறிவியல் படிப்பு அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டு, அதனால் மக்கள் பயனுற வாழ வேண்டும். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைக்கீழாய் உள்ளது. கிராமத்தில் வசிக்கும் விவசாயிக்குத் தெரிகின்ற அடிப்படைச் செய்திகூட ஒரு தாவரவியல் பட்டதாரிக்குத் தெரிவதில்லை. இந்தப் போக்கு மாற வேண்டும் எனக் கருதிய நூலாசிரியர் ஒரு குழந்தை பள்ளி இறுதி வகுப்பை முடிக்குமுன் கட்டாயம் தெரிந்து, புரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படையான அறிவியல் செய்திகளைத் தொகுத்து அவற்றுக்குத் தெளிவான விளக்கத்தை இந்நூலில் தந்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, ‘மின்சாரத்தின் அளவு’ என்னும் தலைப்பில் மின் ஆற்றல் என்றால் என்ன, ஒரு யூனிட் மின்சாரம் என்றால் என்ன, எல்.இ.டி மின் சாதனங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் போன்ற வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம் மிக எளிமையாக ஒரு முறை படித்தாலே புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தாம் கற்றதை இப்படி எளிதாக மற்றவருக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் ஆற்றல் சிலருக்கே வாய்க்கும். அந்தச் சிலருள் ஒருவர் இந்நூலாசிரியர் முனைவர் பெ.சசிக்குமார்.
நாற்பது ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் உடைய ஆசிரியர் என்ற முறையில் இந்த நூலின் சிறப்புகளை நன்றாக உணர்ந்துகொண்டு, இந்த நூலாசிரியரை நான் உளமாரப் பாராட்டுகிறேன். இந்நூலைத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பது என் ஆசை.
இந்த அரிய அறிவியல் பொது அறிவு நூலை, தாய்மொழியாம் தமிழில் அமைந்த ஒரு நல்ல நூலை வெளியிடும் பரிதி பதிப்பகத்தாரைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
இது போன்ற பல நூல்களை இந்நூலாசிரியர் எதிர்காலத்திலும் எழுதி அறிவியல் தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
தேசிய விருதாளர், தினமணி நடுப்பக்கக் கட்டுரையாளர்.
முனைவர் அச் சந்தானகிருஷ்ணன் மேனாள் முதல்வர், ஆசிரியர் கல்வியியல் கல்லூரி ஜோலார்பேட்டை –
புத்தகம் எழுதுவது என்பது மிகவும் எளிமையானது. ஆனால் நல்ல புத்தகம் எழுதுவது என்பது சற்று கடினமானது. மேலும் உள்ளத்தில் நின்று என்றும் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல் என்பதில் ஐயமே இல்லை.
முனைவர் பெ.சசிக்குமார் அவர்கள், “நில் கவனி அறிந்துகொள்” என்னும் இந்நூல் எழுதும் முன்பாகவே, “விண்வெளி மனிதர்கள்”, “வானவாசிகள்” போன்ற ஆறு அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
இந்நூலில் 15 அத்தியாயங்களில் அறிவியல் மற்றும் பொது அறிவு செய்திகள் அடங்கிய ஆகச்சிறந்த கருத்துக்களைத் தந்தை மகன், தாத்தா பேரன் போன்ற உறவுகளுக்கு இடையே நடக்கும் உரையாடலின் வாயிலாக, அறிவியல் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனுறும் வகையில் எழுதியுள்ளார். இத்தகைய அறிவியல் மற்றும் பொது அறிவுச் செய்திகளைக் கூறுவதற்கு இவர் மிகவும் தகுதியானவர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது இப்புத்தகம். ஆசிரியர் முனைவர் பெ.சசிக்குமார் அவர்கள் சிறந்த அறிவியலாளர் என்பது இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் போதே நமக்குத் தெள்ளென விளங்குகிறது.
