நல்ல பொருட்களை வாங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. வீட்டுக்கு தேவையான காய்கறி முதல் விமானத்தின் பாகங்கள் வரை பொருட்களின் தரத்தை கண்டுபிடிப்பதற்கு ஒர் ஒற்றுமை உள்ளது. குழந்தைகளுக்கு எது நல்ல தக்காளி, எது முத்தாத வெண்டைக்காய் என்று கூறாத தாய்மார்கள் பின்னாளில் அவர்கள் காய்கறிகளைக் கூடத் தரம் அறிந்து பிரிக்க முடியாததைப் பார்க்க நேரிடும். ஒவ்வொரு காய்கறியையும் எப்படித் தரம் பிரிப்பது என்பது ஒரு தனித் தொழில்நுட்பம்.

     உடனே சமையலுக்குத் தேவையான பழுத்த தக்காளியும், ஐந்து நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கப் போகும் தக்காளிக்கும் தேவையான தரம் வேறுபடும். வெண்டைக்காயை நுனியில் உடைக்காமல் அதை லேசாக அழுத்தி பார்த்து முத்தி விட்டதா என்று கண்டுபிடித்தலும் ஒரு முறையே. அரிசியை அள்ளிப் பார்த்தவுடன் பழைய அரிசியா? செல் பிடித்து விட்டதா? அல்லது நன்றாக இருக்கிறதா என்று கண்டுபிடிக்கிறோம். கடையில் வாங்கும் உணவு பொருள் பழையதா?  புதியதா? என்று ஆலோசித்து வாங்குகிறோம்.

     இப்படி நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அறிவியல் தொழில்நுட்பம் பொருட்களைச் சேதப்படுத்தாமல் பரிசோதித்து அதன் தரத்தை கண்டுபிடிப்பது. காய்கறியில் தொடங்கும் இந்தத் தரம் அறிதல், உணவுப் பொருட்கள், துணிமணிகள், புதிய வீடு கட்டும்போது தேவைப்படும் மண், செங்கல் என்று விரிந்து கொண்டே செல்கிறது. காலில் உபயோகிக்கும் செருப்பு முதல் தலையில் உபயோகிக்கும் கிளிப்பு வரை சோதனை செய்து தரத்தை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

     அதனால் இந்த எல்லாப் பரிசோதனைகளும் பொருட்களை உடைக்காமல் செய்யும் சோதனைகள் தான். உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே உடலில் என்ன பிரச்சனை என்பதைப் பல்வேறு பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஏவு வாகனத்தின் பாகங்கள் தரமாக இருக்கிறதா? இல்லையா? என்ற துறையில் 18 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்குச் சேர்ந்தேன்.

     அங்கே இது போன்ற பல சோதனைகளுக்கு உட்பட்டுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் எனது கைகளுக்கு வந்து சேர்ந்தன. பரிசோதனை முடிவுகளை அலசி ஆராய்ந்து இந்தப் பொருள் நன்றாக வேலை செய்யும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டிய முக்கியமான பணி என்னுடையது. அலுவலகத்திற்கு வெளியே என்னைச் சுற்றி நடக்கும் எல்லாப் பரிசோதனைகளையும் இதனுடன் ஒப்பிட்டு நோக்கிய பொழுது பல உண்மைகள் புரிய வந்தது. என்னிடம் கொடுத்துள்ள பரிசோதனை முடிவுகள் போதுமானதாக இல்லை. மேலும் இன்னும் சில சோதனைகள் செய்ய வேண்டும் என்று சில நேரம் கூற வேண்டி வந்தது.

     பரிசோதையின் முடிவு தெளிவாக இல்லை மீண்டும் ஒரு முறை என் முன்னே செய்து காட்டுங்கள் என்ற கோரிக்கையையும் வைத்தேன். ஏவு வாகனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தத் துறை ஒரு ஆலமரத்தை போல விரிந்து பல துறைகளில் பல தொழில்நுட்பங்களின் உதவியுடன் பரிசோதனைகள் செய்யப்பட்டுக் குறைபாடுகள் கண்டுபிடிப்பதை மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன்.

