அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்திலும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் தான் நமக்கு எல்லாம் தெரியும் என்று ஏனோதானோ என்று இருக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதில் மிகவும் படுசுட்டி. தாங்கள் புதிதாகப் பார்க்கும் ஒவ்வொன்றையும் ஏன்? என்ன? எப்படி? என்று ஆராய்ந்து கேட்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. நாமும் குழந்தைகள் போல் தினமும் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று மேலாண்மை வகுப்புகளில் சொல்லித் தரப்படுகிறது.
இப்படி என்னைச் சுற்றி எங்கள் வீட்டில் இருப்பதை உற்று நோக்கியதால் உருவான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக விடைகாண முயன்ற பொழுது கிடைத்த கட்டுரைகளை இதில் தொகுத்து உள்ளேன். எனது பால்ய பருவத்தில் கைத்தறியில் எவ்வாறு துணி உருவாகிறது என்று எனது அப்பா கற்றுக்கொடுத்ததிலிருந்து, மிதிவண்டி எப்படி வேலை செய்கிறது என்று எனது மகனுக்கு நான் சொல்லிக் கொடுத்த தகவல் எனப் பலவற்றைக் கட்டுரைகளாகத் தொகுத்துள்ளேன்.
இன்றும் பழைய குழம்பு தானா? என்ற கேள்விக்கும், முதன்முதலில் வேலைக்கு வந்த பொழுது சிறிய சமையல் அறையை உருவாக்க தேவையான பொருட்கள் வாங்குவதற்கு அம்மாவுடன் சென்ற கடைவீதி நாட்களையும், ஏன் எனது சமையல் ருசிக்கவில்லை என்ற எனது ஆராய்ச்சிகளுக்கு இந்தக் கட்டுரைகள் மூலம் பதிலை கண்டு உணர்ந்தேன்.
சிறு வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள முயன்றபோது சிறிய சுரக்காய் எப்படிக் காப்பாற்றுகிறது என்பதை எண்ணி ஆச்சரியப்பட்டதையும் அதன் மீது நம்பிக்கை கொள்ளாமல் இன்றுவரை நீச்சல் கற்றுக் கொள்ளாமல் போன எனது அண்ணனையும் நினைவுகூர்ந்து மிதப்பதை பற்றிய கட்டுரை எழுதியுள்ளேன். சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பை கொண்டு முதல் முதலாக இருசக்கர வாகனத்திற்குக் காற்று நிரப்பிய பிறகுதான் அது எவ்வளவு எளிமை என்று புரிந்தது. ஏன் எங்குப் பார்த்தாலும் தாமிரத்தாலான பாத்திரங்கள் என்று கூறுகிறார்கள் என்று வீட்டிலும் ஒரு தாமிர பாத்திரம் வாங்கி வைத்த உடன் அதன் அறிவியலைத் தேட முயற்சித்தேன்.
மாடித்தோட்டம் அமைக்கலாம் என்று விவசாய அலுவலகத்தைத் தேடிச் சென்று பல கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். இத்தனை கேள்விகளைக் கேட்கும் இவருக்குத் திரி நனை விவசாயம் சிறந்ததாக இருக்கும் என்று ஒரு பெண்மணி அந்த அறிவியலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அலுவலகத்தில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தலாமா ? வேண்டாமா? என்ற கலந்துரையாடலுக்குப் பிறகு வீட்டில் காலாவதி என்றால் என்ன என்ற கட்டுரையை எழுதினேன். உடம்பு ஏன் சுட வேண்டுமென்று ஊசி போடும்போது கேட்ட மகனின் கேள்விக்குப் பதிலாக விளைந்தது ஒரு கட்டுரை.இன்று மழை அதிகமாகப் பெய்யுமா? குடை போதுமா? அல்லது மழை கோட் வேண்டுமா? என்ற அடுத்தக் கேள்விக்கு ஒரு கட்டுரை கிடைத்தது. எப்பொழுது அதிவேகமாக ரயிலில் பயணிக்க முடியும் என்ற விவாதத்தில் விளைந்தது மற்றும் ஒரு கட்டுரை.
