இன்று நமது புவியைப் பற்றிப் பார்க்க போகிறோம். புவி சூரியனை மூன்றாவதாகச் சுற்றிவரும் ஒரு கோளாகும். நமது சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்கள் இருக்கின்றன ( 2006 ஆம் வருடத்திற்கு முன்பு படித்து இருந்தீர்கள் என்றால் ஒன்பது கோள்கள்). இப்படித்தான் நாம் பலரும் மொத்த சூரிய குடும்பத்தை நமது அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். நானும் பல காலம் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் இல்லாமல் கோடிக்கணக்கான வேறு வேறு பெயர்களை உடைய பிரபஞ்சப் பொருட்கள் வலம் வருகின்றன. இந்தச் செய்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு பாடப் புத்தகத்திற்கு அப்பால் உள்ள புத்தகங்களைப் படிக்கும்போது தான் எனக்குத் தெரியவந்தது. பால்வெளி மண்டலம், அண்டம் பேரண்டம் என்பவையும் நமது பாடத்திட்டத்தில் இருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி அவ்வளவாக அறிந்துகொள்ள நாம் ஆசைப்படுவதில்லை.
எனக்குச் செவ்வாய் தோஷம், சனி பிடித்திருக்கிறார், எப்போது மாறுவார். என்று ஒவ்வொரு நபராக ஏறி இறங்கும் லட்சக் கணக்கான மக்களில் வெகுசிலர் ஆகிலும் பிரபஞ்சம் உருவான வரலாற்றையும் கோள்கள் நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்று புரிந்து கொண்டிருந்தால் அறிவியல் இன்னும் மேம்பட்டு இருக்கும்.
திடமான மனது இல்லாதவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் சிறிய சிறிய செயல்களால் பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பாதிப்பை சரி செய்வதற்காக மற்றவர்கள் கூறுவதை முழுமனதாக நம்பத் தொடங்குகிறார்கள். பிரபஞ்சத்தில் எங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கும் விண்மீன் நாளை நமக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் என்று நம்பத் தொடங்குகிறார்கள். உங்கள் மனது பலவீனமாக இருக்கும் பொழுது நீங்கள் சந்திக்க வேண்டியது ஜோதிடரை அல்ல. மருத்துவரை அணுகி, நல்ல உணவு உண்டு, ஓய்வெடுக்க வேண்டும். உனக்கு நேரம் சரியில்லை, அவரைப் பார்த்து விட்டு வரலாம் என்று உங்கள் நண்பர்கள் யாராவது உங்களிடம் கூறினால் நீங்கள் உங்கள் நண்பரை நல்ல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறியது வேறு யாருமில்லை சுவாமி விவேகானந்தர்.
நான் எங்கிருந்து வந்தேன், எங்கே செல்ல போகிறேன் என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும். விண்மீன்களின் வாழ்க்கை மனிதனின் வாழ்க்கையைப் போல் எப்படி இருக்கிறது என்று விளக்கி பல நூல்கள் வந்துள்ளன. பல வகையான வான் பொருட்களைப் பற்றியும் தமிழில் நூல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் நான் எங்கிருந்து வந்தேன் எங்கே செல்வேன் என்ற கேள்விகளுக்குப் அப்பால், புவி எங்கிருந்து வந்தது? சூரியன் எங்கிருந்து வந்தான்? என்று அலசி ஆராய்வதுதான் இந்த நூல்.
பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்ற பல விண்மீன்கள் இருக்கின்றன. அவைகள் எப்படிப் பிறந்தார்கள். சூரியனின் வயது என்ன? நமக்கு வயதாவதை போல் புவிக்கு வயதாகுமா? சூரியனுக்கு வயதானால் என்ன ஆகும். இந்தப் பிரபஞ்சத்திற்கு வயதாக வாய்ப்பிருக்கிறதா? என்று மனிதன் இறப்புக்குப் பிறகு எங்கே செல்கிறான் என்ற ஆன்மீக கேள்வியை மேலும் விரிவு படுத்திப் பிரபஞ்சத்திற்கு என்ன ஆகுமென்று நான் தேடிய கேள்விக்குப் பதிலாக இந்தப் புத்தகத்தை வடிவமைத்துள்ளேன்.
விண்மீன்களின் வகைகளைப் பற்றியும், சூரிய குடும்பத்தைப் பற்றியும் அரிய தரவுகள் உடைய பல புத்தகங்கள் தமிழில் இருக்கின்றன. அதனால் தரவுகள் குறைவாகவும் பிரபஞ்சம் ஆதி முதல் அந்தம் வரை எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் இந்தப் புத்தகம் இருக்கும்.
அறிவியல் தெரியாமல் மூட நம்பிக்கையுடன் இருந்த மனித சமுதாயத்தை மாற்றுவதற்காக உயிருடன் எரிக்கப்பட்ட ஞானிகள் முதல் வீட்டில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்த அறிவியலாளர்கள் பற்றியும் இங்கே காணலாம்.
இப்படிக் கடினப்பட்டுப் அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் வரலாற்றைக் கூறிய பொழுதும், இன்னும் இந்த நவீன உலகத்தில் கோள்களை நம்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த ஆதியும் அந்தமும் புத்தகம் அவர்களில் ஒரு சிலரையாவது அறிவியலை தெளிவாக அறிவதன் மூலம் மாற்றினால், இந்தப் புத்தகம் எழுதியதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்
சேலம் ஜெயமுருகன் சேலம் உருக்காலை –
“வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்… ” – மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
வெயில், புயல், மழை, வெள்ளம், கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளெல்லாம் ஏன் ஏற்படுகின்றன? பூமி உருண்டையா? தட்டையா? உருண்டை எனில், கடல் நீர் ஏன் கீழே கொட்டவில்லை? ஏன் சூரியன், பூமி, நிலா, ஏனைய கோள்கள் எல்லாமே உருண்டையாகக் கோள வடிவில் இருக்கின்றன? பூமி தோன்றியது எப்படி? அதில் உயிர்கள் தோன்றியது எப்படி? இவ்வாறு ஏன், எப்படி, எதற்கு என ஏராளமான கேள்விகள் எழுப்பி, அதன் காரண, காரியத்தை அறிந்து கொள்ள ஆதிகாலத்திலிருந்தே மனிதன் முயன்று வருகிறான். குறிப்பாக, நிலவின் கலைகள், கோள்களின் நகர்வு, விண்மீன்களின் தோற்றம் இவற்றைப் பற்றி எல்லாம் எண்ணி வியக்காத மனிதர்களே இல்லை எனலாம்.
பரந்து விரிந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள, அதற்குள்ளே சிறு நுண்ணியத் துகள் போல இருக்கும் இப்புவியில் வாழும் மனிதர்களாகிய நாம் எடுத்துவரும் முயற்சிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
” அத்தோடு முடியுமா? அப்பாலும் இருக்குமா?
புதிராகப் பிரபஞ்சம் விரியும்…
யாரு கற்பனையில் அளந்து பார்க்க முடியும்? ”
– என்ற கவிஞர். தனிக்கொடியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
இப்படி நம் கற்பனைக்கும் எட்டாத இப்பிரபஞ்சத்தினைப்பற்றி, ஒரு சிறிய நூலில், அதுவும் பதினான்கே அத்தியாயங்களில் எளிமையான தமிழில் யாவர்க்கும் பிடிக்கும் நடையில் அறிந்து கொள்ளச் செய்கிறார் இந்நூலாசிரியர் முனைவர் சசிக்குமார்.
வினாடிக்கு சுமார் 454 மீட்டர் என்னும் வேகத்தில் சுழல்கின்ற புவியின் சுழற்சியை ஏன் நாம் உணர முடியவில்லை என்னும் கேள்வியிலிருந்து துவங்குகிறது இந்நூல். புவி ஒரு கோளம் என்றால், ஏன் அதன் வளைந்த பரப்பு நமக்குத் தெரியவில்லை என்று ஏராளமான கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு அறிவியற்பூர்வமான விளக்கங்களைச் சொல்லி மிக எளிமையாகப் புரியவைக்கிறார் நூலாசிரியர்.
ஆதிஅறிவியல் எனப் போற்றப்படுவது வானவியல். இன்று நாம் அடைந்திருக்கும் பல்வேறு அறிவியல் வளர்ச்சிக்கும் துவக்கப்புள்ளி வானவியல் தான். இந்த வானவியல் அறிவு பெற்றுவிட்டால் பெரும்பாலான மூடநம்பிக்கைகள் நம்மை விட்டுவிலகும். எனவே இந்நூல் காலத்தின் மிக மிக அவசியமான ஒரு நூல்.
பிரபஞ்சம் என்றால் என்ன? அதில் ஆற்றலும், பொருளும், துகள்களும், நட்சத்திரங்களும், கோள்களும் எவ்வாறு தோன்றின. ஆரம்பக் காலத்தில் பிரபஞ்சம் பற்றி நாம் எவ்வாறெல்லாம் கருதினோம்? இன்றளவும் கூடக் கண்ணாமூச்சி காட்டி வரும் இருள் பொருள், இருள் ஆற்றல் என்றால் என்ன? இவற்றைப் பற்றி எல்லாம் அறிந்துகொள்ள நாம் என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறோம்? நம் சூரிய குடும்பம், அதில் உள்ள கோள்கள் இவை எல்லாம் எவ்வாறு தோன்றின? அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இப் புவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இறுதியாக, இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட வானவியலின் ஆதி முதல் அந்தம் வரை பிரபஞ்சத்தை எளிமையாகவும், முழுமையாகவும் அலசி உள்ளது இந்த நூல்.