     இன்று தேங்காயின் உள்ளே எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. எத்தனை கிராம் பருப்பு இருக்கிறது என்பதை ஒரு வினாடியில் கண்டுபிடிக்கக் கூடிய உபகரணத்தைக் கண்டுபிடித்து விட்டதாக நண்பர் ஒருவர் படங்களுடன் ஒரு சந்திப்பில் கூறினார். அது மட்டுமல்லாமல் மாம்பழங்களின் தரத்தை அறியவும் பல பழங்களின் தரத்தை அறிந்து அவற்றை வகைப்படுத்தப் பயன்படுகிறது என்பதை அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படிக் காய்கறியிலிருந்து மருத்துவமனை வரை நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பரிசோதனைகளும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் உடைக்காத சோதனைகளின் ஒரு பாகமே என்பது எனக்குப் புரிந்தது.

     ஆனால் இது போன்ற தொழில்நுட்பங்களை அலுவலகத்தில் காணாதவர்கள் இதைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அதனால் இந்தத் துறையில் உள்ள தொழில்நுட்பத்தை எளிய தமிழில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளில் இருந்து விளக்கலாம் என்று முடிவு செய்தேன். மிகவும் சிக்கலான அறிவியல் தொழில்நுட்பத்தை எளிய அறிவியல் தமிழில் புத்தகமாக எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகம் படித்து முடிக்கும் பொழுது நமக்குத் தெரிந்த உடைக்காமல் பொருட்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைச் சிறுவயதிலேயே குழந்தைகளைக் கடைக்குக் கூட்டி சென்று நாமும் தெரிவிக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

Weight .200 kg

4 reviews for உடைக்காமல் என்னைக் கண்டுபிடி

  1. முனைவர் செ.சு.நாசந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர்.