இப்படி நான் கேட்ட பார்த்த அறிந்த செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு கட்டுரையாக வெளிவர உதவின. இந்தக் கட்டுரைகளை வேறு வேறு தளங்களில் வெளியிட்டு மக்களிடையே சென்றடைய உதவிய அறிவியல் பலகை, கல்கி ஆகியவற்றின் பதிப்பாளருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
புத்தகத்திற்கு நல்லதொரு அணிந்துரை வழங்கிய நண்பர் டாக்டர் கணேஷ் அவர்களுக்கும் கடந்த இரண்டு புத்தகங்களை போல இந்த புத்தகத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் அழகிய வடிவில் வெளியிட உதவிய பாரதி புத்தகாலயம் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிஷா நடராஜன் –
சசிக்குமார் இன்றைய அறிவியல் எழுத்து உலகில் புதிய ஊற்று. நம்பிக்கை தரும் அற்புதமான பதினைந்து கட்டுரைகள் இந்த அறிவியல் தொகுப்பில் உள்ளன. அன்றாட அறிவியலை அதன் நுணுக்கங்களோடு சுவாரசியமாக சொல்கிறார். இன்று அறிவியல் எழுதுவது ஒரு அர்த்தத்தில் மிக மிக சிரமம்.. ஒரு நூல் மேல் நடப்பது போல். சற்றே தப்பினால் வெறும் பாடநூல் ஆகிவிடும். அப்புறமாக வலிக்கினால் வெறும் கூகுள் தகவல் பதிவாகி விடுகிற அபாயம் உண்டு. அதனிடையே ஒரு அதிசய பயணமாக கட்டுரைகளை எழுதிட ஒருவகை படைப்பு சக்தி தேவை. அது சசிகுமாருக்கு கை வர பெற்றமை மகிழ்ச்சி தருகிறது. இந்த நூலில் உள்ள சென்னிமலை ஜக்கார்டு விரிப்புகள் வழியே கணினியின் வரலாறு பேசும் கட்டுரையை நாம் ஒன்பதாவது வகுப்பு பாடத்தில் வைக்க வேண்டும். திரி நனை விவசாயம், மிதிவண்டி அறிவியல், காலாவதி அறிவியல் உடலே ஒரு அடுப்பு என்பன தன் மகன் எழுப்பிய கேள்விகள் வழியே மலர்ந்த கட்டுரைகள் என்கிறார் அருமை. அறிவியல் என்பது ஆய்வகத்தில் இருக்கிறதா பள்ளிப் பாடத்தில் இருக்கிறதா என்றால் அது நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் இருக்கிறது என்பதே உண்மை.
இஸ்ரோ விஞ்ஞானியான சசிக்குமார் ராக்கெட் பற்றி மட்டும் பேசாமல் எல்லா அறிவியலையும் பேசுவது அவரை அபூர்வ நட்சத்திரமாக்குகிறது.
புத்தகம் பேசுகிறது இதழில் ஆயிஷா நடராஜன்
பா.ஸ்ரீகுமார் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவியல் பலகை –
அணிந்துரை
அறிவியல்பலகையின் இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்கும் ஆர்வம்மிக்கப் பலரில், திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றிவரும் இளம் விஞ்ஞானி திரு பெ.சசிக்குமார் குறிப்பிடத்தகுந்தவர். கைத்தறியும் கணிப்பொறியும் என்ற இந்தப் புத்தகத்தில், 15 மிகச் சிறப்பான அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அறிவியல் பலகை மாத இதழில் ஒவ்வொரு பூவாக முகர்ந்த என்னைப் போன்ற பலருக்கு ஒரு பெரிய பூங்கொத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் கொடுத்துள்ளார்.
