தரைவழிப் போக்குவரத்தில் முக்கிய இடம்பிடிப்பது தொடர்வண்டிப் போக்குவரத்து. குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம் என்றால் உலகம் முழுவதும் தொடர்வண்டி முதன்மை பெறுகிறது, குழந்தைகளுக்குக் குதூகலம், முதியவர்களுக்குச் சவுகரியமான பயணம், பணியில் இருக்கும் மனிதர்கள் தேவையான அளவு ஓய்வு எடுத்து அடுத்த நாள் வேலையைச் செய்ய உதவும் பயணம் என்று தொடர்வண்டிப் பயணத்தில் பயன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
உலகின் முதன்மை போக்குவரத்து முறைகளாக உள்ள நீர், நிலம் மற்றும் ஆகாயப் போக்குவரத்தில் ஏன் தொடர்வண்டி முக்கியம் பெற்றுள்ளது என்பது பலவகையில் விடைதெரியாத வினா. முதல் முதலாகத் தொடர் வண்டியில் ஏறும் குழந்தைகளுக்கு எண்ணற்ற சந்தேகங்கள் உருவாகும். சுட்டிக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோரும், தாத்தாவும், பாட்டியும், மாமாவும் என அனைவரும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல திணறுவதைத் தொடர்வண்டியில் பயணம் செய்யும் நாம் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கும் ஒரு நிகழ்வு.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி என்ன இருக்கிறது, எப்படி இவை இயங்குகிறது என்று குழந்தை மனதோடு அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் தொடர்வண்டி ஒரு அதிசயமே. தொடர்வண்டியின் வரலாறு என்ன ? தொடர்வண்டி ஓட்டுநரின் வேலை என்ன? இரும்பாலான சக்கரம் ஏன் தேவைப்படுகிறது? பெட்டிகள் ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன, பேருந்து இயந்திரத்திற்கும் பல பெட்டிகளை இழுக்கும் தொடர்வண்டி இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, இருப்புப்பாதை எப்படி அமைக்கப்படுகின்றது, இரவில் சுகமாக நாம் தூங்கி பயணத்தைத் தொடர வேலை செய்யும் மனிதர்கள் யார்? நாம் பாதுகாப்பாகப் பயணம் செய்ய என்னென்ன பாதுகாப்பு விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விகள் நம் மனதிலும் எழும்.
தொடர்வண்டிப் பயணம் குறைந்த செலவில் செல்லும் பயணமா ? அல்லது குறைந்த ஆற்றல் செலவில் செல்லும் பயணமா? அதிவேக தொடர்வண்டி இயக்குவதில் என்ன சிக்கல்? ஏன் மிதக்கும் தொடர்வண்டி ஆராய்ச்சியில் இருக்கின்றன என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இப்படியாக, நமது அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத போக்குவரத்தாக இருக்கும் தொடர் வண்டியைப் பற்றிய நாம் அறியாத பல அதிசயங்களை அலசும் நூல் இது. தொடர்வண்டி உருவாகிய வரலாறு அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் எப்படிக் குறைந்த ஆற்றல் செலவினத்தில் பயணப்படுகிறது போன்ற செய்திகளை இந்தப் புத்தகம் உற்று நோக்குகிறது. பாதுகாப்பான பயணத்திற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகளும் அதற்காக இரவு பகலாக முழு நேரமும் உழைக்கும் தொழிலாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இந்த நூல் இருக்கும். தினமும் கோடிக்கணக்கான மக்களையும், பல ஆயிரம் டன் சரக்குகளையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் இந்தப் போக்குவரத்தைப் பற்றி வயது பேதமின்றி நமக்கு இருக்கும் எண்ணிலடங்கா கேள்விகளுக்குப் பதில் காண விழையும் சிறிய முயற்சியாக இந்தப் புத்தகம் இருக்கும் என்று நம்புகிறோம்.
