நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின், உணவு, உடை, இருப்பிடம், என்ற தேவைகளுக்குள் தனது வாழ்வை தொடங்கினான். “தேவையே கண்டுபிடிப்பின் தாய்” என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னுடைய ஒவ்வொரு வேலையையும் சுலபமாகச் செய்வதற்காக ஒவ்வொரு கருவியாகக் கண்டுபிடிக்க ஆரம்பித்தான். விஞ்ஞான வளர்ச்சியில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல அரிய கண்டுபிடிப்புகள் கடந்த 100 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி விட்டன என்றால் அது மிகையல்ல.
இப்படிக் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அவற்றின் தரம் முடிவு செய்ததது. 1950களில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகள் குறைவான நம்பகத்தன்மையுடன் இருந்தன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பொருட்களின் நம்பகத்தன்மை (Reliability) என்ற துறை தோன்றியது.
தனது தேவைகளைத் தானே பூர்த்திச் செய்து கொண்டிருந்த மனிதன், பின்னர்த் தான் சார்ந்த சமூகம் மற்றும் உறவுகள் மூலம் அதைச் செய்து கொண்டான். காலம் செல்லச் செல்ல கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையிலும், சமுதாய வாழ்க்கை முறையும் குறைந்து பலதரப்பட்ட சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் உதயமாயின. அதன் பிறகு சேவைத்துறை தோன்றியது.
இப்படி ஒவ்வொன்றாக மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. முதலில் எப்படியாவது கண்டு பிடித்தால் போதும் கண்டுபிடித்த பொருள் முடிந்தவரை மனிதனின் வேலை சுமையைக் குறைத்தால் போதும் என்ற நிலை மாறி மனித குலத்தின் தேவையை நன்கு அறிந்து அதற்கு ஏற்றார்போல் பொருட்களும் சேவையும் மாறின. இதைச் செவ்வனே செய்வதற்கா பல நிறுவனங்களும் துறைகளும் சந்தையில் இறங்கின. ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு அதிக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை தங்களது சேவையிலும் பொருட்களிலும் நம்பகத்தன்மையை உருவாக்கினர்.
இந்த நம்பகத்தன்மை தான் தரத்தின் முன்னோடியாக மாறியது. இதைக் கொண்டு வருவதற்காகப் பல அறிஞர்கள் பல கோட்பாடுகளை வகுத்து எந்த ஒரு புதிய தொழில் தொடங்குபவரும் அந்தக் கோட்பாடுகளை ஆய்ந்து ஆராய்ந்து தங்கள் தொழிலில் பயன்படுத்தும்போது தரமான பொருட்களையும் சேவையும் கொண்டு வரமுடியும் என்று மனிதகுலத்திற்கு வரையறை கொடுத்தனர்.
நம்மில் பலர் பல தொழில்களைச் செய்கிறோம், நிறுவனங்களில் வேலை செய்கிறோம். இதுபோன்ற பல தரக்கட்டுப்பாடு கொள்கைகள் நமக்கு நிறுவனங்களில் போதிக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் அலுவலகத்திற்கு மட்டுமே உகந்தவை என்று வீட்டிற்கு வரும் பொழுது நாம் அறிந்த தகவல்களை அலுவலகத்திலேயே கழற்றி வைத்து விட்டு வருகிறோம். ஆனால் இப்படிப் பொருட்களையும் சேவையையும் தரமானதாகவும் நம்பிக்கை தன்மை உடையதாகவும் மாற்ற உதவிய அறிவியலாளர்களின் கோட்பாடுகள் நமது அன்றாட வாழ்விலும் ஒரு இனிய வாழ்வை நடத்துவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதைப் பலரும் மறந்து தான் போய் விடுகிறோம்.
இந்தக் கண்ணோட்டத்தில் தரம் உருவான வரலாறை பற்றியும் தரக் கட்டுப்பாடு கோட்பாடுகள் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் நமது குடும்பத்திலும் நாம் வாழும் முறையிலும் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று விளக்குவதே இந்தப் புத்தகம்.