கைத்தறி துணிகளில், துளையிட்ட அட்டைகளைக் கொண்டு சித்திரம் வரையும் ஜக்காடு என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ஜக்காடு, இவரின் பத்தாண்டு கால முயற்சியில் உருவானதுதான் ஜக்காடு கைத்தறி. அவரது இடைவிடாத முயற்சியும் சிந்தனையும் சித்திரத்தை மட்டுமல்ல சரித்திரத்தை மாற்றும் என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் உணர முடிகிறது. ஜக்காடு துளையிட்ட அட்டை செய்யும் வித்தை, 21 ஆம் நூற்றாண்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் அமைக்க உதவியது என்ற விவரம் ஆச்சரியப்படுத்துகிறது. ஜக்காடு விரிப்புகள் நம் தமிழ்நாட்டில் உள்ள சென்னிமலை நகரம் இன்றும் தயாரித்து வருகிறது என்ற தகவல் பூரிப்பை தருகிறது.
குளிர்சாதனப் பெட்டியில் சாம்பார் வைக்கும் போது அதன் தண்ணீரின் அளவு வைக்கப்படும் பாத்திரத்தையொட்டி சிறிது சிறிதாகக் குறையும் என்பதுடன் சாம்பாரை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் போது கெட்டியாக இருப்பதும் அதைச் சூடுபடுத்தும் போது அதிலுள்ள எண்ணெய், மசாலா பொருட்கள் ஆவியாவதுடன் நீர்ச்சத்தும் குறைவதால் சாம்பார் “சப்”பென்று ஆகி சுவை மாறுகிறது என்ற அறிவியலை அழகாக விளக்கியுள்ளார்.
மிதி வண்டி சக்கரத்தில் உள்ள அழுத்தம் மகிழுந்து சக்கரத்தின் அழுத்தத்தை விட இரண்டு மடங்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியின் பின்னணியில் உள்ள அறிவியலை சுவாரசியமாக விளக்கியுள்ளார். வார்ப்பிரும்பினால் செய்யப்படும் தோசைக்கல் அலுமினிய தோசைகல்லை விட 80 விழுக்காடு கூடுதலாக வெப்ப ஏற்புத்திறன் படைத்தது, ரவா தோசை வீட்டில் சமைப்பதில் உள்ள பிரச்சனையை அறிவியல் பூர்வமாக விளக்கி அடுக்களை அறிவியலை கூறியுள்ளார்.
மிதிவண்டி வீரர்கள் வளைந்த கைப்பிடி யைபிடித்து உடல் வளைந்து ஓட்டும் போது, இவர்கள் நேரே நிமிர்ந்து ஓட்ட கூடாதா? என்ற கேள்வி என் மனதில் எழுந்ததுண்டு, இப்படி ஓட்டுவதன் மூலம் காற்றின் உராய்வு பெருமளவு குறைக்கப் படுகிறது என்ற அறிவியலை சொல்லியிருப்பது சிறப்பு.
உப்பின் வரலாற்றைக் கூறி அது அறுசுவையில் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்கி இருப்பது சிறப்பானது. ஆண்களை விடப் பெண்கள் தண்ணீரில் மிதப்பது, அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் காய்ந்த சுரைக்காய் எப்படி நீரில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்றுகிறது என்ற விவரமும் தருகிறது மனிதனால் மிதக்க முடியுமா? என்ற கட்டுரை.
மாமன்னர் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் எந்தக் கோப்பையில் நீர் குடித்ததால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தண்ணீரும் தாமிரமும் கட்டுரை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. திரிநனை விவசாயம் எப்படித் தண்ணீரை சேமிக்கிறது என்ற உண்மையை விளக்கிய விதம் அருமை.
வாழைப்பழத்தை படுக்க வைக்காமல் காற்றில் தொங்கவிடுவதன் மூலம் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்ற அறிவியல் பின்னணியைப் பின்பற்றினால் இனி நமது வீடுகளில் வாழைப்பழம் விரைவில் கனிந்து போகாது. தங்கத்திற்குக் கேரட்டு, வைரத்திற்குக் காரட்டு என்ற கட்டுரை அருமையானது. கண்ணாடி டம்ப்ளரின் வெப்பம் கடத்தும் திறன் குறைவாக இருப்பதால் எவர்சில்வர் டம்ளரில் வைக்கப்பட்டுள்ள தேநீரை விட மெதுவாகச் சூடு குறைகிறது என்ற விவரம் நமது அன்றாட வாழ்வின் அறிவியலை எடுத்துச் சொல்கிறது.