ஏட்டுக்கல்வி அதிகம்பெறாத எளியோருக்கும் கூடப் புரியும் வண்ணம், குறிப்பாக, எல்லாவற்றையும் கேள்விகேட்டு தெரிந்து கொள்ளத் துடிக்கும் இளம் மாணவ மாணவியரின் பார்வையிலிருந்து மிக எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
இந்நூலைப் படிக்கும் யாவருக்கும், விண்வெளி ஓடத்தில் ஏறி, கால இயந்திரத்தின் ஊடே, இப்பிரபஞ்சத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஒர் “விண் உலா” சென்றுவரும் அனுபவம் கிட்டும் என்பது திண்ணம்.
உலகளாவிய வாழ்வியல் நெறிமுறைகளை இரண்டே அடிகளில் சுருங்கக் கூறும் திருக்குறளை போல, மிகப்பெரிய ஆச்சரியங்களை உள்ளடக்கி பரந்து விரிந்திருக்கும் பிரம்மாண்ட பிரபஞ்சத்தைப் பற்றி மிக எளிமையாக இச்சிறு நூல் விவரிக்கிறது. வாருங்கள் நாமும் பயணிக்கலாம் என நம் கைப்பிடித்து, பிரபஞ்ச உலாவிற்கு அழைத்துச் செல்லும் முனைவர் சசிக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
சேலம் ஜெயமுருகன்
சேலம் உருக்காலை
த வி வெங்கடேஸ்வரன் –
உங்களிடம் காலயந்திரம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? எங்கெல்லாம் செல்வீர்கள்? அதுவும் பூமியின் மூலை முடுக்கு மட்டுமல்ல நிலா மற்றும் சூரிய குடும்பத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும். பிரபஞ்சத்தில் எங்கு வேண்டும் என்றாலும் செல்லக்கூடிய காலயந்திரம்; அதுவும் நிகழ்காலத்தில் மட்டுமல்ல கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்ல முடியும் என்றால் கரும்புத் தின்ன கூலி போல அல்லவா?
அந்தக் காலயந்திரத்தை வைத்து எங்கெல்லாம் செல்ல நாம் விரும்புவோம்?
இந்தக் கதையில் வரும் சிறுவன் கௌதமுக்கு வினாடிவினா போட்டியில் பரிசாகக் கிடைத்த காலயந்திரத்தில் அவனது அத்தை மகள் நேத்ராவுடன் பிரபஞ்ச பயணம் மேற்கொள்கிறான்.
கடந்த காலம் எனும்போது நமது சிறுவயதில் நாம் எப்படி இருந்தோம், நமது தாய் தந்தையர் அவரது இளமை காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்ற குறுகுறுப்பு மேலோங்கி இருக்கும் அல்லவா? அதுபோலத் தான் கௌதம் தனது சிறுவயதிலும் தன் தந்தையின் பள்ளி காலத்துக்கும் காலபயணம் செல்கிறான்.
கணிப்பொறி இல்லாத கைபேசி இல்லாத அந்தக்காலம் எப்படி இருந்தது?
இப்படி ஆரம்பிக்கும் காலப்பயணம் அவனது பாடபுத்தகத்தில் உள்ள வான் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பை காணவும் விளைகிறது.
கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர் போன்ற ஆளுமைகளைப் புத்தகத்தில் படிக்கிறோம். அவர்கள் நிகழ்த்திய அறிவியல் புரட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. காலயந்திரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்துக்குச் சென்று பார்க்க நமக்குத் துருதுருப்பு இருக்கும் தானே.
அவர்கள் தமது கண்டுபிடிப்புகளை எப்படி நிகழ்த்தினார்கள்?
அந்த கண்டுபிடிப்புகளை கூறிய பொழுது அன்றைய சமுதாயம் அவர்களை எப்படி பார்த்தது.
எனக்கு முன்னால் வந்த மேதைகளின் தோளில் ஏறி நின்று என்னால் கூடுதல் தொலைவை காண முடிகிறது என ஐசக் நியூட்டன் 1675இல் எழுதிய ஒரு கடிதத்தில் கூறுகிறார். அதுபோலக் கெப்ளரும் கலிலியோவுக்கும் முன்னர் எப்படி வானவியல் வளர்ந்தது? வானவியல் விவசாயம் நாட்காட்டி முதலியவற்றுக்குத் தொடர்பு என்ன என அறிய நாம் கற்காலத்துக்குப் பயணம் செல்ல வேண்டும்.
கௌதமும் நேத்ராவும் கற்காலத்தில் கண்டது என்ன?
உங்களது சிறுவயது காலத்துக்குச் செல்ல முடியும் என்றால் சூரியனின் பிறப்பு நிகழ்ந்த காலத்துக்கும் பூமி உருவான காலத்துக்கும் செல்ல முடியும் அல்லவா?
அந்தக் கட்டத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது?
பல ஆயிரம் லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடந்த காலத்தில் இருந்த பூமி மற்றும் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளுக்குக் கௌதமும் நேத்ராவும் செல்லும் பயணமே இந்த நூல். இந்தப் பயணத்தின் மூலம் பிரபஞ்சத்தையும் அதன் வரலாற்றையும் அற்புதத்தையும் நமக்கு விவரிக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் முனைவர் பெ. சசிக்குமார்.
உள்ளபடியே இது வெறும் பயணம் அல்ல; தேடல். பூமி தன்னைதானே அச்சில் சுற்றிவருகிறது எனப் பள்ளியில் ஆசிரியர் கூறுவதைக் கேட்ட கௌதமுக்குச் சிந்தையில் கேள்வி எழுகிறது. பூமி சுற்றுகிறது என்றால் நாம் குதிக்கும் போது எப்படி அதே இடத்தில் கிழே விழுகிறோம். இந்தக் கேள்வியிலிருந்து துவங்கி ஏன் முன்பு கோள்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புளுட்டோ எப்படி தன் கோள் பதவியை இழந்தது, இருள் ஆற்றல் இருள் பொருள் என்றால் என்ன எனப் பற்பல கேள்விகளுக்கு விடை தேடும் பயணமாகவும் இது அமைகிறது சிறப்பு.
சூரியனுக்கு வயதாகுமா பூமிக்கு வயதாகுமா. இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் இந்த பூமி உயிர்ப்போடு இருக்கும் என்று எதிர்காலத்திலும் பயணம் செய்கிறார்கள்.
சூரியன் தான் பிரபஞ்சத்தின் பெரியவன் என்று நினைத்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு அதைவிட எண்ணற்ற விண்மீன்களை பிரபஞ்சம் கொண்டிருக்கிறது என்பன போன்ற செய்திகளை நாமும் அவர்களது காலப் பயணத்தின் ஊடே பார்க்கிறோம்.
எளிய உதாரணங்கள் உவமைகள் மூலம் ஆசிரியர் சிக்கலான கருத்துகளையும் எளிதில் நமக்கு விளங்கும் படி விவரிப்பது நூலுக்கு மெருகூட்டுகிறது.
அறிவியல் ஆர்வலர்களுக்கு முனைவர் பெ. சசிக்குமார் எழுதியுள்ள ஆதியும் அந்தமும் எனும் இந்த நூல் கற்கண்டு. வானவியல் மற்றும் பிரபஞ்ச வரலாறு குறித்து ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய நூல். பாட புத்தகத்தில் உள்ளதை விட வானவியலை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மாணவ-மாணவிகளுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
பிரபஞ்ச வரலாற்றை பொதுமக்களுக்கும் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காலயந்திரப் பயணம் ஒரு புது முயற்சி ஆகும்.
இந்த நூலை அறிவியல் பலகை சார்பில் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
அன்புடன்
த வி வெங்கடேஸ்வரன்
கி.பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர், சென்னை –
நமது புவி எப்படி உருவானது?
சூரியன் சந்திரன் எவ்வாறு, எப்போது தோன்றியது?
புவி கோளம் என்று கூறுகிறார்களே, எவ்வாறு கண்டறிவது?
புவி சூரியனைச் சுற்றி வருவது உண்மையா? என்ன ஆதாரம்?
நிலவு புவியைச் சுற்றுவது ஏன்?
புவிக்கு ஈர்ப்பு விசை உள்ளது என்றால், நிலவு பல ஆண்டுகளாக நமக்கு அருகில் வராதது ஏன்?
புவி சுழற்சியை நாம் ஏன் உணர முடியவில்லை?
புவி சுழலும் போது நான் குதித்தால் அதே இடத்தில் விழுவது ஏன்?
இவ்வாறு பிரபஞ்சம் குறித்த பல கேள்விகள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றும். கடவுள்தான் அனைத்தும் படைத்தார் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கும் கூட எதிர்காலத்தில் புவி என்ன ஆகும்? சூரிய மண்டலம் எத்தனை காலத்திற்கு வேலை செய்யும்? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கும் வெகு சிலர் கூட விடைகாண பற்பல புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால் ஒரே புத்தகத்தில் இவற்றிற்கு விடைகாண முனைவர். பெ. சசிகுமார் எழுதியுள்ள *ஆதியும் அந்தமும்* பிரபஞ்சத்தின் வரலாறு என்ற புதிய புத்தகம் பெரிதும் உதவுகிறது.