முனைவர் செல்வராஜ் கந்தசாமி –
அணிந்துரை
வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் குறித்து ஆராயும் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதித்துள்ளது வாணிபத்தில் ஒளிரும் ஸ்டார் ரேட்டிங் குறித்த இந்தப் புத்தகம். நுகர்வோர்களாக அனைத்துப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஸ்டார் ரேட்டிங் பார்க்கும் கலாச்சாரம் அதிகம் பரவிவரும் இந்தக் காலகட்டத்தில், “ தரமே தாரக மந்திரம்” என்ற தலைப்பை உடைய இந்தப் புத்தகத்தில் தரம் உருவான வரலாறு மற்றும் அன்றாட வாழ்வில் தரக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அவசியத்தை அலசி உள்ள முனைவர் சசிக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தரம் என்ற சொல்லுக்கு மேன்மை என்று பொருள் கூறுவர். போட்டிகள் நிறைந்த இன்றைய சமூகத்தில் ஒரு நிறுவனம் நிலைபெற்று நின்றிட, அந்த நிறுவனத்தின் மேன்மையான செயல்கள்தான் காரணம். பசிக்குப் புசிக்கும் தின்பண்டங்கள் முதல் பக்திக்குப் பூசிக்கொள்ளும் திருநீறு வரையில் தரமான பொருட்களையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றார்போல் உயர்தரம், முதல்தரம், முற்றிலும்தரம் இவை உயர்த்தும் உங்களின் வாழ்க்கைத்தரம் இது போன்ற வாசகங்கள் பொருந்திய விளம்பர பதாகைகளும் தினம்தினம் நம் கண்முன் வந்துச்செல்கின்றன.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”, என்பதற்கிணங்க நாம் ஓடிஓடி பொருள் ஈட்டுகிறோம். அவ்வாறு ஈட்டிய பணத்தைச் செலவிடுகையில் பதிலுக்குத் தரமான பொருளோ சேவையோ கிடைத்தால் மட்டுமே மனநிறைவு கிடைக்கும். இவ்வாறு மக்கள் தரம் குறித்த பல்வேறு சிந்தையில் ஆழ்ந்திருக்கையில், முனைவர் சசிகுமார் அவர்கள் தரம் குறித்தும், தரக்கட்டுப்பாட்டின் கொள்கைகள் குறித்தும் தகுந்த உதாரணங்களுடன் இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
இதில் பதிவு செய்துள்ள வரலாற்று சான்றுகளும் உதாரணங்களும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், வளரும் தொழில் நிறுவனங்களுக்கும் கிடைத்துள்ள பொக்கிஷம் என்றே நான் கருதுகிறேன். வியாபார நோக்கம் கொண்டு தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு மட்டுமன்றி விபரம் தெரிந்துக்கொண்டு பொருள்வாங்க நினைக்கும் சாமானிய நுகர்வோர்கள் வரையில் அனைவருக்குமே இந்தப் புத்தகம் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
மேலும் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் எப்படி நமது அன்றாட வாழ்வில் பயன்படும் என்பதைப் பள்ளி சிறுவர்கள் முதல் முதியவர் வரை பயன்பெறும் வகையில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளை உதாரணமாகக் கொண்டு கூறியிருப்பது வெகுஜன மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகப் படித்துக் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒரு புத்தகமாகவும் இது இருக்கிறது.
தரக்கட்டுப்பாடு குறித்த பலத்தரப்பட்ட விஜயங்களை ஆராந்து அவற்றைத் தமிழில் எழுத்துக்களாக்கியமைக்கு என் நன்றிகள்.
முனைவர் செல்வராஜ் கந்தசாமி
பொதுச்செயலாளர்,
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், கோயம்புத்தூர்
கி.பார்த்தசாரதி, ரயில் ஓட்டுநர், சென்னை –
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நூல் அறிமுகம்
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
தரமே தாரக மந்திரம்
ஏதோ ஒரு விளம்பர வசனம் என்று கருத வேண்டாம். நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகம். துவக்கத்தில் ஏதேனும் தொழில் முனைவோர் சார்ந்த புத்தகம் என்ற எண்ணத்தில் படிக்கத் துவங்கினேன். ஆனால் படித்து முடித்த பிறகு என் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. சராசரி மனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்ற முடிவுக்கு வந்தேன். எனவே இது குறித்து பலருடனும் பகிர விரும்புகிறேன்.