ஒரு யூனிட் என்று மின்சாரப் பயன்பாட்டில் கூறுவது என்ன? என்பது பற்றிய விளக்கம், ஒரு கிலோவாட் சூரிய தகடு மூன்றிலிருந்து ஐந்து யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்ற விவரமும், தண்ணீரை அளக்கும் முறைகளில் ஒரு டிஎம்சி என்பது எத்தனை லிட்டர், மொத்தம் பொழியும் மழையில் எத்தனை விழுக்காடு சேமிக்கப்படுகிறது போன்ற அரிய செய்திகளைக் கூறும் முறையும், பற்சக்கரங்கள் உள்ள மிதிவண்டி பற்றிய விளக்க உரையும், எழுதுகோல் பற்றிய செய்தியில் 0.5,0.7 மற்றும் 1.0 போன்ற எண்கள் வெளிப்படுத்தும் செய்தி ஆகியவை அனைத்தும் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அரிய கருத்துக்கள்.
பால்பாயிண்ட் பேனா மற்றும் மை நிரப்பும் பேனா ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டினை கூறும்போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. காகிதம் பற்றிக் கூறும் போது, காகிதம் மறுசுழற்சிக்கு ஆட்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற செய்தியும், உடலின் எடை குறைய வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் உணவைக் குறைத்துப் பழங்கள் சாப்பிட வேண்டும் என ஏன் அறிவுரை கூறுகிறார்கள் என்ற விளக்கமும், காலணிகளின் அளவீடுகள் எவ்வாறு நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றன என்ற செய்தியும். காலணிகளுக்கான அளவை உருவாக்கியவர் இங்கிலாந்து மன்னர் என்ற விவரமும் வியப்படையச் செய்கிறது.
காற்றாலை மின்சாரம் பற்றிய செய்திகள், சத்தம் தரும் தொல்லைகள், டெசிபல் என்ற சொல்லின் வரலாறு போன்ற செய்திகள் எல்லாம் நூல் ஆசிரியர் தமது ஆசிரியர் உரை என்னும் தலைப்பில் கூறியுள்ளபடி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியவை என்று எழுதி இருந்தாலும், உண்மையில் வளர்ந்த நம்மைப்போன்ற அனைவருக்கும் இதில் கூறியுள்ள செய்திகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவரது ஆற்றலை அறுவடை செய்து கொள்ள எனது மாணவன் இளம்பரிதி முன்வந்து பரிதி பதிப்பகம் மூலம் இந்நூலை வெளியிடுவது மிகவும் பயனுள்ள செயலாகும். நூலாசிரியர் முனைவர் சசிக்குமார் அவர்கள் மேலும் பல நூல்களை எழுதி அனைவரும் பயனடைய செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வளர்க அன்புடன்
முனைவர் அச் சந்தானகிருஷ்ணன்
மேனாள் முதல்வர், ஆசிரியர் கல்வியியல் கல்லூரி
ஜோலார்பேட்டை
கி.பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர், சென்னை –
நில் கவனி…. அறிந்து கொள் ⚙️💡
பரிதி பதிப்பகம்
ஆசிரியர்: முனைவர் பெ.சசிகுமார்
நான் சமீபத்தில் படித்த நில் கவனி அறிந்து கொள் என்ற புத்தகம் பற்றி நமது AVID READERS வாட்ஸ்அப் குழுவில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு விஷயங்கள் மற்றும் அவற்றின் அளவீடுகள் பற்றி அறிமுகம் செய்கிறது இந்நூல். குறிப்பாக துறு துறு வென கேள்விகள் கேட்கும் நம் வீட்டு சிறுவர்களுக்கு கூகுளைத் தேடாமல் பதிலளிக்க உதவும் இந்நூல். சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும், ஓ, இதுதானா என்று புதிதாக அறிந்து கொள்ளவும், முன்பே தெரிந்த விஷயங்களில் கூட கவனமின்றி கடந்து செல்கையில் அவற்றில் நம்மை மீண்டும் அக்கறை கொள்ளவும் உதவும் இந்நூல். உதாரணமாக மின்சார சேமிப்புகள் மற்றும் சிக்கனம் குறித்து அனைவருக்கும் விருப்பமிருப்பினும் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல், இவற்றையெல்லாம் யார் கணக்கிட்டுக் கொண்டிருப்பது எனும் சோம்பல் தான். ‘மின்சாரத்தின் அளவு’ என்ற அத்தியாயத்தில் மின்சாரத்தின் பல அளவீடுகள் மட்டுமின்றி வெவ்வேறான மின்விளக்குகள்(LED,CFL…) வெளியிடும் வெளிச்சத்தின் அளவுகளின் ஒப்பீடு, பல வீட்டு உபயோக பொருட்களின் தோராயமான மின் அளவு ஆகியவை இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. சூரியத் தகடுகளை வீட்டில் அமைத்து எவ்வளவு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் போன்ற தகவல்கள் சிறுவர்களை விட பெரியவர்களுக்கே அதிகம் பயன்படும். நீரின்(நீர்ம) அளவீடுகள் எத்தனை விதம்? நவீன மிதிவண்டியின் வளர்ச்சி, எழுதுகோலின் நுட்பங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது இந்நூல். உணவுப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மட்டுமின்றி நாம் உண்ணும் உணவு மற்றும் ஆற்றல் அளவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அத்தியாயம் சிறப்பு.