சமூகத்தில் அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கை கருத்துக்கள் அதிகமாக பரவும் நிலையில், நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் (பிரிவு 51(H)) வலியுறுத்தும் *அறிவியலார்ந்த உளப்பாங்கை வளர்த்தல்* எனும் அடிப்படை கடைமையை நிறைவேற்ற ஆதியும் அந்தமும் புத்தகத்தின் பங்களிப்பு அளப்பரியது.
ஆசிரியர் முனைவர் பெ. சசிகுமார் எழுதியுள்ள ஆசிரியர் உரையுடன், சேலம் ஜெயமுருகன் அவர்களின் சிறப்பான மதிப்புரை மற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களின் சீர்மிகு அணிந்துரையும் சிறப்பாக அமைந்துள்ளது.
கதை சொல்லும் விதம் குறிப்பிடத்தக்கது. எச்.ஜி.வெல்ஸின் கிளாசிக் “கால இயந்திரம்” படித்தவர்களுக்கும், சில தமிழ் சினிமாக்களில் சிறிய அளவில் கையாளப்பட்டிருக்கும் கற்பனை “கால இயந்திரம்” பயன்படுத்தி நம்மை கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை இட்டுச்செல்லும் என்று அறிந்தவர்களுக்கும் இது புதியதல்ல எனினும் “கால இயந்திரம்” எனும் கற்பனை இயந்திரம் மூலம் பிரபஞ்சத்தின் ஆதி வரலாற்றை விளக்கும் முயற்சி வித்தியாசமான யுக்தியாகும்.
15 அத்தியாயங்களில் 200 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய புத்தகம். யார் யாரை சுற்றுகிறார்கள்? ஏன் வானத்தை பார்த்தனர்? பிரபஞ்சத்தை எப்படி பார்க்க வேண்டும்? வான் பொருட்களின் வகைப்பாடு, சூரியன் பிறப்பு, சூரிய குடும்பம், புவி எனும் அதிசயம், பிரபஞ்சம் பிறந்த கதை, நட்சத்திரங்கள் வாழ்க்கைச் சுழற்சி, இருண்ட பொருள் மற்றும் ஆற்றல், பிரபஞ்சத்தின் முடிவு என்று நேர்த்தியாக தொடுக்கப்பட்ட மாலை போன்ற அத்தியாய அமைப்பு மிகச் சிறப்பு.
சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு, குவாண்டம் எலக்ட்ரோடைனமிக்ஸ், குரோமோடைனமிக்ஸ், இழைக்கோட்பாடு, குவாண்டம் கிராவிட்டி கோட்பாடு என்பன போன்ற சிக்கலான நவீன அறிவியல் கோட்பாடுகளைக் கூறி நம்மை பயமுறுத்தாமல் மிக எளிதாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களும் கூட புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
அரிஸ்டாட்டிலின் புவி மையக் கருத்து தாலமியால் உறுதி செய்யப்பட்ட போதிலும் 100 வருடங்களுக்கு பிறகு சூரியன் மையக் கருத்தினை அரிஸ்டார்கஸ் முன் வைத்தார். ஆனால் அது பிரபலமடையவில்லை. 1500 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பர்நிக்கஸும், அதன் பின்னர் கலிலியோவும் எவ்வாறு அதனை உறுதிப்படுத்தினர்? அதற்காக கலிலியோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டதும், புருனே எரித்துக்கொலை செய்யப்பட்டதும் விளக்கப்படுகிறது. டைகோ பிராஹே, கெப்ளர் கண்டுபிடிப்புகள், நியூட்டன் ஐன்ஸ்டீனின் பங்களிப்பு அறியப்படுகிறது.
வேட்டையாடி சமூகத்திலிருந்து விவசாய சமூகமாக மாறியது முதல் வானத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த மனிதன், முதலில் நிலவின் சுழற்சி அடிப்படையில் சந்திர நாட்காட்டியையும் பின்னர் முன்னேற்றமான சூரிய நாட்காட்டியையும் உருவாக்கியதும் நமது அன்றாட வாழ்வில் இவற்றின் விளைவுகளையும் விவரிக்கிறது. முதலில் ஒளியினை வெறும் கண்களால் பார்த்து கண்டறிந்து பின்னர் தொலைநோக்கி மூலம் பார்வை விரிவான வரலாறும் விளக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காவலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள வைணு பாப்பு தொலைநோக்கி நிலையம் பற்றிய புகைப்படம் மற்றும் செய்திகளும் உள்ளன. விண்வெளியில் வலம் வரும் தொலைநோக்கிகள் பற்றியும் கூடுதல் தகவல்கள் சிறப்பானவை.
பல நட்சத்திரங்களை புள்ளிகள் போல் இணைத்து பல உருவங்கள் உருவாக்கி அந்த விண்மீன் தொகுப்புகளுக்கு ( உடு மண்டலங்கள் – Constellation) பெயரிட்டு அழைத்தனர். அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அதன் பின்னர் பல கதைகளை சேர்த்துக் கொண்டனர். இவை உலகின் பல பகுதிகளில் பலவாறு உள்ளன. பழங்கால இந்தியாவில் 12 விண்மீன் தொகுப்புகளை வைத்து 12 ராசிகள் உருவாக்கப்பட்டன. இன்று உலக வானியல் ஆராய்ச்சிக் கழகத்தால் 88 விண்மீன் தொகுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சந்திர நாட்காட்டி படி 27 நட்சத்திரங்கள் எவ்வாறு? என்று படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.
விண்மீன்களில் ஏற்படும் அணுக்கருப் பிணைப்பு மூலம் வெளியிடும் ஆற்றலைப் பொறுத்தது அதன் ஒளி/ வண்ணம் மற்றும் அதன் அடிப்படையில் வகைப்பாடு, அவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாற்றங்களை விளக்குகிறது இந்த புத்தகம். இவ்வாறு O,B,A,F,G,K&M வகைகளில் மேற்பரப்பு வெப்பநிலை, சராசரி நிறை/ அளவு ஆகியவை எவ்வாறு கண்டறியப்பட்டது என்றும் விளக்குகிறது. அடிப்படையில் புவியிலிருந்து நிலவு, சூரியன், மற்ற விண்மீன்கள் எவ்வளவு தொலைவு உள்ளது? அது எவ்வாறு கண்டறியப்படுகிறது என்ற அறிவியல் எளிமையான முறையில் விளக்குகிறது. நமது புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சராசரியாக 14..96கோடி கி.மீ. இது ஒரு வானியல் அலகு ( One Astronomical Unit) ஆகும்.
ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நெபுலாவின் புகைப்படம் மற்றும் சூரிய நெபுலா உருவாக்கம், அது வெடித்து சிதறி சூரியன் மற்றும் சூரிய குடும்பம் உருவானது, சூரியன் பிறப்பில் ஹைட்ரஜன் ஹீலியம் வாயுக்களின் பங்கு மற்றும் அணுக்கருப் பிணைப்பு, சூரிய குடும்பத்தின் உருவாக்கம், அதன் பல கோள்களின் தனித்துவமான பண்புகள் மட்டுமின்றி இவை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதையும் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.
சூரியன் பிறந்த 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு “கால இயந்திரம்” சென்று இவை அனைத்தையும் கண்முன் நிகழ்வது போல் காண்பிக்கப்படுவது சிறப்பு. 1936-ல் கண்டறிந்து சூரிய குடும்பத்தின் கோளாக சேர்க்கப்பட்ட புளூட்டோ ஏன் 2006-ல் அந்த வகையிலிருந்து நீக்கப்பட்டது ? பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் மற்றொன்றை மையமாக வைத்து சுற்றிவரும் நிலையில் நமது மொத்த சூரிய குடும்பமும் பால்வெளி மண்டலத்தின் மையத்தை சுற்றி வருகிறதா? அவ்வாறெனில் அதன் வேகம் எவ்வளவு? சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறதா? இவையனைத்தையும் இந்நூல் விளக்குகிறது. சமீபத்தில் டிமார்போஸ் சிறுகோளின் பாதையை மாற்றி விட்டதாக செய்திகள் அறிகிறோமே, இத்தகைய வான் பொருட்கள் புவியைத் தாக்குவது பற்றியும் இந்நூல் விவாதிக்கிறதா? என்று அறிய முற்பட்டேன். இந்நூல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை எவ்வளவு அளவுள்ள வான் பொருட்கள் புவியைத் தாக்குகின்றன என விளக்குவது மட்டுமின்றி கொலராடோ பீடபூமியில் குறுங்கோள் தாக்கிய பள்ளத்தை கூட கால இயந்திரம் மூலம் நமக்கு காண்பிக்கிறது.