தரம் என்றால் என்ன? என்று தொடங்கும் இந்நூல் தரம் உருவான வரலாற்றினை விளக்கும்போது மிக சுவாரஸ்யமான கதையாக தொடர்கிறது. தொழிற்புரட்சி மற்றும் உலகப்போர் ஆகியவற்றின் தொடர்நிகழ்வுகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. ஃபிரடெரிக் டெய்லர் உருவாக்கிய உற்பத்திக் கொள்கை ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அதன் குறைவிளைவு என்று தொடரும் வரலாறு குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக வெற்றியை விட தோல்விகளே பல பாடங்களை கற்றுத் தருகின்றன என்ற வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக, இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சின் தொடராக அமெரிக்காவிடம் சரணடைந்த ஜப்பான் போருக்குப்பின் வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றிய வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். பல ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனங்களின் துவக்கத்திற்கு உதவிய B.T.Lyng அவர்கள் எழுதிய WHY I LOVE TO FAIL கட்டுரை நினைவுக்கு வருகிறது.
ஜப்பான், தங்களுக்கு கார் உற்பத்தி கற்றுக் கொடுத்த அமெரிக்கா உட்பட அனைத்து நாட்டினருக்கும் தரத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது பற்றி மிகவும் மனதில் பதியும் விதமாக விளக்கப்பட்டுள்ளது. ஜப்பானியர்கள் தரம் விஷயத்தில் கடைப்பிடித்த கொள்கைகள் ஒரு சமுதாய பண்பாகவே மாறியது பற்றி நாம் அனைவரும் சிந்தித்து செயல்பட தூண்டும் வகையில் ஆசிரியர் விளக்குகிறார்.
உலகின் முதல் ஏவுகணை தயாரித்த ஹிட்லர்தானே உலகப்போரில் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதன் தரக்குறைவு காரணமாகவே அவர் வெற்றியை தனதாக்க இயலவில்லை என்று விளக்கும்போது தரத்தின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.
Out of Crisis எழுதிய டெமிங் மற்றும் ஜூரன் போன்ற தரக்கட்டுப்பாடு நாயகர்கள் பற்றி அறிய முடிகிறது. (Deming’s 14 point Philosophy பற்றி கூகுள் தேடுபொறியில் தேடுக).
தரமற்ற அரிசியை கொடுத்துவிட்டு பிரியாணி சரியில்லை என்று சமையல் தொழிலாளரை எவ்வாறு கடிந்து கொள்ளமுடியும் என்ற உதாரணம் மூலம் ஆசிரியர் மிக எளிதாக விளக்கும் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோ மகிழ்வுந்து பயணம் டயர்கள் தர முன்னேற்றக் காரணமாக நிகழ்வு என்று விளக்கும்போது,
பெரும்பாலும் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பின்புலமாக ஏதேனும் ஒரு கதை/ நிகழ்வு கண்டிப்பாக இருக்கும். அந்த கதை/ நிகழ்வோடு விளக்கப்படும் போது அந்த அறிவியல் நமக்கு நினைவில் நிற்கும், மறப்பதில்லை என்று அறிவியல் அறிவோம் யூடியூபர் ( Youtuber) சாம் அவர்கள் கூறுவது நினைவுக்கு வருகிறது.
நம்பகத்தன்மை, துல்லியம் போன்ற பல Conceptகளை மிக எளிதாக மாணவர்கள் கூட அறிந்து கொள்ள முடிகிறது. முதல் 6 அத்தியாயங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்பும் அல்லது தொழிலில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உபயோகமான தகவல்கள். ஆனால் 7-வது அத்தியாயம் முதல் இப்புத்தகம் மாணவர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்ற எல்லைகளைக் கடந்து அனைவருக்குமான வாழ்வியல் நூலாக மாறுகிறது.