ப. கோபாலன் மேனாள் உதவிப் பொது மேலாளர், அணு எரிபொருள் வளாகம், ஹைதராபாத். –
முதலாம் தொழிற்புரட்சி தொடங்கியது 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில். அது நாள் வரை விவசாயம் சார்ந்த, கைவினைத் தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பானது இயந்திரங்களைப் பயன்படுத்திப் பொருள்கள் உற்பத்தி, போக்குவரத்து, வர்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இயந்திர முறைக்கு மாறத்தொடங்கியது. இக்காலக் கட்டத்திய அதிமுக்கிய கண்டுபிடிப்புதான் ஜேம்ஸ் வாட் அவர்களின் நீராவிப் பொறி. நாம் பள்ளியில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்ற இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனக் கருதப்படுவதாகப் படித்திருக்கிறோம்.
தற்காலத்தில் வளர்ச்சியடைந்த தொடர்வண்டிச் சேவைகளை உரிமையுடன் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய தொழில்நுட்பங்களை ஆழ்ந்து சிந்திப்பதில்லை. பலசமயங்களில் தொடர் வண்டிகளைப் பற்றிச் சிறுவர்கள் எழுப்பும் வினாக்களுக்குச் சரியான விளக்கம் கூற இயலாத நிலையில் உள்ளோம் என்பது தான் நடைமுறை மெய்மை. நண்பர் ஹரிகிருஷ்ணன் அவர்களும் இத்தகைய நோக்கில் ஆலோசித்திருக்க வேண்டும். தொடர் வண்டிப் பொறியாளரான அவர் மனதில் தான் அறிந்த தொழில் நுணுக்கங்களில் சில அடிப்படையான விபரங்களை எளிய முறையில், முக்கியமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான் நூல் வெளியிட விழைந்தார் என்று கருதுகிறேன். தரக்கட்டுப்பாடு அறிவியலாளர் முனைவர் பெ.சசிக்குமார் அவர்களும் நூலாக்கத்தில் இணைந்து மெருகேற்றியுள்ளதால் இந்நூல் மேலும் சிறப்பைப் பெறுகிறது.
நூலின் முன்னுரையில் ஆசிரியர்கள், தொடர் வண்டிகளைப் பற்றி நமக்கு இருக்கும் எண்ணிலடங்கா கேள்விகளுக்குப் பதில் காண விழையும் சிறு முயற்சி என்று குறிப்பிட்டிருந்தாலும், தொடர்புடைய பல அரிய செய்திகளையும் விவரித்துள்ளார்கள். இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஊர்களின் ‘பின் கோடு’ அறிமுகத்துக்குக் காரணமான நம் மதுரை மாநகர், தொடர்வண்டியில் ஒரு நபருக்குத் தேவைப்படும் இருக்கை இடவசதியைக் கணக்கில் கொண்டு விண்வெளிக் கலத்தில் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு, கார்களில் ‘உள் எரி இயந்திரங்களை’ இயக்கும் டீசல் தொடர்வண்டிப் பொறிகளில் முதல் கட்டமாக மின்சாரம் தயாரிக்கத்தான் பயன்படுகிறது என்ற விபரம், தார் வழிச் சாலைகளில் கார்கள் செல்லும்போது செலவிடும் உராய்வு விசையில் பாதிகூடத் தேவைப்படாத இரும்புச்சக்கர இருப்புப் பாதை அமைப்பு, இரண்டு மஞ்சள் விளக்கு சிக்னல் ஒரு சேர எரிவதன் எச்சரிக்கை விபரம், தொடர் வண்டி ஓட்டுனர் மேலாளர்களிடையே நடைபெறும் சமிக்ஞைகள், இருப்புப்பாதயை ஒட்டிய மின் கம்ப எண்கள் சொல்லும் செய்தி, அதி நவீன மின்காந்தப்புலன் (Maglev) மற்றும் ஹைபர் லூப் (Hyper loop) தொழில் நுட்பம் என்று ஏராளமாக வியப்புச் செய்திகள் ஆங்காங்கே பொருத்தப் பெற்றிருப்பது நூலின் சுவாரசியத்தை வளர்க்கிறது. “ரயிலே ரயிலே” என்ற தலைப்பு நூலுக்கு மிகப்பொருத்தம் என்பதில் மிகையில்லை.