நிலவு புவியைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு முறையும் ஏன் கிரகணங்கள் தோன்றுவதில்லை? சூரியன் அருகில் உள்ள புதனை விட வெள்ளியின் வெப்பநிலை அதிகமாக இருப்பது ஏன்? சூரியனிலிருந்து புவியை விட அதிக தொலைவில் உள்ள செவ்வாயில் நீர் வற்றியது எவ்வாறு? புவியின் பருவகால மாற்றங்களின் காரணம் என்ன? மணிக்கு 1674 கி.மீ வேகத்தில் சுற்றும் புவியின் காந்தப்புலம் எவ்வாறு உருவாகிறது? சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சம் குறித்த நிலைப்பு, துடிப்பு மற்றும் பெருவெடிப்பு கோட்பாடுகள் யாவை? அவற்றில் எது சரியானது? நமது அன்றாட வாழ்வில் சம்பவிக்கும் உதாரணங்களோடு டாப்ளர் விளைவு, சூரிய குடும்பத்தின் சுழற்சி வேகம், அண்டங்களின் சுழற்சி, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்பது, விண்மீன்களின் பேருருநிலை( சிவப்பு), நியூட்ரான் ஸ்டார், வெள்ளைக் குள்ளன் ( White dwarf)நிலை மற்றும் கருந்துளை உருவாக்கம், இருண்ட பொருள் ( Dark matter) மற்றும் இருண்ட ஆற்றல் கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் ஹீலியம் தொடங்கி அதிக அணுநிறை கொண்ட தனிமங்களின் உருவாக்கம், உயிர்களுக்கும் இதற்கும் உள்ள சம்பந்தம், புவியில் உள்ள அதிக அடர்த்தி கொண்ட ஆஸ்மியம் Os76, மனித உடல் எந்த வேதிப்பொருட்களால் ஆனது? உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமான புறக்கோள்கள், புவி தோன்றிய முதல் 80 கோடி ஆண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழமுடியாத நிலை, கடந்த 100 கோடி ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் அளவு, பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? நமது பால்வெளி மண்டலம் அருகில் 25லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆண்ட்ரமீடா கேலக்ஸி நமது அண்டத்துடன் இணையும் வாய்ப்பு என்று பல்வேறு விபரங்களை விரிவாகவும் ஆர்வம் குறையாமலும் விவரித்துள்ள *ஆதியும் அந்தமும்* ஒரு அற்புதமான நூல். பல்வேறு வண்ணப் புகைப்படங்கள், எளிதாக புரிந்து கொள்ள மாதிரிகள் என்று அசத்தியிருக்கும் இந்நூல் அனைத்து இல்லங்களிலும் கல்வி நிலையங்களிலும் அவசியம் இருக்கவேண்டும். ஆசிரியர் இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ. சசிகுமார் அவர்களின் கடும் உழைப்பில் உருவான இந்நூல் மூடநம்பிக்கைகளிலிருந்து மாணவர்களை மீட்கும் என்பதில் ஐயமில்லை.
கி.பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர், சென்னை
Savithri Balakrishnan –
ஆதியும் அந்தமும் என்ற நூலின் தலைப்பே மிகுந்த செறிவுடைய தொடராக உள்ளது. இந்த உலகம், பிரபஞ்சம், பூமி, சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரங்கள் மற்றும் பல கோள்கள் எப்படி தோன்றின, எப்படி இயங்குகின்றன, அவற்றின் காரண காரியங்கள், விளைவுகள் போன்ற எண்ணற்ற தகவல்களின் தொகுப்பாக விளங்கும் இந்நூல் வானியல் பற்றி எளிமையாக
விவரிக்கும் ஓர் ஒப்பற்ற நூல். ஆசிரியர் முனைவர் பெ சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியன.
விஞ்ஞான் பிரச்சார் வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஆதியும் அந்தமும்” ‘நூல் வானியல் துறையின் அடிப்படைகள் அனைத்தையும் தெளிவுபட விளக்குகிறது. வானியல் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பயன் தரத்தக்க சிறப்பான நூல் எனில் அது மிகையில்லை. இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள முதன்மை விஞ்ஞானி த.வி .வெங்கடேஸ்வரன் தொலைக்காட்சியில் பல விவாதங்களில் அறிவியல் செய்திகளை மிக எளிமையாக சொல்லக்கூடியவர். அவரே ‘எளிய உதாரணங்கள் உவமைகள் மூலம் ஆசிரியர் சிக்கலான கருத்துக்களை எளிதில் நமக்கு விளங்கும்படி விவரிப்பது நூலுக்கு மெருகூட்டுகிறது’ என்று எழுதி இருப்பது மிகப்பொருத்தமானது, அறிவியல் கதைகளில் வரும் கால யந்திரம் இந்நூலில் பயன்படுத்தப்பட்டு அதன் வழியே அறிவியல் நிகழ்வுகளை கால வரிசையில் விளக்குவது மிக அருமை. இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகளை எளிமையாகவும் ரசனையுடனும் சொல்கிறார் ஆசிரியர்
.
புவியின் பல அரிய பண்புகளை இடையிடையே எடுத்துச் சொல்வது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. (எ.கா) எவரெஸ்ட் மலை 8.8 கி.மீ
உயரத்தில் இருக்கிறது என்றால் பசிபிக் மகா சமுத்திரம் 10.9 கி. மீ. கிலோமீட்டர் ஆழத்திலும் இருக்கிறது. புவியில் உள்ள தண்ணீரை மொத்தமாக அதனுடைய பரப்பளவின் மீது ஊற்றி வைத்தால் அதனுடைய ஆழம் 2.7 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். (பக்.124 ) நூலின் பல இடங்களில் துல்லியமான கணிப்புகளைக் குறிப்பிடுவது நூலின் தரத்துக்கு சிறந்த அளவுகோல்.
(எ.கா) தனது மொத்த எடையில் பத்து விழுக்காடு சூரியன் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை வெளியிடுகிறது என்று நாம் வைத்துக் கொண்டால் சூரியனுடைய ஆயுட்காலம் ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகும். நாம் இப்போது அதில் சரி பாதி 500 கோடி ஆண்டுகளைக் கடந்துள்ளோம். கோள்களின் சுற்றுவட்டப்
பாதையைக் குறிப்பிடுகையில் புளூட்டோவின் சுற்றுவட்டப்பாதை சூரியனுக்கு 17.2° கோணத்திலும் மெர்குரி 7 டிகிரி கோணத்திலும் இருக்கிறது. இதுவே வெள்ளிக்கு 3.4 டிகிரியாக இருக்கும். இதுபோல எண்ணற்ற கணிப்புகளை நூலின் பல இடங்களில் காண முடிகிறது . நிறமாலையில் நாம் காணும் ஏழு நிறங்கள் அவற்றின் அலை நீள வேறுபாட்டால் உண்டாகிறது என்ற உண்மையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய புதிய தகவல் ஆகிறது.
குறைந்த அளவு நீளத்தில் இருக்கும் ஊதா முதல் அதிக அளவு நீளத்தில் இருக்கும் சிவப்பு வரை நாம் ஒவ்வொன்றாய்ப் பார்க்க முடியும்.
எளிமை- எளிமை -எளிமை
அறிவியல் உண்மைகளையும் அன்றாட நிகழ்வுகளையும் மிக எளிமையாகச் சொல்லும் விதம் நம்மை வியக்க வைப்பதோடு நூலைப் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது .
(.எ.கா) கோடை காலத்தில் சூரியனிலிருந்து வரும் ஒளி நேரடியாகப் புலியின் மீது நேர்கோட்டில் பிடிக்கப்படும் டார்ச் லைட்டைப்போல் விழுகிறது. அதுவே குளிர்காலத்தில் சாய் கோணத்தில் பிடிக்கப்பட்டுள்ள டார்ச் லைட்டைப் போல் சூரிய வெப்பம் அதிக பரப்பளவின் மீதுபடுகிறது. அதனால் தான் கோடைகாலமும் குளிர்காலமும் புவியில் மாறி மாறி வருகிறது( பக்.121) சுட்டெரிக்கும் வெயிலும் இதமான வெயிலும் இதனால் தான் என்பது புரிகிறது அல்லவா!
தெரியாத உண்மைகள் எத்தனையோ அறிவியல் உண்மைகளை அறியாமல் வாழும் நம்முடைய அறியாமையை வெளிப்படுத்தும் இடங்கள் இவை.