Operation Research என்று ஒரு பாடம் பெரும்பாலான கல்லூரி பாடப்பிரிவுகளில் தற்போது உள்ளது. இரண்டாம் உலகப்போர் காரணமாக உருவானதே இப்பாடம் என்றும் அறிகிறோம். ஆனால் அதனை நாம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது என்று நமது கல்லூரி பாடங்கள் நமக்கு உணர்த்துவது இல்லை. மாறாக நமது இஸ்ரோ விஞ்ஞானியான இந்நூல் ஆசிரியர் சசிகுமார் ஜூரனின் தரக்கட்டுப்பாட்டு கொள்கை நமது அன்றாட வாழ்வில் எவ்வாறு முன்னுரிமை (Priority-ஐ) தீர்மானிக்க உதவும் என்று இணைத்துக் கூறும்போது மிக எளிதாக கடைப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. (The 80-20 Rule of management: Vital Few and Trivial Many என்று கூகுள் தேடுபொறியில் தேடுக)
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஆற்றல் வீணடிப்புகளை ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
5 S ஐந்து எஸ் அல்லது ஐந்து சகரக்கோட்பாடு, பின்வரும் ஐந்து ஜப்பானிய சொற்களின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதி இணைத்த ஒரு குறுஞ்சொல்.
முதல் எஸ்: செய்றி – சீர்பிரித்தல் – வகைப்படுத்து (Sort)
இரண்டாவது எஸ்: செய்டன் – சீரொழுங்கு – நிலைப்படுத்து (Stabilize)
மூன்றாவது எஸ்: செய்ச்சோ – சுத்தம் – சுத்தம்செய்தல்(Shine)
நான்காவது எஸ்: செய்கெட்சு – செந்தரம் – தரப்படுத்து (Standardize)
ஐந்தாவது எஸ்: ஷிட்சுகே – செவ்வொழுக்கம் – நீடிக்கச்செய் (Sustain)
இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குப்படுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும். (தற்போது செங்காப்பு (Safety) என்பது ஆறாவது சகரமாக கருத்தில் கொள்ளப்படுகிறது.)
பொருட்களின் ஒழுங்குமுறைகள் (5S) என்ற தலைப்பில் *பொருட்களை ஒழுங்காக வைப்பதற்கு ஒரு நிமிடம் செலவு செய்யாத மனிதன் அதைத் தேடுவதற்கு ஐந்து நிமிடங்கள் செலவு செய்வான் என்ற ஜப்பானிய பழமொழியுடன் துவங்கும் கட்டுரையில் இவற்றையும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் விதமாக விளக்கி உள்ளார்.
தகுச்சியின் துல்லிய கொள்கை, திறன் அறிந்து செயல்பாடு, தவறை தவிர்த்தல் எனும் Poka Yoke,
என்று பல்வேறு வகையான அன்றாட வாழ்வில் வழிகாட்டும் தரம் சார்ந்த கொள்கைகள் இப்புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் ஆகும். பலவீனத்தை வாய்ப்பாக மாற்ற கூறப்படும் ஜூடோ கதை SWOT கட்டுரையில் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நூலின் ஆசிரியர் முனைவர் பெ. சசிகுமார் இஸ்ரோவின் தரக்கட்டுப்பாடு துறையில் பணியாற்றி வருகிறார். விஞ்ஞான தரவுகளும் கண்டுபிடிப்புகளும் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று விஞ்ஞானிகள் சிந்திக்கும் போதுதான் அவர்கள் வெற்றிகரமாக விளங்குகிறார்கள். எனவே நமது சசிகுமார் அவர்களும் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். தமிழில் அனைவரும் அறியும் விதமாக எழுதியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏
கி.பார்த்தசாரதி,
ரயில் ஓட்டுநர், சென்னை
kpsmas@gmail.com
தரமே தாரக மந்திரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியீடு விலை: 100/- http://www.tnsf.co.in
Selva, Teacher –
வெள்ளம் வருவதற்கு முன்பே அணை போடு செய்வது திருந்தச் செய் நேரம் தவறாமை நம்பகத்தன்மை திரைகடலோடியும் திரவியம் தேடு தேவைக்கு அதிகமாக செய்யும் எந்த ஒரு பொருளும் வேலையும் வீணாக கருதப்படும் என்று கூறியுள்ளார். அப்படி கஷ்டப்பட்டு வாங்கும் பொருளோ அல்லது உற்பத்தியை எப்படி தரமானதாக வாங்க விற்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக ஒரு குழந்தைக்கு புரியும்படி கூறியுள்ளார்.