சமீபத்தில் ஒரு தொடர் வண்டி விபத்தில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டு இருப்பதைச் செய்திப்படமாகப் பிரசுரித்து, கூடவே பெட்டிகள் எல்.எச்.பி வகையைச் சேர்ந்ததாய் இருந்திருந்தால் இப்படி நேராமல் பெட்டிகள் கீழே விழுந்திருக்கும் என்றெல்லாம் செய்தித்தாளில் போட்டிருந்தார்கள். பலருக்கு புரியாத இதுபோன்ற செய்திகள் இந்நூலைப் படித்தால் புரிந்துவிடும் என்பது உறுதி. இப்படியாக ஊடகங்களில் கையாளப்படும் தொடர் வண்டி சம்பந்தப்பட்ட கலைச் சொற்களை மக்கள் புரிந்துகொள்ளும் விதமாகவும், மாணவர்கள் இதைப்பற்றி மேலும் விபரங்களைச் சேகரிக்கத் தூண்டும் வகையிலும் அமைந்த இந்நூல் சிறப்பான ஒன்று.
ப. கோபாலன்
மேனாள் உதவிப் பொது மேலாளர், அணு எரிபொருள் வளாகம், ஹைதராபாத்.
கி.பார்த்தசாரதி ரயில் ஓட்டுநர், சென்னை. –
ரயிலே ரயிலே
வரலாறு- அறிவியல்- தொழில்நுட்பம்
நூல் அறிமுகம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் ரயில் பயணத்தில் அனைவருக்கும் எழும் எண்ணற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது இப்புத்தகம். மிக முக்கியமாக தமிழில் ரயில் குறித்த விரிவான அறிமுக நூலாக வெளிவந்துள்ளது சிறப்பானது. தொடர்வண்டி உருவான கதையில் நீராவி என்ஜின்கள் தொடங்கி எதிர்காலத்தில் வர இருக்கும் அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) வரை அனைத்தும் விவரிப்பது மட்டுமின்றி அவற்றின் பின் உள்ள அறிவியல் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் முக்கியமான பொதுப் போக்குவரத்தான ரயில்வே எவ்வாறு இயங்குகிறது? என்பது அந்த துறையினர் தவிர மற்ற பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தண்டவாளங்கள், லோக்கோமோட்டிவ், கோச் & வேகன்கள், சிக்னல், உயர் மின் அழுத்தம், கட்டுப்பாட்டு அமைப்பு, நிர்வாக அலுவலகம் என்று பல பிரிவு ரயில்வே ஊழியர்கள்கூட மற்ற பிரிவுகள் குறித்து மிகவும் விரிவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றுக்கு விடை தரும் இந்நூல். முதல் முறையாக ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு, பயணச்சீட்டு நடைமுறைகளைக் கூட விவாதித்து இருப்பது நல்ல அம்சமாகக் கருதுகிறேன்.
பேருந்தில் பயணம் செய்வதற்குப் பதிலாக இது போன்ற தொடர் வண்டியில் பயணம் செய்வதால் பொதுமக்களுக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கிறது. பெருமளவு பேருந்து மற்றும் இரயில் போன்ற பொது போக்குவரத்தையே நாம் மேற்கொண்டால் எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து மீளலாம் மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்நூல். மேலும் இருப்புப்பாதையை கேட் சாத்தியிருக்கும் பொழுது கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். நம் மக்கள் ஏதோ சாலையை கடப்பது போன்று தொடர்வண்டி வரும் நேரத்திலும் இருப்புப் பாதையை கடப்பதை பார்க்கலாம்.
இதிலிருந்து நமக்கான பாடம் எக்காரணம் கொண்டும் இருப்புப்பாதையை கடக்கக்கூடாது, சுரங்கப்பாதையோ, மேம்பாலமோ என்ன இருக்கிறதோ அதைத்தான் நாம் பயன் படுத்தி கடக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் சமூகக் கடமை ஆகும். தொடர்வண்டி சக்கரங்கள், இருப்புப்பாதை அமைப்புக்கள் மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையை மருத்துவர் அல்ட்ராசோனிக் அலைகளைச் செலுத்தி கண்டுபிடிப்பதைப்போல் இருப்புப் பாதையில் உள்ள தண்டவாளங்கள் விரிசல் அடையாமல் நன்றாக இருக்கின்றன என்பதை அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இருப்புப்பாதை பொறியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர் என்பது சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மட்டுமின்றி நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள விபரங்களையும் விவரிக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு ரயில் நிலையமும் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைக் கூட பெயர் பலகையில் அறியமுடிகிறது என்பது போன்ற பல சுவையான செய்திகளுக்கு பஞ்சமில்லை.
