அந்தமானின் அழகுக்குப் பின்னால் உள்ள அறிவியல்’

ஆசிரியர்கள் : முனைவர் பெ.சசிக்குமார், M. ஜோதிமணி

விலை: 170
ISBN: 9788798410252

‘அந்தமானைப் பாருங்கள் அழகு..’ என்ற பிரசித்தி பெற்ற திரைப்படப் பாடல் ஒன்று உண்டு. ‘அந்தமான்’ என்ற
சொல்லைக் கேட்டவுடன் உளவியல் ரீதியாகவே அழகும், ரம்மியமும் நெஞ்சை நிறைக்கும்.
‘அந்தமானின் அழகுக்குப் பின்னால் உள்ள அறிவியல்’, என்ற இந்நூல் அந்தமான் குறித்து மற்றொரு
கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு வழங்குகிறது. இந்நூல் அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் வரலாற்றை
எடுத்துரைக்கிறது. அவ்வரலாற்றினூடே அங்கு அந்தந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகளை
இயம்புகிறது. அந்தமான் சிறைச்சாலையைப் பற்றி ஆதியோடு அந்தமாக அலசுகிறது.
சுண்ணாம்புக் குகை, மண் எரிமலை, பவளப்பாறை போன்றவை குறித்த அறிவியல் அம்சங்களை அப்பட்டமாக
வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் இது ஒரு பயணக் கதை நூல் என்றாலும், ‘ஒரு பயணக் கதை நூல்’ எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கிற நூலாகவும் விளங்குகிறது. வரலாற்றை அறிவியல்
கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், அறிவியலை வரலாற்றுக் கண்கொண்டு பார்ப்பதாகவும் இந்நூல்
விளங்குகிறது.
அந்தமான் தீவுகளைப் பற்றிச் சொல்வதற்கு முன்பே தீவு என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது? என்ற
கேள்விகளை ஆசிரியரே எழுப்பி அவற்றிற்கு விடைகளை அவரே எழுதுவது இவரது பாணி. இந்த மாதிரி
இடங்களில் எல்லாம் இவருக்குள் ஒரு சுற்றுலாப் பயணி என்பதையும் தாண்டி ஒரு அறிவியலாளர்
வெளிப்படுகிறார். ஒரு ஆர்வலர் முன் நிற்கிறார். அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் மட்டும் அடுத்ததைப்
புரிந்து கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தை உணர்ந்தவராகவும் விளங்குகிறார் நூலாசிரியர்.
‘அந்தமானின் கதையை அறிந்து கொள்வதற்கு முன்பாகச் சுதந்திரப் போராட்டத்தில் வியாபாரத்திற்காக வந்த
கிழக்கிந்திய கம்பெனி எப்படிப் பின்னர் நாட்டை ஆண்டது என்ற கதையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’
என்ற பீடிகையைப் போட்டு இந்திய சுதந்திரப் போராட்டத் தோற்றுவயை வரலாறு பூர்வமாக வர்ணித்துச்
சொல்கிறார்.
வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தனித்தன்மை வாய்ந்த
முயற்சியே இப்பயண இலக்கியம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்தர்கள் எந்தெந்த வகைகளில் எல்லாம் அந்தமான்
சிறைச்சாலைக் கொட்டடியில் அடைக்கப்பட்டு அணு அணுவாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறது இந்நூல்.
‘அந்தமான் சிறைச்சாலையின் வரலாறு, அங்கு அநியாயமாக அடைக்கப்பட்டுத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை
செய்யப்பட்ட தேசபக்தர்களின் சோகக்கதை, அங்கு அக்கிரமங்களின் எல்லைக்கே சென்று அராஜகம் செய்த
வெள்ளை அதிகாரிகளின் வெறித்தனம், மனித உரிமைகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்த கொடூரர்களின்
ஆட்சி முறை உள்ளிட்ட முக்கிய வரலாற்றுக் கண்ணீர்ப் பக்கங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
அந்தமான் சிறையில் தேச பக்தர்களின் கைகளும் கால்களும் எவ்வாறெல்லாம் விலங்கிடப்பட்டன… ஆண்டுக்
கணக்கில் தனிமை சிறையில் ஒழுங்கான உணவும்- ஒதுக்குப்புறமும்-வெளிச்சமும் காற்றும் இல்லாமல் ஒவ்வொரு
நாளும் எப்படியெல்லாம் செத்துச் செத்துப் பிழைத்தார்கள் என்று இந்நூலின் பல பக்கங்கள் எடுத்தியம்புகின்றன.
கல்நெஞ்சர்கள் மட்டும்தான், இதில் வரும் இத்தகைய வரலாற்றுச் செய்திகளை ஒரு கதை கேட்பது போல்
கேட்பார்கள். மேம்போக்காகப் பார்ப்பவர்கள் மட்டும்தான் கண் கலங்காமல் அத்தகைய பக்கங்களைப் படிக்க
முடியும்.