காலணி மற்றும் தைக்கப்பட்ட ஆடைகள் வாங்கும்போது “அளவுகளில்” ஏற்படக்கூடிய குழப்பங்களை விளக்குகிறது அடுத்த அத்தியாயம். சூரிய ஆற்றலுக்கும் காற்றுக்கும் உள்ள தொடர்புகளை விவரிக்கிறது மட்டுமின்றி இவை பறவைகள் முதல் மனிதர்கள் வரை எவ்வாறு உதவுகிறது, காற்றாலை மின் உற்பத்தி பற்றிய கூடுதல் தகவல்கள் சிறப்பானவை.
செயல்திறன் குறித்து 11-வது அத்தியாயம் மிகவும் முக்கியமானது. இயந்திரங்கள் செயல்திறன் மட்டுமின்றி நாம் உண்ணும் உணவு தொடங்கி, நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் செயல்திறன் அதிகரிப்பின் அவசியம் உணர்த்தப்படுகிறது.
பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல செயல்பாடுகள் விலங்கு, மனிதன், பறவை ஒப்பீடுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, கரும்பு ஆகிய அதிக நீர்த்தேவை தாவரங்களை வேறுபல உணவுப்பயிர்களின் தண்ணீர் தேவையுடன் ஒப்பிடுகிறார் ஆசிரியர். நீராவி போக்கிற்கு ஏற்ற இலை அமைப்புகளும், காகித தயாரிப்பு, காகித மறுசுழற்சி அனைத்தும் விளக்குகிறது இந்நூல். A4, A3 காகித அளவுகள் கேள்விப்பட்டிருப்போம். A0 முதல் A5வரை ஆறு வகை காகித அளவுகள் மற்றும் இயற்கை பராமரிக்க காகிதங்களை கிழித்தோ, எரித்தோ வீணாக்காமல் மறுசுழற்சிக்கு உட்ப்படுத்த வேண்டிய கடமையை உணர்த்துகிறது.
5000 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்கலக் காலம் தொட்டு இரும்புக் காலம், தற்கால துருப்பிடிக்காத உலோகக் கலவைகள் வரை எளிய தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாடப்புத்தகங்களைக் கடந்து இன்றைய மாணவர்கள் அவசியம் அறிய வேண்டிய வாழ்க்கைக் கல்விக்கு வீட்டு புத்தக அலமாரியில் அவசியம் பராமரிக்க வேண்டிய புத்தகம் நில் கவனி அறிந்து கொள். சிறுவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கத் தகுந்த புத்தகம். இஸ்ரோ விஞ்ஞானியாக தனது மிகுந்த பணிகளுக்கிடையே குறுகிய காலத்தில் ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார் ஆசிரியர் முனைவர் பெ.சசிகுமார். மாணவர்களையும் சிறுவர்களையும் இலக்காக வைத்து எதிர்கால அறிவுத் தமிழ்ச் சமூகத்தை உருவாக்க தொடரும் அவரது எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
கி.பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர், சென்னை