    உடைக்கப்பட்ட இரகசியங்கள்
    ஒட்டுமொத்த உலக நடப்புக்களின் உள்பொதிந்த இலக்கணங்களை முழுவதும் அறிந்தவர் யார்? யாதொன்றின் கட்டமைப்பைப் புரிந்துதான் உடன்பட வேண்டும் எனும் நியதியையும் கடைபிடித்தவர் யார்? தெளிந்தும், பிறர் தெளிவை உண்டாக்கும் வல்லமை உள்ளவர் யார்?
    இவற்றிற்கெல்லாம், இந்த நூலும், இந்த நூலை எழுதியவரும் தான் ஒரே பதிலாக இருக்க முடியும் என்றால் அது மிகையாகாது. எதையும் ஞானக்கண்ணோடு அணுகும்போது, சூத்திரங்கள் முழுமையாய் இனம் காட்டி நிற்கின்றன.
    உடலியல், மருந்தியல், உலகியல் இவை குறித்த புலனாய்வே இந்த நூல். நோய், குற்றம், திரிபு போன்றவைகளை நீக்க, எவ்விதச் சேதமும் இல்லாமல் அறிந்து புணரமைப்புச் செய்வது எப்படி என்பதை ஒவ்வொருவருக்கும் அறிய வைத்திருக்கும் நூலாக விளங்குகிறது. உலகம் எவ்வளவு புதிதானது என்பதை இந்நூல் படித்ததற்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் எல்லாவுமான புரிதலை விளக்கி இருக்கிறது.
    இத்தகு ’அறிவியல் தமிழ்நூல்கள்’ எதிர்காலச் சமூகத்தைப் பெருமளவு சீர்தூக்கும் காரணிகளில் முக்கிய இடத்தைக் கட்டாயம் பிடிக்கும். எவ்வளவு செய்திகள். எவ்வளவு நயமான உதாரணங்கள். எவ்வளவு எளிமையான விளக்கப் படங்கள். எவ்வளவு ஒப்பீடுகள். எவ்வளவு அனுபவ வெளிப்பாடுகள் இந்த நூலில் கையாளப்பட்டுள்ளன என விளக்க முற்பட்டால் அதுவே ஒரு நூலாக மாறும்.
    ’காட்சி ஆய்வு’ எனும் கட்டுரைத்தொடக்கம் முதல் கடைசிக் கட்டுரை வரை சீரான படிநிலையில் கட்டுரைகள் அறிவியலைப் படிப்பவருக்குத் தெரிய வைத்திருக்கின்றன. தெளிவையும் தந்திருக்கின்றன. கண் மூலமான காட்சியால் ஆய்வு செய்து உணர்தல், காதல் உணரும் சத்தத்தால் உணர்தல், ஒளியால் உணர்தல் என வாழ்வினைச் சுற்றிப் படிப்பினையைத் தருவதற்கு முனைந்திருக்கும் பங்கு எண்ணி வியக்கத்தக்கதாய் இருக்கின்றன.
    செம்மார்ந்த அறிவியல் புலமைக்கு ஆசிரியர் எடுத்தாண்டிருக்கிற எதார்த்தவியல் உண்மைகள் சாட்சியாக இருக்கின்றன. கடற்கரைக்குச் சென்றால், நூலாசிரியர் கூறிய அலைகளின் அர்த்தம் தான் இனி கண்ணில் தெரியும். வீட்டில் கேஸ் அடுப்பு கசியும் பொழுது, இது வாயுவின் உண்மையான மணம் அல்ல என எண்ணத் தோன்றும். ஐஸ்கட்டியைப் பார்த்தால், எங்கே அகச்சிவப்புக் கதிர்கள் என நோக்கத் தோன்றும். இப்படி இவர் கூறிய உதாரணங்கள் எல்லாம் நம்மைச் சுற்றிய ஆழமான அறிவியல் தன்மை கொண்ட நிகழ்வுகள் ஆகும்.