(எ.கா) புவியிலிருந்து பார்க்கும் பொழுது சூரியன் கிழக்கே உதிப்பது போல் தோன்றினாலும் உண்மையில் சூரியன் எல்லா நாட்களிலும் கிழக்கில் உதிப்பது இல்லை. வருடத்தில் இரண்டு நாட்களில் மட்டும் தான் கிழக்கில் உதிக்கிறது .மார்ச் மற்றும் செப்டம்பர் 21ஆம் தேதிகளில் மட்டும்தான் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறது. மற்ற நாட்களில் தென்கிழக்கிலும் வட கிழக்கிலும் உதிக்கிறது. இதனால் தான் மார்ச் 21 செப்டம்பர் 21 ஆகிய தேதிகளில் இரவும் பகலும் சரியான அளவு இருக்கிறது என்கிற உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
புவி என்னும் அதிசயத்தை ஆசிரியர் கதை போல சுவாரஸ்யமாகச் சொல்லும் போது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் பக்கத்துக்குப் பக்கம் நம்மை பிரமிக்க வைப்பதும் மிக இயல்பாக அமைகிறது. (எ.கா) நிலவு புவியை 5 டிகிரி சாய் கோணத்தில் சுற்றி வருவதால் அது புவியையும் சூரியனையும் விட சற்று மேலேயோ கீழேயோ சென்று விடுகிறது. அதனால் தான் ஒவ்வொரு 15 நாளுக்கும் கிரகணம் இல்லாமல் இடைவெளி விட்டு கிரகணம் உண்டாகிறது .(பக்.118 )
(எ.கா) மணிக்கு 45583 கி.மீ.வேகத்தில் சுழலும்
வியாழன் சூரிய குடும்பத்திலேயே வலிமையான காந்தப்புலத்தை கொண்ட கோளாகும் .அது புவியைப் போல 20 மடங்கு காந்தப்புலத்தை கொண்டுள்ளது .(பக். 123 )
புவியை விட செவ்வாய் அதிக தொலைவில் இருக்கிறது .(பக்.122) அண்டம் அல்லது பேரண்டம் அல்லது பிரபஞ்சம் என்பது விண்மீன்களுக்கு இடையே தூசுகளையும் குப்பைகளையும் ஒருசேர தனது ஈர்ப்பு விசையால் பிடித்து வைத்திருக்கும் ஒரு இடமாகும் .(பக். 137)
விண்மீன் கூட்டத்தில் உள்ள பொருள்களில் இருந்து உருவாகும் மூல நட்சத்திரத்தின் எடையைப் பொறுத்து அது நட்சத்திரமாக உருவாகும் காலம் மாறுபடுகிறது என்று கூறி நெபுலா பற்றிய விளக்கம் தரப்படுகிறது .இதுபோல அறிவியல் உண்மைகள் பல அடங்கிய வானியல் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. வெள்ளைக் குள்ள நட்சத்திரம், சிவப்புக்குள்ளன், பழுப்புக் குள்ளன் என்று உருமாறும் விண்மீன்கள் விளக்கம் பற்றியும் விவரிக்கிறார். .
சூப்பர் நோவா, நியூட்ரான் ஸ்டார் ,கிரக நெபுலா, விண்மீன் பல்சர், கருந்துளை உட்பட பல விளக்கங்கள் நமக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
எளிய உவமைகள்
அதிக உயரமான மனிதர்கள் எப்படி குறைவாகப்புவியில் இருக்கிறார்களோ அதுபோல அதிக எடை கொண்ட விண்மீன்கள் பிறப்பதும் குறைவாகத்தான் இருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் தமிழ்நாட்டில் காவலூர் என்னுமிடத்தில் ஒரு தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 1986 முதல் இங்கே பயன்பாட்டுக்கு உள்ளது. 2.3 மீட்டர் விட்டமுடைய கண்ணாடி இங்கே வைக்கப்பட்டுள்ளது. உங்கள் சட்டை பட்டனை 40 கி.மீ. தொலைவில் வைத்து விட்டாலும் இந்த தொலைநோக்கி கொண்டு தெளிவாக ப்பார்க்க முடியும்.
காரண காரியங்களை எளிமையாக விளக்கி அறிவியலை உணர வைக்கும் தருணங்கள் பலவற்றை இந்நூலில் காண முடியும் .
சூரிய குடும்பத்தில் ஒரு கோள் என்பது மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் .முதலாவது சூரியனைக்குறிப்பிட்ட பாதையில் சுற்றிவர வேண்டும். இரண்டாவது போதுமான அளவு எடையைக் கொண்டு ஒரு கோள வடிவில் இருக்க வேண்டும். மூன்றாவது தனது சுற்றுவட்டப்பாதையில் சூரியனைச்சுற்றி வரும் பொழுது தனது பாதையில் வேறு எந்தப் பொருள்களும் வராதவாறு
சூரியனை ச்சுற்றிவர வேண்டும் சுற்று வட்ட ப்பாதையில் புளூட்டோவைத் தவிர மற்ற பொருள்களும் வந்து செல்வதால் புளூட்டோ குறுங்கோள் என்று வரையறுக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் சூரிய குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்டது .சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் என்று சொல்லப்பட்டு வந்தது 8 கோள்களாக மாறிய கதை இதுதான் .(பக்106)
வானியலாளர்கள் அறிமுகம்
வெறும் கண்களாலேயே நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களையும் ஒளிரும் பொருள்களையும் பார்த்த டைகோ பிராஹே, நட்சத்திரங்களுக்கு ப் பெயர் வைக்கும் முறையை அறிமுகப்படுத்திய ஜோஹன்பேயர் என்ற ஜெர்மானியர், நட்சத்திரங்களின் நிறமாலை வாய்ப்பாட்டை உருவாக்கிய (1920 )இந்திய இயல்பியலாளர் மேக்நாத்சாஹா,வான் பொருள்களை துல்லியமாகபடம் எடுக்கும் செயற்கைக்கோளை உருவாக்கிய கிரேக்க வானியலாளர் ஹிப்பார்கஸ் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை க்கண்டுபிடித்த (1910 )வெஸ்டோஎம் ஸ்லீஃபர் ,பெருவெடிப்புக் கொள்கை விதியை உருவாக்கிய( 1920)ஹப்பிள் ஆகியோரின்அறிமுகமும் நமக்குக்கிடைக்கிறது.
மார்ச் 2 ,2022 நிலவரப்படி 4980 புறக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன புறக்கோள்கள் பற்றியஆராய்ச்சியில் சூரிய குடும்பத்தைப்போல் 170 கோடி விண்மீன் குடும்பங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது
.காலயந்திரப்பயணத்தில் காணும் சில காட்சிகள் –
கிபி 100 தாலமியின் வீடு அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை விளம்பரப்படுத்தும் வண்ணம் அதற்கான கோட்பாடுகளை தாலமி உருவாக்கிக் கொண்டிருத்தல் -அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை வலுவாக்கி புத்தகமாக்க உதவியாளரிடம் கொடுத்தல் -1500 ஆண்டுகளுக்குப் பின் கோப்பர் நிக்கஸ் (1473-1544 )
அரிஸ்டாட்டில் கூறியது தவறு என்ற கருத்துக்கு வருதல் -தனது கருத்தை ஜெர்மனி,கிரேக்கம் ,லத்தின் ,போலிஷ் ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதுதல்
25 ஆண்டுகளுக்குப் பிறகும் திருச்சபை இவருடைய நூலை ஒத்துக்கொள்ளவில்லை. கிபி 1580 டைகோ பிராஹே ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருத்தல் -வானில் உள்ள பொருட்களை அளத்தல்- அவை எவ்வாறு நகருகின்றன என்று 777 வான் பொருள்களைப் பற்றிய குறிப்புகளை 20 ஆண்டுகளாக எழுதி வைத்துள்ள டைகோ பிராஹே- கணித மேதை கெப்ளர் சந்திப்பு -செவ்வாய்க்கோள் புவியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக்கண்டுபிடிக்க ச்சொல்கிறார் ஏழு ஆண்டுகள் கழித்து கெப்ளர் விடை கண்டுபிடித்தார்
மூன்று விதிகளைக்கண்டுபிடித்து புத்தகமாய் எழுதுகிறார்.
கோபர் நிக்கஸ் எழுதிய தடை செய்யப்பட்ட புத்தகம் கலிலியோ கையில் கொடுக்கப்படுகிறது அவருக்கு ஆதரவாக கலிலியோ புத்தகம் எழுதியதால் வீட்டுக்காவலில் வைக்கப்படுதல் -அப்போதும் குறிப்புகள் எழுதுவதை அவர் நிறுத்தவில்லை .கடைசி நாட்களில் கண்தெரியாமல் குருடரான போதும்அவருடைய மகள் அவருடைய ஆராய்ச்சிக்கு உதவுதல் –
கிபி 1600-அறிவியலாளர் புரூனோ உண்மையை த்துணிவுடன் கூறியதால் எரிக்கப்பட்ட கொடூரத்தைப் பார்த்தல்
-ஐசக் நியூட்டன் ஆய்வுகள் -புவியீர்ப்பு விசை கண்டுபிடித்தல் –
இந்த ஆப்பிளை ஈர்ப்பது போல் ஏன் புலி நிலவை ஈர்க்க முடியவில்லை என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் கண்டுபிடித்தார் .நிலவு போல் சீரான இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் மீது எந்த ஒரு புற விசையும் செயல்படாத வரை அது அந்த நிலையைத்தொடரும் (.ப 33) 1851 ஆம் ஆண்டு லியோன் பூக்கோ என்பவர் புவி சுற்றும் வேகத்தை தனது ஆராய்ச்சிகளின் மூலம் அளந்து கோட்பாடுகளை உறுதிப்படுத்துதல் .பிரபஞ்ச ரகசியம் துப்பறியும் கதை போல விறுவிறுப்பாகத் தொடர்கிறது.
கால யந்திரத்தில் பயணிப்பது அதன் வழி அறிவியல் நிகழ்வுகளை விளக்குவது புதிய உத்தி முறை.
இந்த உத்தி முறைஇந்த நிகழ்வுகளைவஎளிமையாகவும் சுவையாகவும் சொல்ல உதவுகிறது. புவி என்னும் அதிசயம், இருண்ட பொருள் மற்றும் இருண்டஆற்றல், நமது அண்டை வீட்டுக்காரர்கள், மற்ற கோள்கள் ,பிரபஞ்சத்தின் முடிவு வரை மிக துல்லியமாக தெளிவாக விளக்கும் ஆசிரியரின் அறிவியல் புலமைக்கு நாம் தலை வணங்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் வானியலை விரிவாகப் படிக்க விரும்புவர்களுக்கும் படிப்பில் ஆர்வம் கொண்ட பாமர மக்களுக்கும் இந்நூல் அரும்பெரும் பொக்கிஷமாக இருக்கும்.வானியல்பற்றிமேலும்
மேலும்தெரிந்துகொள்ளவேண்டும்
என்ற ஆர்வத்தை உண்டாக்கும் நூல் இந்நூல்எனலாம். .