இப்புத்தகத்தில் ஏழு வகையான உள்ளடக்கம் கொண்டுள்ளது தரம் தரம் உருவான வரலாறு அதன் கொள்கைகள் தரக்கட்டுப்பாட்டு நாயகர்கள் நம்பகத்தன்மை ஆற்றலின் அடைப்பின் ரகசியம் துல்லியம் திட்டமிடுதல் சோதனை என பல்வேறு அம்சங்களைப் பற்றி கூறியுள்ளார் மேலும் இவர் தரம் என்பது எதை வைத்து தீர்மானிப்பது என்று அது ஒவ்வொன்றுக்கும் வேறுபட்டு இருக்கும் என்பதை நிறம் வண்ணம் அழகு ஆயில் செயல்திறன் ஆகியவைகளை வைத்து தரத்தினை கூறியுள்ளார்.
மேலும் இவர் உணவு தேவை பற்றி முதல் பாகத்தில் கூறியுள்ளது நமது எதார்த்த வாழ்வின் அடிப்படை ஒன்றாகும் உணவு உடை இருப்பிடம் ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்டு இருக்கும் ஆகவே இதில் எப்போதும் தரத்தினை பார்க்க முடியாது இதற்கு எடுத்துக்காட்டாக உணவகமும் இரு சக்கர வாகனத்தையும் உதாரணமாக கூறியுள்ளார் மேலும் இப்புத்தகம் எதற்காக படைக்கப்பட்டது என்பது நாம் வாழும் காலகட்டத்தில் எவ்வளவு சேவை நிலையமும் பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு பொருள்களும் உற்பத்தி செய்து தனது வியாபாரத்தை செய்ய போட்டிப்போட்டு கொண்டுள்ளது.
இச்சமயத்தில் நாம் எதை எப்படி ஏமாறாமல் இருப்பது என்பதை அடித்தட்டு மனிதன் முதற்கொண்டு அம்பானி போன்று தொழில் புரியும் மனிதர்கள் வரை பின்பற்ற வேண்டிய வழிமுறையை இவர் கூறியுள்ளார் மேலும் நாம் ஒரு பொருளை வாங்க நினைக்கும் போது அப்பொருள் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு உற்பத்தி தொழிலாளர்களால் விற்கப்படுகிறது நாம் எது தரமானது என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.
. முதன்முதலில் தரத்திற்காக மனிதன் எப்படி தரமானதை தேர்ந்தெடுத்தான் என்பதற்கு மனிதனே நாகரீக வளர்ச்சி முதற்கொண்டு நவீன காலம் வரை பயன்படுத்தும் விவசாயம் நீர் இறைத்தல் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவைகளில் எப்படி தரமானதை உற்பத்தி செய்து தரத்தை முதன்மையாக நிலைநாட்டினான் என்பதை ஒரு வரலாற்று ஆசிரியர் போல் எழுதி உள்ளது மிகவும் சிறப்பானதாகும் மேலும் தொழிற் புரட்சி விவசாய புரட்சி ஏற்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு காலங்களில் பயன்படுத்திய நவீன இயந்திரங்கள் கண்டுபிடிப்புகள் நூற்பாலைகள் டிரான்ஸ்போர்ட் துணி தைக்கும் இயந்திரம் நீராவி ரயில் ஆகியவைகளை கண்டுபிடித்த பிறகு ஒரு பொருளை பல லட்சம் நிறுவனங்கள் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது.
மேலும் அது எப்படி தரமானது தரமற்றது என்பதை எப்படி அறிய வேண்டும் என்பதை தெளிவாகவும் கூறியுள்ளார் ஏனெனில் ஒரே பொருள் பல நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டதால் மக்களுக்கு எப்பொருள் தரமானது என்று சந்தேகமும் ஏற்பட்டது அங்கேயேதான் தரம் தன் இடத்தை நிலைநாட்டியது மேலும் அவர்கள் நம்பகத்தன்மையையும் செயல்திறனும் ஆகிலும் நீண்டு கூறிய அளவிற்கு உறைக்கிறது அதுதான் தரமானதாக கருதப்படும் என்பதையும் அதையே நாம் வாங்கவும் உற்பத்தி செய்யவும் வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.
