வெற்றியை நோக்கிப் பயணப்பட முறையான திட்டமிடுதலும் அதைச் சிறந்த முறையில் செயல்முறை படுத்துவதும் மிக முக்கியம். இந்தத் திட்டமிடுதல் மிகப்பெரிய ராக்கெட்டை கட்டுவதற்கு மட்டும் பயன்படுவதில்லை அன்றாட வேலையில் தினமும் தேவைப்படுகிறது. திட்டமிடுதல் முறையாக இருந்தால் வேலை பாதி எளிதாக முடிவடைகிறது. மாணவர்களைச் சந்திப்பதற்குப் போதிய நேரம் இல்லாத காரணத்தால் எனது அறிவியல் புத்தகங்கள் மூலம் மாணவர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன்.
இப்படிப் பள்ளிகளில் நூலை அறிமுகம் செய்யும் பொழுது மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு பல அன்பு கோரிக்கைகளை எதிர்கொள்கிறேன். அப்படி அவர்களுடன் பேச ஆரம்பித்தபோதுதான் எனக்கென்று தனியாக ஒரு வழியை நான் பின்பற்றியதும் அந்த வழி என்னை இன்று நல்ல ஒரு இடத்தை அடைய செய்ததையும் என்னால் உணர முடிந்தது. அதனால் அறிவுரை புத்தகமாக ஏதும் கூறாமல் பள்ளிப் பருவத்தில் இருந்து தற்சமயம் நான் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் காலம் வரை எனக்கு உதவியாக இருந்த சில பண்பு நலன்களை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
இது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் போட்டித் தேர்வை எதிர்கொண்டு நல்லதொரு பணியைப் பெற முயற்சிக்கும் அனைவருக்கும் பயன்பெறும் என்ற நோக்கத்தில் இதை எழுதியுள்ளேன். கூறுவதற்கு நிறைய இருந்தாலும் சிறுவர்கள் படிக்க ஏதுவாக 20 தலைப்புகளில் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது ஒரு அறிவியல் புத்தகத்தை ஒரு பள்ளியில் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த போது நண்பர் கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். ஒரு புத்தக ஆசிரியரை விட ஆழமாகக் கதை வடிவில் அறிவியலை கூறுகிறாரே இவர் என்ன பாடம் நடத்துகிறார் என்று எனது அருகில் இருந்த தலைமை ஆசிரியரை கேட்டேன். இவர் தமிழாசிரியர் என்று அவர் கூறிய பதில் இன்னும் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. எனது அறிவியல் எழுத்தை உள்வாங்கிப் படித்து, நூல் மதிப்புரை வழங்கிவரும் கலைக்கோவன் இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலேயே படித்து அணிந்துரை வழங்கியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களுக்கு உற்ற வழிகாட்டியாகத் தங்களின் பல்வேறு படைப்புகளில் மூலமும் செயல்களின் மூலமும் அறிவியலை வளர்த்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீடாக இந்நூல் வருவது குழந்தைகளை எளிதில் சென்றடைய வசதியாக இருக்கும் என்று உளமாற நம்புகிறேன்.
இ.கலைக்கோவன், ஆசிரியர், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு. –
அடிப்படையில் முனைவர் பெ.சசிக்குமார் அவர்கள் விஞ்ஞானி. அந்த அறிமுகத்துடன் தான் அவருடைய நூலான விண்வெளி மனிதர்களை முதன்முதலில் நான் வாசித்தேன். மீண்டும் மீண்டும் அவர் விஞ்ஞானிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே வாசித்தேன். ஏனென்றால். அவர் எழுத்தில் தேர்ந்த எழுத்தாளருக்கான நடை, ஒரு கதை சொல்லிக்குண்டான மொழி வளமை, மொழியைக் கையாளுவதற்கான இலாவகம் இத்தனையும் இருந்ததோடு கூடுதலாகப் புதிய புதிய அறிவியல் செய்திகளை எளிய நடையில் கொடுக்கிற யுக்தியும் இருந்தது.
எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு இது எளிது. ஆனால் ஒரு விஞ்ஞானிக்கு கைவரப்பெறுவது கடினம், அனால் விஞ்ஞானி சசிக்குமார் அவர்களின் எழுதில் அதைக்கண்டேன். அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருப்பவன் என்ற முறையில் அவர் அளித்த வாய்ப்பு தான் இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு.