    ’மியொலி’ குறித்த அறிவியல், அதன் மூலமான நோய் கண்டறியும் முறை, இழப்புக்கள் சரி செய்யப்படும் முறை போன்றவை உண்மையில் பல்கலைக்கழக வகுப்புகளில் கூட இப்படிச் சொல்லித் தர முடியாது. எளிமையாய் மலையை உடைக்கவும், கடலைக் குடிக்கவும் முடியுமா என்றால் முடியும் என்கிறது சொல்லப்பட்ட முறையில் இந்த நூல்.
    ’காணாத ஒளியின் ரகசியம்’ கட்டுரைக்குள் எத்தனை ரகசியங்கள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. பாம்புகள் வெப்பத்தைக் கொண்டு இரை தேடுகின்றன என்பதும், வீடு வாங்கும் முன் வெப்பக்கசிவு உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும் என்பதும், அதற்கான தீர்வுகளையும் கூறி இருப்பது மிகவும் நுணுக்கமாய் இருக்கிறது
    புவியின் மேல் இருக்கும் காந்தப்புலம், சுழல் மின்சாரம் உருவாக்கிய விதம், எம்ஆர்ஐ ஸ்கேன், அதன் செயல்பாடுகள், ரேமண்ட் டமோடியனின் கண்டுபிடிப்பு என எங்குப் பார்த்தாலும் அறிவியல் செய்திகள். இவற்றில் ஒன்றைக் கூட விட்டு விட முடியாத மிகப்பெரும் சிறப்பிற்கு உரியவைகளாக இவைகள் இருக்கின்றன.
    ஹாலோகிராம் எனும் முப்பரிமாண வடிவம் மற்றும் காட்சிகள் மூலமாக அறிவியல் தீர்வுகள் இவர் சொற்களில் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஏன் பெரிது படுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கக் கட்டுரை பள்ளிப் பாடங்களில் கட்டாயம் வைக்க வேண்டிய ஒன்றாகும். நம் உடலின் உள்ளே மற்றும் வெளிஉலகில் இயற்கையாகப் பல நடக்கின்றன. ஆனால், அதற்குள் அறிவியல் இருக்கிறது. இதை இயற்கையாகப் பார்ப்பதை விட அறிவியலாகப் பார்க்கும் பொழுது உலகத்தோற்றத்தின் சூட்சுமம் எளிமையாய் விளங்குகிறது. மொத்தத்தில் இது போன்ற நூற்களின் பெருக்கத்தால் இளைய தலைமுறை உண்மை தெரிந்த வாழ்க்கையை அதன் உள்ளீடுகளோடு சிறப்பாக வாழும் என உறுதிப்படக் கூறலாம். இதன் மூலம் புதிய மாற்றங்களுடன் ஆன புத்துலகமாய்ப் பிரபஞ்சம் விளங்கிச் சிறக்கும்.
    முனைவர் பெ.சசிக்குமார் அவர்கள் இதுபோன்ற பல புதுமை நூல்களைத் தமிழ் உலகத்திற்குத் தர வேண்டும். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் இந்நூல் ஒரு மைல்கல்லாகும்.
    பாரதிசந்திரன்