அடுத்ததாக ஜப்பானின் எழுச்சி மற்றும் தரம் பற்றி கூறியுள்ளார் ஜப்பான் என்று நாம் கூறும் பொழுதே நம் நினைவுக்கு வருவது தரம் மற்றும் அந்நாட்டு மக்களின் உழைப்பு ஜப்பானால் முடியாதது எவனாலும் முடியாது என்ற பொன் மொழியும் ஆகும் மேலும் எழுத்தாளர் நமக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஜப்பான் நாட்டை மேற்கோள் காட்டியுள்ளார் இது நம் நாட்டிற்கும் நமது வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கும் மேலும் அவர்கள் தன் லாபத்தில் 10% தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தன் உற்பத்தியில் துல்லியமும் நுண்ணறிவும் மற்றும் தேவை அறிந்து உற்பத்தி செய்யவும் வாங்கவும் வேண்டுமென்பதை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.
மேலும் ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டா ஹிரோஷிமா நாகசாகி இரண்டு நகரமும் முற்றிலும் அழிந்து விட்ட பிறகும் எப்படி மீண்டும் அவர்களால் மிகவும் குறைவான காலத்தில் அதிமுக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அந்நாட்டு மக்களின் தரமான தொழில் மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகளுமே ஆகும் காரணம் தரக்கட்டுப்பாட்டு நாயகர்கள் பெட்ரிக் டெய்லர் வால்டர் ஷேவர்ட் எட்வர்ட் டேமிங் ஜோசப் ஜூரான் இவர்கள்தான் இவர்கள் கூறிய வரைபடம் முறை துல்லியம் உற்பத்திக்கு ஏற்ற சம்பளம் போன்றவை குறைந்த அளவு தரத்தினை ஏற்படுத்தியது பின்பு தர பிதாமகர் ஜூரான் கண்டுபிடித்த சரியான காரணிகள் வரையறுக்கப்பட்ட சராசரி நோக்கித்தான் உற்பத்தி செய்யவேண்டும் சேர்க்கவும் குறைக்கவும் கூடாது என்பதை என்பதை கண்டறிந்த பிறகே தரமானதாக உற்பத்தி மற்றும் சேவை பெறப்பட்டது.
மேலும் ஜப்பானியர்களின் வளர்ச்சிக்கும் தரத்திற்கும் காரணமே தரக்கட்டுப்பாட்டு நாயகர்கள் தான் என்பதற்கு சான்றாக ஜெமினி என்ற பெயரில் விருதுகளும் அவருடைய சிலையை அனைத்து தொழிலாளர்களுக்கும் விருதாக தொழிற்சாலை முன்பு நிறுவியுள்ளனர் இவர்கள் வழங்கிய கோட்பாடுகளும் வழிமுறைகளும் அவர்கள் அறிந்து அதனை உள்வாங்கி சிறிதளவும் மாற்றம் இல்லாமல் பின்பற்றியது அவர்களின் தரத்திற்கும் வெற்றிக்கும் காரணமாக விளங்கியது மேலும் அவர்கள் தவறு எங்கு ஏற்படுகிறது என்பதை அறிந்து அதனை சரி செய்த பிறகு உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்.
மேலும் அவர்கள் திறன் கட்டுப்பாட்டை கடுகளவும் மாறாமல் மறுக்காமல் பின் பற்றியதே தரத்திற்கும் வெற்றிக்கும் காரணமாகும் ஒரு நிமிடம் ஒழுங்காக வைக்காத பொருளுக்காக 5 நிமிடம் மன உளைச்சலுடன் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார் இது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது ஒன்றாகும் செயலில் முழு கவனமும் துல்லியமும் இல்லாமலிருந்தால் நேரம் விரயமாகும் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார் . மேலும் ஜப்பான் நாட்டினார்கள் தங்கள் நாடு விழுந்ததற்கு அமெரிக்க நாட்டின் அருகில் தான் காரணம் என்பதை கூறி அவர்களிடம் அணு ஏவுகணை உற்பத்தி செய்வது பற்றி அவர்களிடம் கேட்டார்கள்.
