சாதாரணமான உரையாடலில் இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா? என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும். ஏவு வாகனம் என்றால் என்ன? என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். மாணவர்களிடையே ஏவு வாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சில வருடங்களாகக் கல்லூரி மாணவர்களுக்கு உலக வானியல் வார விழா கொண்டாட்டங்களின் சார்பாக வகுப்புகள் எடுத்து கலந்துரையாடி இருக்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில் இடைநிலையில் படிக்கும் மாணவர்களிடம் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றிப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. வளர்ந்துவிட்ட மாணவர்களைவிடப் பதின் பருவத்து மாணவர்களிடையே ராக்கெட்டை பற்றிப் பல சந்தேகங்கள் இருந்தன. நான் பேசிய உரையின் நேரத்தைவிட அதிகமான நேரம் அவர்களிடமிருந்து கேள்விக்கணைகளை அக மகிழ்ச்சியோடு சந்தித்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.
ஒவ்வொரு முறை வகுப்புகள் எடுக்கும் பொழுதும் கடினமான இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு இலகுவாக விளக்கவேண்டும் என்று என் உரையைச் சுய பரிசோதனை செய்துகொண்டு, அன்றாட வாழ்வில் பள்ளிப்பருவ மாணவ-மாணவிகள் கடந்து வரும் பொருட்கள் மற்றும் செயல்கள் கொண்டு இந்தத் தொழில்நுட்பத்தை விளக்க முயன்றேன்.
எல்லாப் பள்ளிகளுக்கும் சென்று மாணவ-மாணவிகள் பேச இயலாது. ஆகையால் புத்தகத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் சந்திக்க எண்ணியதே இன்று புத்தகமாக உருவாகியுள்ளது. ஏவு வாகனத்தைப் பற்றிய என்னுடைய வகுப்புக்களை மையமாகக்கொண்டு அத்தியாயங்களை உருவாக்கியுள்ளேன். இங்கே நான் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் எனது உரையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது என்றால் மிகையல்ல.
ஏவு வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளைப் பள்ளி சிறார்களிடமும் வெகுஜன மக்களிடமும் நான் விவரித்த நடைமுறையைக் கையாண்டு இந்த உரைநடையை எழுதியுள்ளேன். சமன்பாடுகள் ஏதுமில்லாமல் ஏவு வாகனத்தைக் கதையாக, படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
புவியின் தரைப்பகுதியில் இருக்கும் ஒரு பொருளை புவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலைநிறுத்தப் பயன்படும் வாகனத்தைத் தான் ஏவு வாகனம் என்கிறோம். அதன் தொழில்நுட்பம் இந்தப் புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. நிலைநிறுத்தப்பட்ட வட்டப்பாதையில் செயற்கைக்கோள் என்ன வேலை செய்கிறது அங்கே மனிதன் வாழ்வதற்கான சவால்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள எனது “விண்வெளி மனிதர்கள்” புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
த வி வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார் புது டெல்லி –
பாதி அளவு நீர் நிரம்பிய பாட்டிலை மேலே வீசி எறியுங்கள். கையில் பாட்டில் இருக்கும்போது நீர் கிழ் பகுதியில் இருக்கிறது. ஆனால் வியப்பாக மேலே எறிந்த பாட்டிலில் மேல் நோக்கிய விசை காரணமாக நீர் பாட்டிலின் மேற் பகுதியில் இருக்கும். இதே போல மேலே எழும்பும் ஏவு வாகனத்தில் திரவ எரிபொருள் சிலிண்டரின் மேல் பகுதியில் செல்லும்; அந்த எரிபொருள் கிழ் நோக்கிப் பாய்ந்து எரிவறையில் எரிந்து விசை ஏற்படுவது எப்படி?
பக்கவாட்டில் அலுங்கி குலுங்கும் எரிபொருள் விசைகளை ஏற்படுத்தி ஏவு வாகன சலனத்தில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தும் அல்லவா? இதை எப்படி ஏவு வாகன பொறியாளர்கள் சமாளிக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை விவரிக்கும் போதே நமக்குப் பதிலை அறியும் ஆர்வம் தூண்டப்படுகிறது அல்லவா? நமது தேடலை தூண்டும் விதத்தில் பல்வேறு நுட்பமான கேள்விகளை எழுப்பி அதற்குரிய பதிலையும் தருகிறது இந்த நூல்.