வகுப்பறைச் செயல்பாடுகளில் எத்தனையெத்தனையோ தத்துவஞானியரும், கல்வியாளர்களும் எவ்வளவோ விளக்கங்களும் வரையறைகளும் கருத்துகளும் கொடுத்த பின்னும் ஏதோ ஒரு நிறைவிலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது இருக்கவும் செய்யும். ஏனென்றால் கல்வி என்பது வளர்நிலை இயக்கம். தேக்கமோ முடிந்த முடிபோ அல்ல. கற்றலுக்கான அடிப்படை விதி என்பது ஒன்றுதான் என்றாலும் அதற்குள்ளான கூறுகள் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றம் வரவேற்கத்தக்கதும் அவசியமானதும் கூட. அப்படியான வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் சிக்கல் வரும். புதிது புதிதாகச் சவால்கள் எழும். அது எப்பக்கம் இருந்து வரும் அதை அப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் திறமை. அந்தச் சவாலை தீர்த்து வைக்கப் புதிய கோணங்களும் பார்வைகளும் அவசியம் ஆகிறது.
ஒரு ஆசிரியருக்கு அது எளிமையாகச் சமாளிக்கக் கூடிய காரியம். ஆனால் விஞ்ஞானிக்கு? ஆம் விஞ்ஞானி சசிக்குமார் அவர்களுக்கும் மாணவர்களின் சவால்களைக் கையாளும் திறன் சுலபமாக வந்திருக்கிறது. இந்தப் புத்தகமே அதற்குச் சாட்சி. தன் வாழ்நாளில் தான் சந்தித்த பலதரப்பட்ட குழந்தைகளின் வினாக்களுக்கு விடையளித்து விடையளித்து அந்தத் திறனை வளர்த்துக் கொண்டார் விஞ்ஞானி.
நூலின் உள்ளடக்கப் பிரிப்பு முறையே தேர்ந்த ஆசிரியர் மாணவனின் உளவியல் புரிந்து எழுதியது போன்றுதான் அமைந்துள்ளது.
“காலம் பொன் போன்றது” என்ற வரியில் எனக்கு உடன்பாடில்லை. அது சரிதான் என்பதை இந்நூலின் ஓரிடத்தில் சசிக்குமார் கூறியிருக்கும் செய்தியிலிருந்து தெளிந்து கொண்டேன்.
‘தாமதமாகச் சென்றால் பெரிய இழப்பு ஏற்படும் என்று தெரிந்தால் மட்டுமே சிலர் தவறாமல் செல்கின்றனர். உதாரணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு விமான டிக்கெட்டை வாங்கும் நபர் தாமதமாகச் சென்றால் விமான நிலையத்திற்குள் உள்ளே செல்ல முடியாது என்று அவர் மனதிற்கும் பலமுறை சொல்லிக் கொள்கிறார். அதனால் சரியான நேரத்தில் செல்கிறார். ஆனால் அதே நபர் வேறு இடங்களில் இந்தக் காலம் தவறாமையைப் பயன்படுத்துவது இல்லை”.
காலம் கூடப் பணத்தால் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அது தவறு. காலம் திரும்பப்பெற முடியாதது என்பதை மாணவர்களுக்குப் புரியும்படி எளிமையான உதாரணத்தால் சொல்லிச் செல்கிறார் சசிக்குமார் அவர்கள்.
ஒரு மனிதன் தான் செய்கிற குறைகூட மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது என மறைப்பது பெரும் கேடு. தன் மனத்துக்கும் அறிவுக்கும் தெரிந்து ஒன்றைத் தவறென உணர்ந்தால் அதைச் சரி செய்வதே சிறப்பு. மாணவர்கள் தாம் செய்வதை ஆசிரியர் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என நினைத்துச் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது அல்ல சரியான முறை. மாறாகச் சரியான முறை என்பது, யாரும் கவனிக்காவிட்டாலும் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே ஆகும். தன் சூழலைத் தான் உணர்ந்து நடக்க வேண்டும் என்று ஒரு சிற்பியின் வாழ்வை எடுத்துக்காட்டி நூலில் விளக்கியிருக்கும் இடம் அருமை.
நூலின் சில முக்கியக் கருத்துகளை அட்டவணைப்படுத்தியும் முக்கோண வடிவத்தில் எளிமையாகப் புரியும்படியும் சொல்லியிருப்பது அழகு. சின்னச் சின்னக் கணக்குகளும் சமன்பாடுகளும் வாழ்வியலோடு ஒப்பிட்டு இந்நூலில் பேசியிருப்பது ஆகப்பெரும் பலம்.
ஒரு ஆசிரியர் நண்பனாக மாறி மாணவரின் தோள்மீது கைப்போட்டு நடந்து செல்லும் போது அந்த மாணவனுக்குள் எவ்வளவு நெறுக்கமாக மாறிப் போகிறாரோ அப்படியான ஒரு நெருக்கம் இந்த நூலைப்படிக்கிற ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்படும்.