    (முனைவர் செ.சு.நாசந்திரசேகரன்), தமிழ்ப் பேராசிரியர்,
    வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி.

  2. கி. பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர் சென்னை

    பரிசோதனைகளை அறிவோம்
    வித்தியாசமான தலைப்பு, “பரிசோதனை தொழில்நுட்பம்” என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ அறிவியல் கூடங்கள், தொழிற்சாலைகள் தொடர்பான நூல் என்று எண்ணிவிட வேண்டாம்.
    நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மற்றும் நாம் பெற விரும்பும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளில் தரமானவற்றையே நாடுகிறோம், தரக்குறைவை விரும்புவதில்லை. அவ்வாறெனில் அவற்றில் தரத்தை கண்டறிவது எப்படி? எனவே பரிசோதனை குறித்த அறிவு நம் அனைவருக்கும் அன்றாட வாழ்விலேயே முக்கியமானது ஆகும். காய்கறிகள் இளசாக வாங்க விரும்பும் அதேவேளை தேங்காய் மட்டும் முத்தலாக விரும்புகிறோம். இந்தத் தேர்ந்தெடுப்பிற்கு ஏற்ற திறன் முக்கியம். இதேபோல் கிராமங்களில் வெண்டைக்காய் முனையை ஒடித்துப் பார்த்து வாங்க அனுமதிப்பது போல் நகர வணிக வளாகங்களில் அனுமதிப்பதில்லை. இதுபோன்று மற்ற பொருட்களில் பொதுவாகத் தொழில்நுட்பம் வளராத போது உடைத்துப் பார்த்துத் தரம் அறியும் முறை இருந்தது. ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொருட்களின் அமைப்பு, பண்புகள் சிதையாமல் அவற்றின் தரம் அறியும் பகுப்பாய்வு முறைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை விளக்குவதே இந்நூல் உடைக்காமல் என்னைக் கண்டுபிடி.
    பரிசோதனைகளும் குறைபாடுகளும் என்று துவங்கும் இந்நூல் காட்சி ஆய்வு, ஒலி ஆய்வு, ஊடுருவிப்பார், காணாத ஒளியின் ரகசியம், சுழல் மின்சாரம், உடலில் உள்ள காந்தங்கள், முப்பரிமாண புகைப்படம் என்பன போன்ற சுமார் 13 அத்தியாயங்களில் அழிவில்லாத சோதனை அல்லது சிதைவுறாச் சோதனை அல்லது சேதமில்லா சோதனை எனப்படும் ( NDT) Non Destructive Testing-ஐ விவரிக்கிறது.
    காட்சி ஆய்வில் மருத்துவரின் பரிசோதனை தொடங்கி மேற்பரப்பு விரிசல் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிய வண்ணச் சாயங்கள் பயன்பாடு, உடற்குழாய் உள்நோக்கல் எனப்படும் எண்டோஸ்கோபி மற்றும் காட்சி ஆய்வில் ( Visual inspection) என்னவெல்லாம் அடங்கும் என்று பல்வேறு உதாரணங்களை விளக்கியபின் “இன்று உனது முகமே சரி இல்லையே ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று அம்மா
    கேட்பதும், ஏன்டா திருட்டு முழி முழிக்கிறாய்? என்ன தவறு செய்தாய் ?
    என்று அப்பா கண்டுபிடிப்பதும் நமது வீட்டில் நடைபெறும் காட்சி ஆய்வில் ஒரு பகுதியே” என்று ஆசிரியர் கூறுவது மிகவும் நயமானது.
    ஒலி அலைகளின் விவரங்கள், அதிர்வெண் ( Frequency), கேளா ஒலி விவரங்கள், மீயொலி ( Ultrasound), பல்வேறு உயிரினங்களின் கேட்கும் திறன், வெவ்வேறு ஊடகங்களில் ஒலியின் வேகம், உலோகங்கள் முதல் மனித உடல் வரை குறைபாடுகளைக் கண்டறிய மீயொலியின் பயன்பாடு என்று எண்ணற்ற விவரங்கள். சிறுநீரகக் கற்கள், கரு வளர்ச்சி முதல் பல காரணங்களுக்காக வயிற்றின் பகுதிகளில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது தண்ணீர் அதிகம் குடிக்க மருத்துவப் பரிசோதகர் கூறுவது ஏன் என்ற விவரம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கால்பந்து, சுவர், மைதானம் போன்ற எளிய உதாரணங்கள் மூலம் மீயொலி சோதனை செயல்படும் முறையை விளக்குதல் சிறப்பு.
    சமச்சீர் அற்ற வெவ்வேறு இடங்களில் காதுகள் அமைந்துள்ள ஆந்தை ஒலியைப் பயன்படுத்தி இரை தேடும் விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கைவிரல்களை வளைத்து சொடக்கு போல் நெட்டை முறித்த பின்னர் உடனே மீண்டும் அவ்வாறு செய்ய இயலாது ஏன் என்று அறிவீர்களா?