பொதுமக்களை அறிவியல் சென்று அடைய வேண்டும் என்றால், கூறும் பொருள் ஆழமும் இருக்க வேண்டும்; சொல்லும் விதமும் ஈர்க்கும் படி அமைய வேண்டும். பரப்புவதில் குறிப்பாக எழுத்து மூலம் பொதுமக்களுக்கு அறிவியல் பரப்புவதில் கதைகள யுத்தியை கடைபிடிப்பது உள்ளபடியே கலியோவில் துவங்குகிறது. ஆங்கிலத்தில் பொதுமக்களுக்கு அறிவியலை எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு ஆற்றிய மேரி ஷெல்லி முதல் பலரும் கதைகள யுத்தியை பயன்படுத்துகின்றனர்.
ஆயினும் இந்த யுத்தியை திறன்படப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. சிறுகதை அல்லது நாவலில் இருக்கும் அதே படைப்பாக்க கூறுகள் வழியே அறிவியலை கூற வேண்டும். இது கத்திமேல் நடப்பது போன்றது. சரியாகக் கையாள வில்லை என்றால் ஒன்று புனைவு சம்பவங்கள் மிகுந்து அறிவியல் ஆழமின்றிப் போகும்; அல்லது ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்வது என்கிற எளிமை நடை புகுந்து உப்புச் சப்பு இல்லாமல் போகும்.
இஸ்ரோவில் பணியாற்றும் அருமை நண்பர், சிறந்த அறிவியல் எழுத்தாளர் முனைவர் பெ.சசிக்குமார் எழுதியுள்ள விண்ணூர்தி என்ற இந்த நூல் கதைகள நடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கட்டுரை போட்டியில் வென்ற சில மாணவ மாணவிகள், அறிவியல் அறிஞர் துணையுடன் ஏவூர்தி தயாரிக்கும் தொழிற் கூடத்தைப் பார்வையிடுகிறார்கள். துறைவாரியாகச் செல்லும்போது அங்கே பொதிந்துள்ள அறிவியலை அறிந்துக்கொள்கிறார்கள்.
மனிதர்கள் மற்றும் பொதிகளை ஏற்றிசெல்லும் வகைவகையான ஏவூர்தி மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டு ஒரு மாணவன் விண்ணுக்குச் செல்லும் பொதியின் அளவு வெறும் கிலோ கணக்கில் இருக்க ஏவூர்தி எடையோ டன் கணக்கில் இருப்பது ஏன் என்று வியக்கிறான். வழிநடத்தும் ஏவூர்தி நிபுணரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறான். வெறும் இருபது கிலோ எடையுள்ள சைக்கிள் சுமார் நூறு கிலோ எடையுள்ள இருவரை டபுள்ஸ் எடுத்து செல்வது முதல் ஆகாய விமானத்தின் எடையில் சிறு பகுதிதான் அதில் பயணம் செய்யும் மனிதர்கள் மற்றும் பொதிகளின் கூட்டு எடை என்பது வரை விளக்கி பொதி விகிதம் (payload ratio) என்கிற தொழில்நுட்ப கருத்தை அருமையாக விவரிக்கிறார் ஆசிரியர்.
இதுபோலவே ஏவூர்தி தொழில்நுட்பத்தை விவரித்து வருவதை நாம் படிக்கும்போது நமது மனதில் சில சந்தேகங்கள் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளைத் தான் கதைகளத்தில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் கேட்கிறார்கள். எனவே வெண்ணையில் செல்லும் கத்தி போல விறுவிறுப்பாக அதே சமயம் ஆழமான அறிவியல் கருத்துக்கள் அற்புதமாக விவரிக்கிறது இந்த நூல்.
தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இடம் விண்வெளி தொழில்நுட்பத்தை விவரித்துப் பேசிய அனுபத்தின் வாயிலாக இந்த நூலை எழுதியுள்ளேன் என்கிறார் பெ.சசிக்குமார். நமது மனதில் எழும் கேள்விகளை முன்கூட்டி கணித்து அதற்கு விடை தரும் பாங்கு உள்ளபடியே மாணவ மாணவியர்கள் இடம் அவர் நடத்திய உரையாடல்களின் அனுபவம் இதற்குக் கைகொடுத்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
குறிப்பிட்ட லாரி வாகனம் குறிப்பிட்ட எடை கொண்ட பொதியை எடுத்து செல்ல முடியும். நாகர்கோயிலிலிருந்து மதுரை செல்ல வேண்டும் என்றாலும்; சென்னை செல்லவேண்டும் என்றாலும் ஏன் டெல்லி செல்ல வேண்டும் என்றாலும் அதன் பொதி சுமக்கும் திறன் ஒன்று தான். ஆனால் ஏவு வாகனத்தைப் பொறுத்த வரை அது ஏந்தி செல்ல இயலும் அதிகப் பட்ச எடை விண்வெளியில் எங்கே செல்ல வேண்டும் என்பதைப் பொருத்து அமையும்.