ஆனால் அவர்களோ மகிழுந்து உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்பதை அவர்களுக்கு கூறினார்கள். நாளடைவில் ஜப்பானியர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்து விளங்கினார்கள் மேலும் அமெரிக்க நாட்டின் இடம் கற்று பின்பு அந்நாட்டிலேயே தன் தொழில்நுட்பத்தை உருவாக்கி அந்நாட்டிலேயே தன் பொருள் தான் தரமான பொருள் என்று நிரூபித்தும் காட்டினார்கள் அவர்களின் பொருள்களின் தவத்தைக் காட்டிலும் ஜப்பானியர்களின் பொருளில் தரமும் நம்பகத்தன்மையும் செயல்திறனும் என்று விளங்கியது.
மேலும் அந்நாட்டிற்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்பது மிகவும் அசாதாரணமான வளர்ச்சி மட்டுமல்ல அந்நாட்டு மக்களை போராடவும் செய்தனர் ஏன் நம் நாட்டு பொருட்கள் ஜப்பான் நாட்டு பொருட்களை விட தரம் குறைவாக உள்ளது கேள்வியை அந்நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியது என்பது அசாதாரணமானது ஒன்று அல்ல.
ஜப்பானியர்கள் மகிழுந்து இருசக்கர வாகனம் வீட்டு உபயோகப் பொருள்கள் ரேடியோ டிவி என்ன அனைத்து பொருள்களிலும் தங்கள் தரத்தை அனைத்து நாட்டிலும் நிலைநாட்டினார்கள். மேலும் அவர்கள் ஐந்து ஆண்டுகளில் அனைத்து நாடுகளிலும் அனைத்து பொருட்களையும் உற்பத்தியை செய்து ஏற்றுமதியை அதிகரித்தால் இதற்கு அந்நாட்டு மக்களின் உழைப்போம் சுறுசுறுப்பும் காரணம் என்று நமது ஆசிரியர் எழுத்தாளர் தெளிவாக நமக்கு காட்டியுள்ளார்
மேலும் இரண்டாம் உலகப்போர் ஹிட்லர் எவ்வாறு தனது முதல் அணுகுண்டை ஏவினார் என்றும் அதில் எப்படி தரம் குறைவானதாக இருந்தது என்பதும் தரக்குறைவு அவர் விழுந்ததற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் எத்தனையோ கதைகள் செயல்திறன் இல்லாமல் இருந்ததாக இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்டது தான் செய்த 6084 ஏவுகணைகளில் 3225 மட்டுமே தரமானதாகவும் அதில் 1850 சோதனைக்காக பட்டது என்பது தரத்தின் இன்றியமையாமை காட்டுகிறது மேலும் ரசியாவில் ஸ்டாலின் அதிபராக இருக்கும் சமயத்தில் தன் கார் டயர் தேய்மானம் அடைந்ததும் அத்தை மானம் தரம் இல்லாமல் இருந்ததை அறியாமல் தேவை அதிகம் இருப்பதாக என்று எண்ணி உற்பத்தியைப் பெருக்கினார்.
பின்பு தன் காரின் பயணத்தின் போதே அவர்கள் தரமற்றவை கவனித்தார்கள் பின்பு தரம் எவ்வளவு முக்கியம் தவறு எங்கே நடக்கிறது என்பதை அறிந்து வாடிக்கையாளர்கள் குறைகள் மீது முழு கவனம் கொண்டு அதனை அறிந்து தனது தரத்தை முற்றிலும் மாற்றி உற்பத்தியை பெருக்கினார்கள் தைச்சு ஒனோ என்ற விஞ்ஞானி மிர் விண்வெளி மையத்தில் சல்யூட் 7 உள்ள ஆராய்ச்சிக் கருவிகள் தேவையில்லாமல் சுற்றியுள்ளது அதனை எடுத்து வைக்கவே பல மணி நேரம் ஆனதும் அவர்களின் வேலை நேரங்களில் 30% நேரம் வீன் அடிக்கப்பட்டது என்பதை கூறியுள்ளார்கள்.