    காட்சி, ஒலிக்குப் பிறகு பரிசோதனையில் ஒளியின் பயன்பாடு குறித்துப் பார்ப்பதற்கு முன் பல்வேறு மின்காந்த அலைகள் அதிக அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள் முதல் மைக்ரோவேவ், அகச்சிவப்பு கதிர், காணும் ஒளி, புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்ரே மற்றும் காமாக் கதிர்கள் வரை அவற்றின் அலைநீளம், அதிர்வெண், ஆற்றல்(eV), ஊடுருவும் தன்மை, வேகம் போன்ற பல அடிப்படைத் தகவல்களைச் சிறப்பாக விளக்குகிறது. எக்ஸ்ரே எலும்பு முறிவுகள் மட்டுமின்றித் தேங்காயை உடைக்காமல் உள்ள நிலை, வெளியில் அழகாகத் தோற்றமளிக்கும் மாம்பழத்தில் உள்ள நிலை அறிய பயன்படுகிறது.
    எக்ஸ்ரே அறையில் உள்ளே நோயாளி தவிர ஏனையோர் ஏன் புகக்கூடாது? சூரியன் வெளியிடும் ஆற்றல் நம்மை வந்தடையும் மூன்று வகைகள், அவற்றின் சதவீதம், பொருட்கள் மற்றும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களிடமிருந்து எந்த வெப்ப நிலையில் அகச்சிவப்புக் கதிர்கள் வெளிப்படும், அகச்சிவப்பு கதிர்களின் பல்வேறு பயன்பாடுகள். தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்க, விண் பொருட்களை ஆராய, பல தொழிற்சாலைகளில் குறைபாடுகளை அறிய, ஆழமான இடங்களில் ஆராய, நாட்டின் எல்லை பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பல எண்ணற்ற தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
    சுழல் மின்சாரம் ( Eddy Current) உருவாக்கம் மற்றும் சோதனைகளில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்.
    உடலில் உள்ள காந்தங்கள் என்ற அத்தியாயம் இந்நூலின் முத்தாய்ப்பாகக் கூறலாம். தமிழில் இத்தகைய விளக்கம் மருத்துவ, இயற்பியல், பயோ நூற்களில் இதுவரை வெளிவரவில்லை என்று கருதுகிறேன். இந்த அத்தியாயத்தில் எம் ஆர் ஐ ( Magnetic Resonance Image) எவ்வாறு செயல்படுகிறது என்று தெளிவாக விளக்குகிறது.
    எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன்-களில் அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்ரே கதிர்கள் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் அவசியம் இல்லாத தருணங்களில் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவற்றுடன் ஒப்பிட்டால் எம் ஆர் ஐ -ல் காந்தப்புலத்தில் ஆற்றல் குறைவான ரேடியோ அலைகள் பயன்படுத்திச் சோதனை செய்வதால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாது என்று விளக்கி நிம்மதி தருகிறார் ஆசிரியர். மேலும் இந்தச் சோதனையின் போது எவ்வாறு நம் உடலில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியப்படுகிறது என்ற விளக்கம் சிறப்பாக உள்ளது. எம் ஆர் ஐ பரிசோதனையைத் தேர்ந்த மருத்துவர்கள் கூட இவ்வளவு எளிதாகத் தமிழில் எழுத இயலுமா என்று தெரியவில்லை.
    ஹாலோகிராம் எனப்படும் முப்பரிமாண புகைப்படத்தை நமது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் பார்த்திருப்போம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து எவ்வாறு குறைபாடுகளைக் கண்டறிய முடியும்? இதனை விவரிப்பது மட்டுமின்றி இது கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுப்பது முதல் மருத்துவத் துறை, கட்டுமானத் துறை எனப் பல்வேறு துறைகளில் மெய்நிகர் நிகழ்வு (Virtual reality) மற்றும் கற்பித்தலில் முப்பரிமாண புகைப்படத்தின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.
    பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (TEM) மற்றும் ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவை மூலம் பரிசோதனை துறையில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது இந்நூல்.
    மனித உடலில் நரம்புகள் உடல் முழுவதும் பரவி அனைத்து நடவடிக்கைகளையும் மூளைக்குத் தெரியப்படுத்தும் உதாரணத்துடன் உணர்வு கருவிகள் ( Sensory Network) பொருத்தி பரிசோதனை மற்றும் பராமரிப்பு மேம்பாடு விளக்கம் தனி அத்தியாயமாக உள்ளது.
    சிக்கலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விவரங்களையும் மாணவர்கள் மற்றும் சிறுவர்களும் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எழுதும் கலையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் முனைவர் பெ. சசிக்குமார் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் பத்துப் புத்தகங்களை எழுதியுள்ளார். அதுவும் அவரது கடுமையான பணிக்கு இடையிலும் எழுத்துப் பணியைத் தொடர்வது மிகவும் பாராட்டுக்குரியது.