எடுத்துக்காட்டாகப் பல்கன் ஏவு வாகனம் அறுபத்தி மூன்று டன் எடை கொண்ட பொதியை புவியிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் உயரத்துக்குக் கிழே நிலை நிறுத்த முடியும்; ஆனால் இதே ஏவு வாகனம் புவி நிலை பாதையில் வெறும் இருபத்தி மூன்று டன் எடையை மட்டுமே ஏந்தி செல்ல முடியும். செவ்வாய் கிரகத்துக்குப் பதினாறு டன் எடையை மட்டுமே எடுத்துச் செல்லும். ஏன்? இது போன்ற அருமையான நுட்பமான கேள்விகளுக்கு இந்த நூல் எளிதில் புரியும்படியான விடை தருகிறது. மேலும் பல அடுக்கு ஏவூர்திகளில் ஏன் பொதுவே முதற்கட்ட ஏவூர்தி திட எரிபொருளை கொண்டுள்ளது? ஏவு வாகனம் புறப்படும் போது அதிகமான விசை தேவைப்படும்; இதனைத் திட எரிபொருள் தரமுடியும் எனப் பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூலில் விளக்கம் உள்ளது.
மங்கோலியா சீனாவில் துவங்கிய ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவில் மைசூர் திப்புச் சுல்தானால் செழுமை செய்யபட்டு இரண்டாம் உலகப்போரில் நாசி படையினர் இங்கிலாந்தை தாக்க பயன்படுத்திய செய்தி என விண்ணூர்தி வளர்ந்த வரலாற்றை விவரிக்கிறார். இந்த வரலாறு ஏவுகனை (missile) எப்படி ஏவு வாகனத்திலிருந்து (launch vehicle) வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.
நமது உடல் இயங்க ஆற்றலை தரும் “சர்க்கரையும் பொட்டாசியம் நைட்ரேட்டையும் பயன்படுத்தி ஏவு வாகனம் செலுத்த எரிபொருள் தயாரிக்கலாம்” போன்ற திகைக்கவைக்கும் தகவல்கள், “சைக்கிளை மிதிக்கும் போது நமது உடல் எடையில் அதிகப் பட்சமாக 25 லிருந்து 30 விழுக்காடு வரை நம்மால் விசையை உருவாக்க முடியும். யானை சுமார் 7 டன் விசையை உருவாக்கும்; சாட்ரன் (Saturn-V) ஏவூர்தி ஆயிரம் யானைகளுக்குச் சமமான 3500 டன் விசையை உருவாக்கும்” என்பது போன்ற சுவையான தகவல்கள் இந்த நூல் முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் கிரையோஜெனிக் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் எப்படி வேலை செய்கிறது என நமக்கு அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
கூடுதலாகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் இதனைத் தத்தம் வீடு மற்றும் பள்ளிகளில் செய்து பார்த்து விளங்கிக்கொள்ள உதவியாகக் காற்றடைத்த பலூன் மற்றும் அழுத்தக்காற்று-நீர் கொண்ட பொம்மை ஏவூர்தி செய்வது எப்படி என்பது போன்ற நாமே செய்து பார்த்து விளங்கிக்கொள்ளும் சில எளிய பரிசோதனைகள் இந்த நூலில் விவரித்துள்ளார். இது இந்த நூலின் மேலும் ஒரு சிறப்பு.
மிக உன்னதமான இந்த நூலை தமிழ் உலகுக்கு அளித்துள்ள இதன் ஆசிரியர் நண்பர் பெ.சசிக்குமார் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்; மற்றும் நன்றி. மேலும் இதுபோன்றே மேலும் எளிய நடையில் சுவையான முறையில் அற்புதமான அறிவியலின் பல்வேறு துறைகளைக் குறித்துத் தமிழில் நீங்கள் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுடன் எனது பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மட்டுமல்ல ஏவு வாகனம் எப்படிச் செயல்படுகிறது? செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை இஸ்ரோ எப்படிச் செலுத்துகிறது போன்ற கேள்விகளுக்கு விடையைத் தேடும் பொதுமக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
அன்புடன்
த வி வெங்கடேஸ்வரன்,
முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார்
புது டெல்லி