ரயில்வே செய்தி மட்டுமின்றி அஞ்சல் துறை சார்ந்த செய்திகளையும் கொண்டுள்ளது இந்த புத்தகம். பின்கோடு முறை 1972ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முக்கியமாக வித்திட்ட நகரங்களில் ஒன்று நம்மூர் மதுரை. .
பொதுவாக சக்கரத்தின் பயன்பாடுகள் அறிந்த பின்னர் *மனித நாகரிகம் பெரும் பாய்ச்சலில் முன்னேறியது என்பர் வரலாற்றியலாளர்கள். ரயில் தண்டவாளம் மற்றும் சக்கரங்கள் குறித்தும், சக்கர அமைப்பின் அறிவியல் இயக்கம் குறித்தும் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.
ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐசிஎப்ஃ பெட்டிகள் மற்றும் LHB பெட்டிகள் வேறுபாடுகள் அவை எவ்வாறு விபத்து சமயங்களில் உயிரிழப்புகளை குறைக்கின்றன என்று தொழில்நுட்ப காரணங்களுடன் ஆசிரியர்கள் விளக்குவது சிறப்பானது.
அறிவியல் விளக்கங்களிடையே ரயிலில் கழிப்பறை ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு வித்தியாசமான தகவலாக உள்ளது. பல்வேறு புகைப்படங்கள் மாணவர்களுக்கு புரிதலை மேம்படுத்தும் விதமாக உள்ளது.
ரயில்வே துறை பல தொழில்நுட்ப மாற்றங்கள் அடைந்தாலும் தொழிலாளர்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் என்பது யாவரும் அறிந்ததே. ரயில்வேயில் எத்தனை விதமான தனித்துவமான தொழிலாளர்கள் என்று நான் வியந்ததுண்டு.
லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் தொடர்வண்டியின் பாதுகாப்பான பயணத்திற்கு இரவு பகல் பாராது இயற்கைக்கு மாறாக ஓய்வின்றி உழைக்கிறார்கள் என்ற விவரங்கள் அனைவருக்கும் தொழிலாளர்களின் மீதான மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
குறிப்பாக தமிழகத்தில் நமது இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மாநில உரிமைகளை நிலைநாட்ட நாம் போராடிவரும் சூழலில் நமது இளைஞர்களின் உள் வளத்திறமைகளை (Core Competencies) வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இத்தருணத்தில் சிறுவர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ரயில்வே துறை சார்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கேள்வி பதில் பாணியில் விவரங்களைத் தொகுத்து அளித்துள்ளனர் நூலாசிரியர்கள். அவர்களின் இம்முயற்சி பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று எண்ணுகிறேன். இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவர். நமது ரயில்வே லோக்கோ ஆய்வாளர் சு.ஹரிகிருஷ்ணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியான முனைவர். பெ.சசிகுமார்.
திரு.சசிகுமார் ஏற்கனவே விண்வெளி மனிதர்கள், வனவாசிகள், தரமே தாரக மந்திரம் மற்றும் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த விண்ணூர்தி என பல புத்தகங்களை எழுதியுள்ளார். சில ஆண்டுகளுக்கு நண்பர்கள் மத்தியில் வாசகர் வட்டம் என்ற அமைப்பு நடத்தி பல கட்டுரைகள் எழுதி வந்த ஹரி பல திறனாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முதுகலை பட்டம் மற்றும் தற்போது ஆய்வு மாணவராகத் தொடரும் ஹரிகிருஷ்ணன் இப்போது எழுத்தாளராக உயர்ந்துள்ளார். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
கி.பார்த்தசாரதி
ரயில் ஓட்டுநர், சென்னை.