குடை எடுத்துச் செல்லலாமா ? என்ற எண்ணத்தின் பின்னணியில் நிகழ்தகவு என்ற ஒரு துறையின் முக்கியத்துவத்தை விளக்கி இருப்பதுடன், அது செயற்கை நுண்ணறிவு துறையில் எப்படிப் பரிணாமம் பெற்றுள்ளது என்ற விளக்கம் சிறப்பானது. ஒட்டடையை உருவாக்கும் சிலந்தியின் வலைப் பின்னும் செயலும், சிலந்தியை வைத்து விண்வெளியில் செய்யப்படும் ஆய்வின் அறிவியலையும் நேனோ தொழில்நுட்பம் வரையில் எதிரொளிக்கும் அதன் தாக்கத்தையும் ஒட்டடை கட்டுரையின் வழியே உணர்த்தியுள்ளார்.
எளிய வார்த்தைகள் மற்றும் உதாரணங்களுடன் விஞ்ஞானத்தின் கருத்து விதைகளை விதைத்துச் செல்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின அறிவியல் பார்வையும் நிச்சயம் விரிவாகும்.
இரண்டு கட்டுரைகள் கல்கி இதழில் வெளிவந்து சிறப்புப் பெற்றவை.
இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றிவரும் மற்றொரு விஞ்ஞானி திரு பா.அரவிந்த்துடன் இணைந்து அவர் எழுதியுள்ள முதல் புத்தகமான விண்வெளி மனிதர்கள் என்ற புத்தகம் விண்வெளி குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவசியம் படிக்க வேண்டும். தமிழில் அறிவியலை கொண்டு செல்லும் முயற்சியில் திரு. பெ. சசிக்குமார் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் என்பது உண்மையில் உற்சாகத்தைத் தருகிறது. வானவாசிகள் பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை என்ற அவரின் இரண்டாவது புத்தகம், பறவைகளின் வாழ்வியல் அறிவியலை சுவாரசியமாக எடுத்துக்கூறி படிப்பவர்களின் கவனம் பெற்றுள்ளது. மூன்றாவதாகத் தரமே தாரக மந்திரம் என்ற புத்தகத்தை அறிவியல் வெளியீடுகள் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் அறிவியல் ரீதியாகத் தரத்தை புரிந்துகொள்ள உதவுகிறது.
தொய்வில்லாமல் தொடர்ச்சியாக எழுதிவரும் முயற்சியானது அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் திரு.பெ.சசிக்குமாருக்கு முக்கிய இடத்தைத் தந்துள்ளது. இது போன்ற பல சிறந்த படைப்புகளை அவர் தொடர்ந்து படைக்க வேண்டும் என்று என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ஸ்ரீகுமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அறிவியல் பலகை
S. ஹரிகிருஷ்ணன், முதன்மை லோகோ ஆய்வாளர் இந்தியன் ரயில்வே –
அணிந்துரை
அறிவியல் எழுத்தாளர் முனைவர் திருவாளர். பெ. சசிக்குமார் அவர்களின் அறிவியல் அணுகுமுறை மிக மிக எளிமையானது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கணைகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அறிவியலை மிகச்சாதாரணமாக வெகுநாட்களாக நாம் கடந்து வந்த பல விடயங்களை உணர வைத்திருக்கிறார்.
உதாரணமாக ஜக்காடு அவர்கள் உருவாக்கிய கைத்தறி கணக்கீடு தான் இன்று நம் விரல் நுனியில் கணிப்பொறி. நமக்குக் கணிப்பொறி கிடைத்ததன் பின்னணியை அறியும் பொழுது, நம் புருவம் உயராமல் இருக்காது.
நாம் கண்டுகொள்ளாத இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்று நினைத்துக்கூடப் பார்க்காத சாம்பார் சுவைக்காமல் போவது, குழந்தைகள் உண்ணும் நொறுக்குத் தீணியில் மொறு மொறுப்புக்காக வினையூக்கிகள் பயன்படுத்தப்படுவது பற்றி ஒரு கட்டுரையே வந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை.