Savithri Balakrishnan
சோ. மோகனா, பழநி மேனாள் மாநிலத்தலைவர், –
ஆதியும் அந்தமும்..நூல் மதிப்புரை
-பேரா.சோ.மோகனா
நான் ஆதியும் அந்தமும் படித்ததே ஒரு தனி ரகம்தான். முதலில் புத்தகத்தை வாங்கிப் பாதிப் படித்து வீட்டில் வைத்துவிட்டேன். யாரோ எடுத்துச் சென்று விட்டனர். இரண்டாவது புத்தகம் வாங்கினேன். எனது நண்பர் முனைவர் சாவித்திரியிடம் கொடுத்து, அவரைப் படித்துப் பதிவிடச் சொல்லி கொடுத்துவிட்டேன். அவரும் படித்து முடித்துவிட்டார். இப்போது என் கையில் இருப்பது மூன்றாவது முறை வாங்கிய புத்தகம். இது எப்படி இருக்கு ?
ஆதியும் அந்தமும் புத்தகத்தை எழுதிய முனைவர் சசிக்குமாரின் அறிமுகம் எனது புத்தகங்களை அவர் அறிமுகம் செய்தது மூலம்தான் கிட்டியது. அவர் இந்திய அரசின் ISRO வில் பணிபுரியும் ஒரு விஞ்ஞானி. அவரை, 11.12.22 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்தான் முதன் முதல் சந்தித்தேன்.
ஆதியும் அந்தமும் புத்தகம் சுவை குன்றாதது. பிரபஞ்சத்தின் வரலாற்றை ஒரு கதை போலக் கொண்டு போகிறார் ஆசிரியர் சசிக்குமார். நண்பர்களே, குழந்தைகளே பயப்படவேண்டாம். ஏதோ பிரபஞ்சம் என்றதும் பெரிய பெரிய புரியாத விஷயங்களை சொல்லி பயமுறுத்த போகிறார், என்று அஞச வேண்டாம். அற்புதமான பிரபஞ்சத்தின் வரலாற்றை ஒரு கதைபோல மிகவும் சுவாரஸ்யமாகவே சொல்லி இருக்கிறார். படிப்பவர்களைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொரு இடமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் முதல், பிரபஞ்ச எல்லை வரை எல்லாவற்றையும், நம்மிடம் நேரில் அறிமுகம் செய்கிறார். எப்படி என்கிறீர்களா? நம்மை ஒரு கால எந்திரத்தில் வைத்து அழைத்துப் போகிறார். என்ன டுமீல் விடுகிறேன் என்கிறீர்களா.. உண்மைதான் நண்பர்களே.
இந்த புத்தகத்தின் கதை நம் பூமி சுற்றுவதிலிருந்து துவங்குகிறது. நொடிக்கு 454 மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமியிலிருந்து ஒரு பொருளும் கீழே விழாமல் அது பாட்டுக்கு இருக்கிறதே, அது எப்படி என்ற கௌதமின் வினாதான் இந்தப் புத்தகத்துக்கு மைய ஆதாரம் என்றும் கூடச் சொல்லலாம். ஆனால் துவக்கம் படு இன்டரஸ்டிங். ஆசிரியர் சசிக்குமார் சிக்கலான வானவியல் தகவல்களை சர்வ சாதாரணமாக, அனாயசமாக, அவரது கற்பனை சிறகின் மூலம் விரித்து, பறக்க வைத்து, நம்மையும் பறக்க வைத்து அசாதாரணமாகவே கையாண்டு இருக்கிறார்.
புத்தகத்தின் துவக்கம்
கௌதம் நேரலையில் நடந்த உலக வினா-விடைப் போட்டியில் கலந்து கொண்டு , இறுதிச் சுற்றில் கௌதம் வெற்றி பெறுகிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசுதான் காலத்தை வெல்லும் கால எந்திரம். அதில் அவர் அமர்ந்து எங்கு வேண்டுமானாலும் போகலாமாம். இந்தப் பூமியில் மட்டுமல்ல, இந்தப் பேரண்டத்தில் எந்த இடத்துக்கும் கௌதம் போகலாம், அது மட்டுமல்ல, அதில் அமர்ந்தால் கௌதம் விருப்பப் படி, காலத்தை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ கொண்டு செல்ல முடியும். அங்கு நடக்கும் விஷயங்களை அவர் பார்க்கலாம்; கேட்கலாம், அவர்களுடன் அவர் உரையாட முடியும்,.
உதாரணமாக, அப்போது கௌதமின் வயது 14, அவர் விருப்பப்படி அவரின் 4 வயதில் அவர் எப்படி இருந்தார், என்னென்ன செய்தார் என்பதை எல்லாம் கால எந்திரம் அவருக்குக் காண்பித்தது. ஆச்சரியமாக இல்லையா? அது மட்டுமில்லை அவரது எண்ணப்படி, அவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர்ச் செல்லவும் என்றதும் கால எந்திரம், கைபேசி இல்லாத காலத்தைக் காட்டி அப்போது நடந்த வற்றை தெரிவித்தது. எல்லாமே வியப்புதான். எனக்கும்தான் ரொம்பவே புத்தகம் சுவாரசியமாக இருந்தது. இதெல்லாம் கௌதம் தனியாகப் போய்ப் பார்த்து வந்து அப்பாவிடம் சொல்லியபோது அப்பா நம்பவில்லை. பின்னர்க் கால எந்திரத்தில் அப்பாவுடன் ஏறிப்போய், நிலவின் அப்பல்லோ தரை இறங்கிய இடம் பார்த்த பின்னர் அப்பாவும் நம்பினார். அதனை, அப்பல்லோ தரை இறங்குவதை அவர்கள் நேரில் பார்த்தனர். அவர்களுக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நமக்கும் தான்.
அந்தக் கால எந்திரத்தில் தான் கௌதம், அவரின் அப்பா, அவரது அத்தை பெண் நேத்ரா எல்லோரும் இணைந்து பயணித்து அவர்கள் கண்டதை, அனுபவித்ததை, பார்த்து வியந்ததை நீங்களும் உடனிருந்து காணப்போகிறீர்கள். போகலாமா.. கால எந்திரத்தில் கௌதம், 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவரின் அத்தை பெண் வீட்டிற்கு ஒரு நொடியில் போனார்கள். எல்லோரும் உடனே கி.மு 350 க்கு கிரேக்க நாட்டிற்குப் போய் அரிஸ்ட்டாட்டிலைப் பார்க்கின்றனர். அவர்தான் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் நீர், காற்று மற்றும் நெருப்பால் உருவாக்கப்பட்டவை என்ற கருத்தை மாற்றி, உயிருள்ளவை எவ்வாறு உயிரற்றதில் இருந்து வேறு படுகின்றன என்று, பூமிதான் உலகின் மையப்புள்ளி என்றும் அவர் கூறியதைப் பார்த்தனர்.
இது தவறே எனக் கௌதமும், நேத்ராவும் எண்ணினர். பின்னர்த் தாலமி வாழ்ந்த கி.பி 100ஆம் நூற்றாண்டுக்குள் கால எந்திரம் அவர்களை அழைத்துச் சென்று தாலமியின் கொள்கைகளை, புவி மையக்கொள்கையை விளக்குவதைப் பார்த்தனர். இவர்கள் கூறுவது சரி இல்லையே என்று மக்கள் நினைக்கவில்லையே என்றும் கௌதம், நேத்ரா எண்ணினார்கள். பின்னர்க் கால எந்திரம் சூரியனை மையமாக வைத்தே பூமி சுற்றுகிறது என்று சொன்ன நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் காலத்துக்குச் செல்கிறது. அங்கு அவரின் நான்கு மொழிப் புலமையை, அவருக்கும் திருச் சபைக்கும் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள், அவரின் இறப்பு அனைத்தையும் கால எந்திரம், கௌதம், அவர் அப்பா,மற்றும் நேத்ராவுக்குக் காண்பிக்கிறது . இப்படியே டைகோ பிராகி, ஜொகான்னஸ் கெப்ளர் உருவாக்கிய விதிகள், கோள்களின் நீள்வட்ட சுற்றுப்பாதை கண்டுபிடிப்பு, அவரின் வாழ்க்கை , பின்னர்க் கலீலியோ, அவரின் கண்டுபிடிப்புகள், அவர் கண்ட நிலவின் மேடு பள்ளங்கள், அனைத்தையும் கலீலியோ அருகில் இருந்தே கால எந்திரத்தில் இருந்து எல்லோரும் பார்க்கின்ற்னர்.