அந்தப் பக்கங்களைப் படிக்கிற பொழுது, நமக்கும் தெரியாமல் இரத்தம் சூடாகிறது. அந்தந்தப் பகுதிகளுக்கான
ஆதாரமாகப் போடப்பட்டுள்ள படங்கள் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. ‘கசையடி’ என்ற பெயரில் அந்தத் தியாகச்
செம்மல்கள் கட்டி வைக்கப்பட்டுச் சவுக்கால் அடிக்கப்படும் மாதிரி ஒன்று அங்குச் சிலை போல் வடிக்கப்பட்டுக்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரிச் சிலையைப் படம் எடுத்து பக்கங்களின் இடையே இடம்பெற
வைத்துள்ளார் நூலாசிரியர்.
விடுதலை வீரர்களுக்கு விதவிதமாக வழங்கப்பட்ட தண்டனை முறைகளைத் தனித் தலைப்பிட்டு எழுதியுள்ளார்.
இந்நூலின் அகலம் அறிவியலாக இருந்தாலும் திலகம் அந்தமான் சிறை அத்தியாயம் தான்.
வரலாற்று உண்மைகளையும், அறிவியல் அம்சங்களையும், இணைத்தும் கோர்த்தும் பிணைத்தும் குழைத்தும்
கொடுத்திருக்கிற இந்நூல் நிச்சயம் இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் வாசிக்கத்தக்கது, படிக்க
வேண்டியது.

“அந்தமான் அழகிற்குப் பின்னால் உள்ள அறிவியல்” என்ற இந்த நூல், அந்தமானை பற்றிப் பேசும் ஒரு சாதாரண
நூல் மட்டுமல்ல மிகச்சரியான வரலாற்றுப் பதிவாகும்.
இந்நூல் சுற்றுலா விவரங்களுடன் மற்ற பல நுணுக்கமான பதிவுகளையும் கொண்டுள்ளது. செல்லுலார் சிறையின்
கதை, அந்தமான் மக்களின் வாழ்வியல், சுற்றுலாத் தலங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் போன்ற
அறியப்படாத பல தகவல்கள் நிறைந்துள்ளது.
இந்நூலில் அனைத்து தீவுகளைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் எரிமலை பற்றிய ஆராய்ச்சி நுணுக்கமான புள்ளி
விவரங்கள், இயற்கை சீற்றங்களின் வெளிப்பாடுகள் போன்ற அனைத்து தரவுகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
சிறைச்சாலையின் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் அங்குச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பட்ட கொடுமைகள்
அனைத்தும் இந்நூலில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றுப் பதிவுகளில் வருடங்கள், குற்றங்கள்,
தண்டனைகள் பற்றித் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெருநகரவாசிகளுக்கு, அந்தமான் ஒரு அழகான அமைதியான
சுற்றுலாத்தலமாகும். இங்குத் திருட்டு பயமில்லை. பிச்சைக்காரர்கள் மிக மிகக் குறைவு. அமைதியான கடல்,
ஆர்ப்பாட்டம் இல்லாத கடற்கரைகள், நேர்த்தியான தங்கும் விடுதிகள், சிறந்த வாகன போக்குவரத்து. இங்கிருந்து
2:30 மணி நேரத்தில் நவீன வசதி கொண்ட படகில் பயணம் செய்தால் ஹேவ்லாக் தீவு மற்றும் நீல் தீவுகளுக்குப்
பயணம் செய்யலாம்.
அங்குச் சிறப்புமிக்க வெள்ளி மணல் கடற்கரைகளைக் காணலாம். அமைதியாக இளைப்பாறுவதற்கு இந்தத் தீவுகள்
மிகவும் பிரசித்தி பெற்றவை. பல ரம்யமான தீவுகளைக் அந்தமான் கொண்டுள்ளது. போர்ட் பிளேயரில் இருந்து
சாலை வழியாகப் பாராட்டங் தீவு, சுண்ணாம்பு பாறை குகை ஆகிய அதிசயங்களைக் காண முடியும் .இந்தப்
பயணத்தில் ஆதி பழங்குடி மக்கள், மற்றும் அலையாத்தி காடுகளைக் காண இயலும். ஒரு முறை சென்று வந்தால்
மறுமுறை வரத் தூண்டும் அழகிய பகுதிகள் இவை. இவை அனைத்தையும் கற்பனை செய்து காணும் வகையில்
இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தில் நாம் காணும் ஒவ்வொரு அதிசயங்களும் எப்படி நிகழ்கின்றன? ஏன் இந்த அதிசயங்கள் இங்கு
மட்டும் இருக்கின்றன? என்ற அறிவியலையும் இந்தப் புத்தகம் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த நூல் அந்தமானை
பற்றிய சிறப்பான ஒரு பதிவு. அழகான சுற்றுலா அனுபவத்தோடு உள்ள அறிவியலை ஆய்ந்து, தரமான தகவல்கள்,
காலத்தால் அழியாத அற்புதமான காவியமாக இந்த நூலை அமைத்துள்ளார். சுற்றுலா வருபவர்கள் இந்த நூலை
ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டுத் தங்கள் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வித்தியாசமான அனுபவத்தைப்
பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்தமானின் அழகுக்குப் பின்னால் உள்ள அறிவியல்’”

Your email address will not be published. Required fields are marked *