இன்னும் பல எளிமையும் ஆச்சரியமும் கலந்த கட்டுரைகளாக
மிதிவண்டி சக்கரத்தில் நாம் கொடுக்கும் அழுத்தம் மகிழுந்தை விட இரண்டு மடங்கு அதிகம்,
தொடர்வண்டி சுரங்க பாதையில் செல்கையில் குறைவான வேகத்தில் செல்வது ஏன்?,
உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு கொள்ளும் மிதிவண்டியின் பொறியியல்,
விதவிதமான உப்பு மற்றும் அதன் தன்மைகள்,
நீச்சல் கற்றுக் கொள்வதில் உதவியாக உள்ள சுரபுருடையின் அறிவியல்,
அலெக்சாண்டரின் தாமிர குவளை கதை,
திரி நனை விவசாயம் கொண்டு எப்படிக் குறைந்த நீரில் விவசாயம் செய்வது,
பொருட்களின் காலாவதியாகும் தேதி பற்றிய கட்டுரை,
தங்கத்தின் கேரட் அளவு பற்றிய ஆச்சரியம் கொள்ளத்தக்க அருமையான வரலாற்றுப் பதிவு,
மருத்துவர்களே சொல்லாத உடலிலுள்ள வெப்பம் குறித்த வியக்கவைக்கும் மருத்துவக்கட்டுரை,
குடை எடுத்துச் செல்லலாமா? என்ற நிகழ்தகவு குறித்த அருமையான கட்டுரை,
வீட்டில் உள்ள ஒட்டடைக்குக் காரணம்,
எதிர்கால அதிவிரைவு வளையப் போக்குவரத்து பற்றிய நவீன கட்டுரை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆகச் சமையல், கைத்தொழில், இயற்பியல், உடற்கல்வி, வேதியியல், கணிதவியலில் நிகழ்தகவு, வீடு பராமரித்தல், அதி விரைவு போக்குவரத்து
என்று தசாவதானி போல் பதினாறுவதாணியாகத் தன்னைச் சுற்றி நடக்கும் வாழ்வியலில் அறிவியல் எவ்வளவு கலந்திருக்கு என்பதை இப்படி யாரும் ஒரே புத்தகத்தில் உணர்த்தியதில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் எந்தத் துறையைச் சார்ந்தவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி இருப்பது மிக மிக அருமை.
ஒருவேளை அறிவியலை பள்ளியில் மதிப்பெண்ணிற்காகக் கற்கும் பொழுது கசப்புணர்வை தந்திருந்தால் அவர்களுக்கெல்லாம் ஒரு மறுமலர்ச்சி புத்தகம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நூல் எனப்படுவது நுவலுங்காலை
முதலும் முடிவும் மாறுகோளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின்று அகன்ற உரையொடு பொருந்திய
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே
– தொல்காப்பியம், செய்யுளியல், நூற்பா 164
அதாவது சொல்லும் கருத்தை முரணின்று நிரல் படத்தொகுத்து பொருளுக்கேற்ற உட்பிரிவுகளையும் வகைப்படுத்தி அவை அனைத்தும் மையக்கருவோடு பொருந்தி தெளிவாக விளக்குவது அதுவே நூல் எனப் போற்றப்படும் என்கிறார் தொல்காப்பியர்.
அவ்வகையில் இந்நூல் அறிவியல் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.
குலனருள் தெய்வங் கொள்ளை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன் அன்னே
-நன்னூல் நூற்பா 26
நூலறிவு மட்டுமன்றி நாட்டு நடப்பும், உலகியல் அறிவும் மிக்கவராக இருத்தல் வேண்டும். கற்றுத் தேர்ந்து தெளிந்து பிறர் புரியும் வகையில் கற்பிக்கும் ஆற்றலை உடையவராய் இருத்தல் வேண்டும். நன்னூல் சொல்லும் அவ்வகையில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் தேர்ந்த இளம் அறிவியல் எழுத்தாளர் முனைவர். பெ.சசிக்குமார் அவர்கள் மேன்மேலும் அரிய அறிவியல் நூல்களைப் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
S. ஹரிகிருஷ்ணன்,
முதன்மை லோகோ ஆய்வாளர் இந்தியன் ரயில்வே