நாமும்தான் பார்க்கிறோம். பின்னர்க் கி.பி 1600 ஆம் ஆண்டில் நுழைந்து பிரபஞ்சம் கோள வடிவிலானது என்றும், சூரியன் அதன் மையம் என்றும், விண்மீன்களால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறிய கோபர்நிகஸ் கொள்கை தவறு என்று கூறிய புரூனோவையும் பார்த்தனர். புரூனோ, பிரபஞ்சத்துக்கு மையம் இல்லை, விண்மீன்கள் சூரியன்கள் என்றும், அவை கோள்கள் மற்றும் சந்திரன்களால் சூழப்பட்டவை என்றும் கூறியதால் அவரைக் கொடூரமாகக் கொலை செய்ததையும் கால எந்திரத்தில் உள்ள கௌதம் அவரின் அப்பா மற்றும் நேத்ரா பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பின்னர் ஐசக் நியூட்டன் சந்திப்பு என அனைத்து வானியல் விஞ்ஞானிகளோடும் அவர்களின் சந்திப்பு நிகழ்கிறது.
இது அவர்களின் முதல் பயணம்.
இரண்டாவது பயணத்தில் மனிதனின் முன்னோடிகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பயணித்து அங்கு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதன், அவர்களின் வேட்டையைப் பார்த்து வியக்கின்றனர். பின்னர் அதற்கும் முன்பாக 80,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விவசாயத்தின் துவக்கத்தைப் பார்க்கின்ற்னர். என்ன ஆச்சரியம்தானே. அது மட்டுமா? அதற்கும் முன்னால் கால எந்திரம் அவர்களின் விருப்பப்படி பயணிக்கிறது. மனித இனம் நேரம் அறிவதை, சந்திரன் பூமியை எத்தனை முறை சுற்றுகிறது என்றும், ஒரு வருடத்துக்கு எத்தனை நாட்கள் என்றும், நாட்காட்டிகள் உருவாக்குவதையும் நேரில் பார்த்து கண்டறிகின்றனர். பின்னர் வானத்தைப் பார்த்து விண்மீன்களை அவற்றின் நகர்வை அறிகின்றனர். எல்லா நாட்களிலும் சூரியன் கிழக்கே உதிக்கவில்லை, வருடத்தில் இரு நாட்கள் மட்டுமே என்றும் அறிகின்றனர். இதனை மலை முகட்டில் சூரியன் தெரிவதை பார்த்து தெரிந்து கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கௌதம், அப்பா மற்றும் நேத்ரா நேரில் பார்த்தே அதிசயித்து அறிகின்றனர், அதுவும் கால எந்திரத்தின் மூலம்தான் என்றால் கொஞசம் ஆச்சரியமாகவே உள்ளது.
அது மட்டுமா..மூன்றாவது பயணத்தில், அவர்களுக்கு உதவ, கால எந்திரம் ஒரு கணினியை அவர்களுக்குத் தருகிறது. அவர் பெயர் மதியரசர். அவர்தான் அவர்கள் பயணத்தின் வழிகாட்டி, அறிவியல் ஆசான், இவர்களின் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையும், விளக்கமும் அளிக்கிறது. புத்தகத்தின் 51 வது பக்கத்தில் மதியரசர் வருகிறார். பராக், பராக். ஆம். உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விலாவாரியாகப் பதில் தரும் வல்லமை உள்ளவர் அவர். காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கியிலிருந்து, பூமியிலிருந்து வெகு தூரத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வரை, அதன் பாகங்கள் , செயல்படும் முறை அனைத்தையும் விளக்குகிறார்.
அது மட்டுமா, கால எந்திரம் அவர்களை சூரியனுக்குள்ளேயேயும் அழைத்துச் சென்று அதன் செயல்பாட்டைச் சுற்றும் வேகத்தைக் கண்கூடாகக் காட்டுகிறது, நமக்கு எந்தச் சேதமும் இன்றி. மேலும் வான் பொருட்களின் வகைபாடு, விண்மீன் வகைகள்,பிரகாசம், அதன் கணிதங்கள், வேதியல், இயற்பியல் தகவல்கள், விண்மீன்களின் (சூரியனின்) பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார் மதியரசர். பூமியின் உயிர்கள், விண்மீனின், தோற்றம், வாழ்நாள், கதை, பிரபஞ்சத்தின் பிறப்பு, அங்கே தனிமங்கள் வந்த கதை, அவைகளின் போக்கிடம், மனித உடலின் பொருட்கள், வேதியல் செயல்பாடு, ஆக்சிஜன் வந்த கதை, உயிர்களின் தோற்றம், இருண்ட பொருள் (கருப்பு பொருள்), இருண்ட ஆற்றல் (கருப்பு ஆற்றல்), சூரியக்குடும்பம் போன்ற பிற சூரிய குடும்பங்கள், அவற்றைத் தாண்டி இருக்கும் பிற கோள்கள் என இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும், தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது ஆதியும் அந்தமும் புத்தகம்.
நான் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது மிகக் குறைவே. நானே அவ்வளவையும் கூறிவிட்டால், பின்னர் நீங்கள் படித்துச் சுவைத்து அறிவை பரவலாக்க வேண்டாமா? உங்களுக்கு வழிவிடுகிறேன். நீங்கள் வானவியல் கதையை ரசிக்க. வாசிக்க, புத்தகத்தின் உள்ளே 200 பக்கங்களில் இன்னும் ஏராளாமான பொக்கிஷங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றின் உள்ளே சென்று ஆழ்ந்து படித்து அதில் முத்தெடுத்து மீளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மூளைக்கு அதீதமான விருந்து புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது. அள்ளிக்கொள்ளுங்கள் உங்களால் இயன்ற அளவு. .
இதிலுள்ள விந்தை என்னவெனில், கால எந்திரம் என்ற இயந்திரம், மாந்தர்களைச் சுமந்து கொண்டு அந்தச் செயல்பாட்டை, மனிதர்களை மற்றவர்களுக்குக் காட்டாமல்,அருவமாகவே அவர்களுக்கு மட்டும் ஒரு கணினியின் துணை கொண்டு, பிரபஞ்சத்தின் அணுவிலிருந்து அண்டம் வரை தெளிவாக விளக்குகிறது என்பதுதான். இதில் அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டுள்ளன.
ஆசிரியர் முனைவர் சசிக்குமார், மிக அழகாக, எளிய தமிழில், அறிவியல் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும்படி கடினமான அறிவியல் தகவல்களையும் எளிய உதாரணங்கள் கொண்டு கதைத்துள்ளார் என்பதே, இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி ஆகும். ஒரு சின்னப்பையனின் வினாவுக்குப் பதில் தேடத் துவங்கி, உலகத்திலுள்ளோர் அனைவருக்கும் பலப்பல தேவையான அரிதான பதில்கள் கிடைத்துள்ளன என்பதும் இதன் அடுத்த வெற்றியின் மைல்கல். இவ்வளவு கடினமான வானவியல் மற்றும் கணித தகவல்களை ஆசிரியர் சசிக்குமார் போகிற போக்கில் மிக மிக எளிதாகக் கையாண்டிருக்கிறார். அற்புதமான அறிவியல் கதை சொல்லி ஆசிரியர் சசிக்குமார். Hats off to Dr .சசிக்குமார்.
சசிக்குமார் சார், அவர்களுக்கு ஏராளமான வாழ்த்துக்கள். ஆசிரியர் இந்தப் புத்தகம் எழுத ஏராளமான தரவுகளை, புத்தகங்களை படித்திருக்க வேண்டும் என்பது, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும், சொல்லுகின்றன. ஏராளமான மூளை உழைப்பு தேடல் இதில் விரவிக்கிடக்கிறது.
விஞ்ஞான் பிரச்சார விஞ்ஞானி, த.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் சேலம் ஜெயமுருகன் இருவரும் ஆதியும் அந்தமும் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளனர் என்பது இந்தப் புத்தகத்துக்கு இன்னொரு மணிமகுடம்.
அன்புடன்,
சோ. மோகனா, பழநி
மேனாள் மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு
செ.யோகித்,, எஸ் . ஆர் .வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி திருச்சி –
நான் ஒரு நல்ல அறிவுப்பூர்வமான நூலை வாசிக்க காத்துக் கொண்டு . இருந்தேன் அப்பொழுது தான் எனது தமிழாசிரியர் திருமதி சித்ரா அவர்கள் எனக்கு இந்த புத்தகத்தை படிக்க ஊக்கப்படுத்தினார் அறிவுத்தினார் மேலும் இதற்கு நூல் மதிப்ரையும் எழுத சொன்னார். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு மனநிறைவு கிடைத்தது. அதை பற்றிய உணர்வை நான் பகிர்ந்து கொள்ள இந்த மதிப்புரையை எழுதுகிறேன்
முனைவர் பெ. சசிக்குமார் இந்திய அரசின் ISRO வில் பணியி ஒரு விஞ்ஞானி இந்த புத்தகம் பிரபஞ்சத்தை பற்றி ஆகுதல் அந்தம் வரை கூறுகிறது. உடனே பயப்பட வேண்டாம் பரபஞ்சம் என்றும் நிறை புரியாத விஷயங்கள் இருக்கும் என்று நினைக்க வேண்டாம் இந்த புத்தகம் அனைவருக்கும் புரியும் வகையில் என் தமிழில் எழுதியுள்ள இந்த நூலின் ஆசிரியர் இது சசிக்குமார் ஒன்பதாவது புத்தகம் ஆகும் நவரத்தினங்கள் போல.
படிப்பவர்களை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொரு இடமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் முதல், பிரபஞச எல்லை வரை எல்லாவற்றையும், நம்மிடம் நேரில் அறிமுகம் செய்கிறார்.