வெறுமனே மாணவனை உற்சாக மூட்டுவதும் வெற்றிக்கு வழிகாட்டுவதும் என்று மட்டும் இந்த நூலை கூறிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் மாணவர்கள் படிக்கும் முன்பு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்நூலைப் படிக்க வேண்டும். மாணவர்களுக்கான ஐயம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அவர்களைக் கையாள்வது எளிது. அதற்கேற்ப மொத்த சமூகத்திற்கான நூலாக இதைப் படைத்திருக்கும் எழுத்தாள விஞ்ஞானி சசிக்குமார் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
– இ.கலைக்கோவன்
– ஆசிரியர், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.
செ.செ.சிவகுமார், மாவட்ட மைய நூலகர் கரூர் –
எனக்கு இல்லை லக்கு என நினைப்பவரை எட்டும் தூரத்தில் இருக்கிறது இலக்கு என உணர்த்தும் முனைவர் பெ.சசிக்குமாரின் ‘கையெட்டும் தூரத்தில் இலக்கு’ உண்மையிலேயே ஒவ்வொரு மாணவருக்கும் உற்சாகம் தரும் சுடர் விளக்கு. மாணவரை மையப்படுத்தி அவர்தம் புரிதலை எவ்வாறு மேன்மைப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்குப் பல தலைப்புகளில் ஆசிரியர் தரும் விளக்கம் படிப்பில் த(ட)டுமாறும் ஒவ்வொரு மாணவருக்கும் கலங்கரை விளக்கம். பாடத்தைச் சூத்திரங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புரிதல் மூலம் கற்கும் சூட்சமத்தை சுவையாக அளித்திருப்பது சிறப்பு. காலந்தவறாமை, நேர்த்தி இவைகள் சொல்லும் முனைவர் பெ.சசிக்குமாரின் கீர்த்தி. தான் முற்றிலும் உணர்ந்ததை உரைத்து மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியும் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் மாணவருக்கு உபாத்தியாயங்கள். பயத்தைப் போக்கி, கற்றலை உயர்த்தி, வளர்ச்சியை நாட நேரத்தை ஒதுக்கி, மனதைச் செலுத்தி, பாடத்தை மனதில் பதுக்கும் யோசனைகள் மாணவருக்குத் தேவையான ஆலோசனைகள். தலைப்புத் தருகிறது எனக்கும் மலைப்பு. மேலும் படிக்கப்படிக்கத் தெரிகிறது அன்னாரின் உழைப்பு. வியப்பின் உச்சியில் நின்று வாழ்த்துகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்கட்டும் என்று.
நன்று
செ.செ.சிவகுமார்,
மாவட்ட மைய நூலகர்
கரூர்
கி.பார்த்தசாரதி ரயில் ஓட்டுநர் சென்னை –
நான் சமீபத்தில் படித்த புத்தகம் கையெட்டும் தூரத்தில் இலக்கு. இது பற்றி நமது தமிழர் அன்பின் ஐந்திணை குழுவில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எப்போதுமே எளிய பின்னனியைக் கொண்ட மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே எழுதும் இந்த நூலாசிரியரின் நூல்கள் சிலவற்றைத் தொடர்ந்து வாசித்து அறிந்து கொண்டேன். இந்நூலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்நூல் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமின்றிப் புதிய தொழில் முனைவோர், படித்து முடித்து விட்டுப் புதிதாகப் பணியில் சேர்ந்தோர் என எந்த வயதினருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கருதுகிறேன்.
மாணவர்களுக்கு அறிவுரை கூற Motivational speech என்று எண்ணிலடங்கா உரைகள் பதிப்பிலும் இணையத்திலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அறிவுரை என்றவுடன் பின்னங்கால் பிடரிபட ஓடுபவரைக்கூட நிறுத்தி சக தோழனாகத் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து “நம்மாலும் முடியும்” என்று நம்பிக்கை கொள்ள வைக்கிறது இந்நூல். ஐம்பது வயது கடந்து படிப்பவர்களைக் கூட, மீண்டும் சிறுவனாக மாறி இவற்றைத் தொடர்ந்துக் கடைப்பிடித்து முன்னேற ஆசை ஏற்படுத்துகிறது இந்நூல்.
கல்விக் கொள்கை பற்றிய தற்கால விவாதங்களில் எல்லாவற்றிற்கும் போட்டி தேர்வுகளைக் கூறுவதையும் அதனைப் பலரும் எதிர்ப்பதையும் நாம் பார்க்கலாம். சமமற்ற சமூக, பொருளாதாரச் சூழலில் வளரும் குழந்தைகள் போட்டித் தேர்வுகளைச் சந்திப்பதில் உள்ள சிக்கல்கள், வணிகமயமான ஊக்குவிப்புப் பயிற்சித் தொழில் ( Coaching Industry), அதற்கு ஏற்ப செலவிட முடியாத ஏழை எளிய மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை அடைவது எவ்வாறு என்ற கேள்விகள் தொடர்கின்றன. அத்தகைய எளியவர்களுக்கான பிரத்யேகமான நூலாக விளங்குகிறது கையெட்டும் தூரத்தில் இலக்கு புத்தகத்தின் தலைப்பு மட்டுமின்றி அட்டைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளது.
எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு நமக்குப் பல்வேறு திறமைகள் அவசியம். பொதுவாகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது சுலபம். இந்தப் பல்வேறு திறமைகளைப் பட்டியலிட்டு அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும், இலக்கை அடையத் தடையாக உள்ள திறன்குறைவுகளை நுணுக்கமாகச் சுட்டிக் காட்டி, அவற்றைக் களைய எளிதாகப் பின்பற்றக் கூடிய ஆலோசனைகளையும் கூறுகிறது இந்நூல். கடினமான இலக்குகளை அடைய அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் அதற்கும் சோதிடம் கூறும் இக்காலத்தில் இலக்கை அடைய அறிவியல் வழிமுறைகளை சுட்டுகிறது இந்நூல்.
காலந்தவறாமை அனைவரும் அறிந்த அடிப்படை பண்புநலன் என்ற போதிலும் வேறு எந்த இடத்திலும் அதனைப் பின்பற்றாதவர் கூட, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விமான டிக்கெட் பெற்று விமான நிலையம் செல்லும்போது காலதாமதமாகச் சென்றால் விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் பெரிய இழப்பு ஏற்படும் எனும்போது மட்டும் காலந்தவறாமையைக் கடைப்பிடிக்கிறார்.
தாமதமாகச் சென்றால் உள்ளே அனுமதி இல்லை என்று மனதிற்குப் பலமுறை சொல்லிக் கொள்கிறார். அதனால் சரியான நேரத்தில் செல்கிறார் என்ற விளக்கம் சிந்திக்கத் தக்கது.
வீட்டு வேலைக்காரப் பெண்ணான வில்லியமினா ஃபிளமிங் செய்வன திருந்தச் செய்வதால் வான் அறிவியலாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள கதையும் சிந்திக்கத் தூண்டுகிறது.
நமது வேலைகளில் அவசரமாக அல்லது நிதானமாக செய்ய வேண்டியவை மற்றும் முக்கியமாக அல்லது சாதாரணமாகச் செய்ய வேண்டிய வேலைகள் எனப் பகுத்து அணுகுதல் குறித்த யோசனைகள் மாணவர் பருவம் மட்டுமின்றி வாழ்க்கை முழுவதும் பயனளிக்கும் உத்தியாகும்.
கதை வடிவ உருவகம், பல்வேறு நிலை கற்றல் பிரமிடு ஆகியவை கற்றலில் ஆற்றும் பங்கை விளக்குகிறது.
படிப்பிற்கு அப்பால் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்தலின் அவசியம் மற்றும் அதன் பலன், ஒப்பீட்டு முறையில் நினைவில் கொள்ளுதல், சொந்தக் குறிப்பேடுகள் பராமரித்தல் மற்றும் பலரும் கூறும் யோசனைகளில் நமக்குச் சரிப்பட்டு வரும் சூத்திரத்தை கண்டறிதல் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளது.
நேனோ தொழில்நுட்ப உருவாக்க பாணியில் எளிதில் அடையும் சிறிய இலக்குகளாகப் பிரித்துப் பெரிய அளவிலான இலக்கை அடைதல், பயம் எனும் எதிரியை கையாளும் முறை மற்றும் விளையாட்டு/ உடற்பயிற்சி நமது படிப்பிற்கு உதவும் விதம் ஆகியவையும் விவரிக்கும் வேளையில் தொலைக்காட்சி மற்றும் கைபேசி விளையாட்டுகள் அந்த வகையில் உதவாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது இந்நூல். இறுதியாகத் தொழில்நுட்ப உதவி எனும் பகுதியில் கைபேசி எனும் உபகரணத்தை எவ்வாறு நமது கற்றலுக்குப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரைகளும் , 80சதவீத மக்கள் அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை என்றும் விளக்குகிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் எளிய பின்னணியுடையவர்களும் எவ்வளவு கடினமான இலக்குகளையும் அடைய தனது வெற்றிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஆசிரியர். இஸ்ரோ விஞ்ஞானி யாகவும் எளிய நடையில் எழுதும் எழுத்தாளராகவும் விளங்கும் ஆசிரியரின் அறிவியல் வழிமுறையில் கையெட்டும் தூரத்தில் உள்ளது இலக்கு.
நன்றி
கி.பார்த்தசாரதி
ரயில் ஓட்டுநர் சென்னை