    தமிழ் மாணவர்களின் பாடப்பகுதிகளில் சேர்க்க வேண்டிய புத்தகம்.

    நன்றி 🙏

    கி. பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர் சென்னை

  3. G பிரசன்னா, விஞ்ஞானி, அழுத்த கலன் செய்யும் துறையின் தலைவர், இஸ்ரோ

    பயன்படுத்தும் நபரின் பார்வையில்
    அறிவியல் என்றாலே அது ஒரு சிறுபான்மையினருக்கு என்று நம்மில் பெரும்பான்மையினர் ஒதுங்கி விடுகிறோம். அன்றாட வாழ்வை மேம்படுத்தும் பல வழிகளில் ஒன்றே அறிவியல். அதனால் தொழிற்சார்ந்தது அல்லாது, இடம் சார்ந்தது அல்லாது, மொழி சார்ந்தது அல்லாது, அனைவரையும் அனைத்துச் செல்லும் அறிவியல் நம் அன்றாட வாழ்வில் ஒரு பங்காக வேண்டும். அப்படி ஒரு அறிவியல் சிந்தனையை அன்றாட வாழ்வில் பங்காக ஆக்கும் அருமை முயற்சி இந்தப் புத்தகம். நம்மைச் சுற்றி இருக்கும், மேலும் நடக்கும் நிகழ்வுகளை வைத்து நம் வீட்டுப் பெரியவர்கள் பின்பற்றிய சில நல்ல உத்திகளை உதாரணம் படுத்தி “உடைக்காமல் என்னைக் கண்டு பிடி” என்ற அழகிய அறிவியல் சிந்தனை சரத்தை கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
    மியொலி, எம் ஆர் ஐ, லேசர் போன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை நம்மில் பலரும் உபயோகித்தோ அல்லது உபயோகிப்பதை பார்த்ததும் உண்டு. அதன் உள்ளே கருப்பு பெட்டி போல் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்போம். அதை எளிய உதாரணங்கள் மூலம் கண்ணாடி பெட்டி போல் உள்ளே நடப்பவற்றை விவரித்துள்ளது இந்தப் புத்தகம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ந்து அனுபவித்து ரசித்துப் படிக்க வேண்டிய நூல் இது.

    G பிரசன்னா, விஞ்ஞானி,
    அழுத்த கலன் செய்யும் துறையின் தலைவர், இஸ்ரோ

  4. பெ.கார்த்திகேயன் விஞ்ஞானி, சேதமில்லா சோதனை செய்யும் துறை (NDT), இஸ்ரோ

    தொழில்நுட்பத்தைச் செய்பவரின் பார்வையில்

    முனைவர் சசிக்குமார் அவர்கள் எழுதிய “உடைக்காமல் என்னைக் கண்டு பிடி” என்கிற நூலை வாசிக்கும் வாய்ப்பினை பெற்றேன். நூலாசிரியர் இளமைப் பருவம் முதலே எதையும் கூர்ந்து ஆராய்ந்து அதன் தொழில்நுட்பத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஆற்றலும் கொண்டவர். அதற்கு மெருகு சேர்த்தார் போல் அவரது பணியும் விண்வெளி ஆராய்ச்சியில் தர கட்டுப்பாட்டுத் துறையில் அமையப்பெற்றது. அவரது நூல்கள் பாமரர்களுக்கும் எளிதில் புரியும் நடையில் எழுத பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும். நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை உவமைப்படுத்திப் பல்வேறு சிக்கலான தொழில்நுட்பங்களையும் எளிதில் புரியும் வகையில் அவர் எழுத்துகள் அமைய பெற்றிருக்கிறது.

    தரக்கட்டுப்பாடு, பறவைகள், ரயில், விண்வெளி போன்ற பல தொழில்நுட்பங்களைக் குறித்து அவருடைய நூல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றிருக்கின்றன. உடைக்காமல் தரத்தை ஆராயும் தொழில்நுட்பம் நமது வீட்டுப் உபகரணங்கள் முதல் மருத்துவம், இயந்திரவியல், கட்டிடவியல், விண்வெளி போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்ற இன்றியமையாத ஒரு தேர்வு முறையாகும். இந்த நூலில் சில முக்கியத் தேர்வு முறைகளைக் குறித்து அதன் தொடக்க முதல் தற்போதைய வளர்ச்சி வரை எளிய முறையில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக விண்வெளிக்குச் செல்லும் பொருட்களில் உள்ள குறைபாடுகளை உடைக்காமல் பலவித தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடித்து வருகிறேன். அப்படி நான் செய்து வரும் தொழில்நுட்பத்தையும், மருத்துவமனையில் சந்திக்கும் இது போன்ற தொழில்நுட்பத்தையும் தமிழ் மொழியில் படித்தது வித்தியாசமான அனுபவம் ஆகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருந்தது. முனைவர் சசிக்குமார் இது போன்று மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்து எளிய தமிழில் பல படைப்புகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்.

    பெ.கார்த்திகேயன்
    விஞ்ஞானி, சேதமில்லா சோதனை செய்யும் துறை (NDT), இஸ்ரோ

Add a review

Your email address will not be published. Required fields are marked *