வாருங்கல் பயணிக்கலாம்:
கௌதம் கேள்வி கேட்பதில் வள்ளவன் இவ்வாறு அவன் கேள்வியை ஒன்று ஆசிரியரிடம் கேட்பான் அல்லது ஆவனது தந்தையிடம் கேட்பான் அல்லது வகுப்பை நன்கு கவனிப்பான் மற்றும் பல புத்தங்களை படிப்பான் இவ்வாறு அவன் பெற்ற அறிவை நேரலையில் நடந்த உலக வினா-விடைப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றிலவெற்றி பெறுகிறான்அதற்கு கிடைத்த பரிசுதான் கால எந்திரம். கால எந்திரம் மூலம் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை அவன் அப்பாவிடம் சொல்லியபோது அவர் நம்பவில்லை. பின்னர் கால எந்திரத்தில் அப்பாவுடன் ஏறிப்போய், நிலவின் அப்பல்லோ தரை இறங்கிய இடம் பார்த்த பின்னர் அப்பாவும் நம்பினார். அதனை , அப்பல்லோ தரை இறங்குவதை அவர்கள் நேரில் பார்த்தனர். இந்த புத்தகத்தின் கதை நம் பூமி சுற்றுவதிலிருந்து துவங்குகிறது. நொடிக்கு 454 மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமியிலிருந்து ஒரு பொருளும் கீழே விழாமல் அது பாட்டுக்கு இருக்கிறதே அது எப்படி என்ற கௌதமின் வினாதான் இந்த புத்தகத்துக்கு மைய ஆதாரம் என்றும் கூட சொல்லலாம்.
அறிவியல் அறிஞர்கள்:
அந்த கால எந்திரத்தில் கௌதம் , அவரின் அப்பா, அவரது அத்தை பெண் நேத்ரா எல்லோரும் இணைந்து பயணிக்கின்றனர் கி.மு 350 க்கு கிரேக்க நாட்டிற்கு சென்று அரிஸ்ட்டாட்டிலைப் பார்க்கின்றனர். அவரின் கூற்று படி பூமி தான் உலகின் மையப்புள்ளி என்றும் .அவர்கூறியுள்ளார்உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் நீர், காற்று மற்றும் நெருப்பால் உருவாக்கப்பட்டவை என்ற கருத்தினை மாற்றி,உயிருள்ளவை எவ்வாறு உயிரற்றதில் இருந்து வேறு படுகின்றன என்றார் .
பின்னர் தாலமி வாழ்ந்த கி.பி 100ஆ ம் நூற்றாண்டுக்குள் கால எந்திரம் அவர்களை அழைத்துச் சென்று(தாலமியின் கொள்கைகளை, புவி மையக் கொள்கையை விளக்குவதை பார்த்தனர். இவர்கள் கூறுவது சரி இல்லையே என்று மக்கள் நினைக்கவில்லையே என்றும் கௌதம், நேத்ரா எண்ணினார்கள். பின்னர் கால எந்திரம்
சூரியனை மையமாக வைத்தே பூமி சுற்றுகிறது என்று சொன்ன கோப்பர்னிக்கஸ் காலத்துக்குச் சென்றனர் பிறகு அங்கு அவரின் நான்கு மொழிப் புலமையும் அவருக்கும் திருச் சபைக்கும் நடந்த கருத்து வேறுபாட்டையும் , அவரின் இறப்பு அனைத்தையும் பார்கின்றனர் .
பிறகு கெப்ளர் உருவாக்கிய விதிகள், கோள்களின் நீள்வட்ட சுற்றுப்பாதை கண்டுபிடிப்பு, அவரின் வாழ்க்கையைப் பார்தனர்
பின்னர் கலீலியோ அவரின் கண்டுபிடிப்புகள், அவர் கண்ட நிலவின் மேடு பள்ளங்கள், அனைத்தையும் பார்க்கின்ற்னர். கலீலியோவின் இயல்பு என்ன வேன்றால் அவர் சொல்வதை நம்பமாட்டார் அதை பரிசோதித்து தான பார்ப்பார்
. பின்னர் கி.பி 1600 ஆம் ஆண்டில் புரூனோ,பிரபஞசத்துக்கு மையம் இல்லை, விண்மீன்கள் சூரியன்கள் என்றும், அவை கோள்கள் மற்றும் சந்திரன்களால் சூழப்பட்டவை என்றும் கூறியதால் அவர் கொடூரமாக கொலை செய்ததையும் கௌதம் அவரின் அப்பா மற்றும் நேத்ரா பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பின்னர் ஐசக் நியூட்டன் சந்திப்பு நிகழ்ந்தது. இவ்வாறு அறிவியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருமாறி கொண்டே உள்ளது அப்படி தான் நமக்கு இப்பொழுது உள்ள அறிவியல் நிலையான வடிவத்தை கொண்டுள்ளது.
பின்னர் வானத்தைப் பார்த்து விண்மீன்களை அவற்றின் நகர்வை அறிகின்றனர்.
மதியரசரின் அறிமுகம்:
அவர்களுக்கு உதவ, கால எந்திரம் ஒரு கணினியை அவர்களுக்குத் தருகிறது. அவர் பெயர் தான் மதியரசர். மதியரசர் புத்தகங்களில் உள்ள தரவுகள் அவர் கணிப்பொறியில் உள்ளன . அறிவு ஞானத்தைக் கண்டு இவருக்கு மதியரசர் என்று கெளதம் பெயர் வைத்தான்
பிரபஞ்சம் பிறந்த கதை:
பிரபஞ்சம் பிறந்த கதைக்கு மூன்று விதமான கோட்பாடுகள்
நிலைப்பு கேட்பாடு
துடிப்பு கோட்பாடு
பெருவெடிப்புக் கோட்பாடு
நிலைப்பு கோட்பாட்டின் படி கடவுள் தான் பிரபஞ்சத்தை உருவாக்கினார் . பின்னர் 1842 ஆம் ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்ட டாப்ளர் விளைவு ஆடுத்த மூன்று ஆண்டுகளில் ஹாலந்தில் நடந்த சோதனை மூலம் பிரபஞ்சம் உருவாகியதைப் பற்றிய முதல் கொள்கை தவறு என்று உணரப்பட்டது.
இரண்டாவது கோட்பாட துடிப்புக் கொள்கையில் எப்படி இதயம் சுருங்கி விரிகிறதோ. அது போல் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் சில காலம் மையத்தில் இருந்து விலகி வரும் என்றும் பின்னர் மீண்டும் மையத்தை நோக்கி செல்லும் என்றும் கருத்து இருந்தது. பின்னர் இதுவும் தவறு என உணரப்பட்டது.
பெருவெடிப்புக்கொள்கை (Big Bang Theory) சரி என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இங்கு பொருள் வெடிக்க ஆரம்பித்தது . அது வெடித்தவுடன் அதிலிருந்து எண்ணிலடங்காத வெடித்த பொருட்களின் பாகங்களும் தூசுகளும் குப்பைகளும் வாயுக்களும் பிரபஞ்சம் முழுவதும் பரவத்தொடங்கின.
தூசும் குப்பைகளும் ஒன்றிணைந்து பல விண்மீன் மண்டலங்கள் (galaxy) மெதுவாக உருவாக ஆரம்பித்தது.
புத்தகம் உணர்த்தும் செய்திகள்.
கால எந்திரம் அவர்களை சூரியனுக்குள்ளேயேயும் அழைத்துச் சென்று அதன் செயல்பாட்டையும் அதன் சுற்று வேகத்தை கண்கூடாகக் காட்டுகிறது, அவர்களுக்கு எந்த சேதமும் இன்றி பார்கின்றனர் மேலும் விண்மீன் வகைகள்,வேதியல்,இயற்பியல் தகவல்கள் (சூரியனின்) பிறப்பு, வளர்ச்சி, இறப்பு மற்றும் . விண்மீனின் ,தோற்றம், பிரபஞசத்தின் பிறப்பு, ஆக்சிஜன் வந்த கதை, உயிர்களின் தோற்றம், இருண்ட பொருள் ( Dark matter) இருந்த ஆற்றல் (Dark energy) ,(சூரியக்குடும்பம் ) ( கோள்கள்) என இந்த பிரபஞசத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும், தெளிவாக உரைக்கிறது இந்த புத்தகம்.
நான் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது மிகக் குறைவே.
நீங்கள் இதனை படித்து சுவையுங்கள்.. புத்தகத்தின் உள்ளே 200 பக்கங்களில் இன்னும் நிறைசெய்திகள் உள்ளன.மூளைக்கு விருந்து புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது.
முடிவுரை:
சசிகுமார் ஐயா. இந்த புத்தகம் எழுத ஏராளமான தரவுகளை, புத்தகங்களை படித்திருக்க வேண்டும் என்பது, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும், சொல்லுகின்றன. ஏராளமான மூளை உழைப்பு தேடல் இதில் விரவிக்கிடக்கிறது.
விஞ்ஞான் பிரச்சார விஞ்ஞானி, த.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் சேலம் ஜெயமுருகன் இருவரும் ஆதியும் அந்தமும் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளனர் என்பது இந்த புத்தகத்துக்கு இன்னொரு மணிமகுடம்.
அன்புடன்,
செ.யோகித்,, எஸ் . ஆர் .வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி
திருச்சி