பின்பு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உற்பத்தி சேவை தரம் இல்லாமல் இருந்தது 1970 பிறகு european orginization for quality control என்ற அமைப்பை உருவாக்கி தரமான உற்பத்தி செய்து அதில் வெற்றியும் கண்டார்கள் இதற்கு உதாரணமாக இருந்த நாடு ஜப்பான் நாடு ஆகும் என்னால் முடியாதது எவனாலும் முடியாது என்பதையும் அதேபோல் அமெரிக்கர்களால் ஜப்பானால் முடியுமானால் ஏன் அமெரிக்காவில் முடியாது என்ற வார்த்தைகள் அனைத்து நாட்டு மக்களிடமும் புரட்சியாகும் தரத்திற்கு முன்னுதாரணமாகும் விளங்கியது தொழிலாளர்கள் தொழிற்சாலையில் ஏற்படும் பலவிதமான மீன் அடைப்புகளை எப்படி குறைப்பது என்பதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதில் சுமார் 25 லட்சம் அதிகமான கருத்துக்கள் பெறப்பட்டு வீணடிக்க வழிவகை செய்தது எந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் காண வேண்டும் என்பதைப் பற்றியும் இதில் கூறியுள்ளார் பெற்றோருக்கு உடல்நலம் அலுவலக சுமை குழந்தை படிப்பு கடன் உடல்நலம் வீடு என இது அதிக சுமை உள்ளதோ அதனை முதலில் சரிசெய்ய வேண்டும் மேலும் நடைமுறையில் பிரச்சினை இல்லாத மனித வாழ்க்கை யாருக்கும் இல்லை என்றும் அதில் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கின்றன நீங்கள் எதில் அதிக கவலைப்படுகிறீர்களா அதை நீங்கள் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உப்பு அல்லது கோதுமையை இது அதிகம் தேவை எது முக்கியமோ அதை வாங்க வேண்டும் உப்பு சிறிதளவு தான் பயன்படுத்துகிறோம் அதற்காக அதை அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் அரிசி கோதுமை ஆகியவற்றில் தேவைக்கேற்ப வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அதேபோல் பணமதிப்பு பற்றியும் கூறியுள்ளார் 2000 ரூபாய் நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுக்கள் சில்லரை என தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் பணத்தை சேமிக்க முடியும் என்றும் பல சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் செய்துள்ளார் மேலும் இப்புத்தகத்தில் வலிமை பலவீனம் என்பதற்கு உதாரணமாக இடது கை இல்லாத ஒரு மாணவன் ஜூடோ கற்றுக்கொள்கிறான் அவனுக்கு குரு ஒரே ஒரு கலையை மட்டும் கற்றுக் கொள்கிறார் பிறகு அப்போட்டியில் கலந்து கொண்டு மாணவன் வெற்றி பெறுகிறான் பின்பு மாணவன் குருவிடம் எவ்வாறு வெற்றி பெற்றேன் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது உன்னை அவன் வெற்றி பெற வேண்டுமென்றால் நீ ஓராண்டாக பயிற்சி செய்த உத்தியை வீழ்த்த வேண்டுமென்றால் எதிரி உனது இடது கையை பிடிக்க எனவே சில நேரங்களில் பலவீனமே நமக்கு வளமாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார் . மேலும் வெள்ளம் வருவதற்கு முன்பே அமைப்போடு என்று குறைபாடு எங்கெல்லாம் வரும் என்பதை ஆராய்ந்து அந்த குறைபாட்டை திட்டமிடும் போதே குறைவதும் வேலை செய்வதும் பயிற்சி கொடுப்பது முக்கியமாகும் என்று கூறியுள்ளார் விலை மட்டுமே தரத்தை நிர்ணயம் செய்வதில்லை பொருள் வாங்கும் போதே அன்று எவ்வளவு லாபம் என்பதை மட்டும் பார்க்காமல் பின்னால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என்பதையும் அறிய வேண்டும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்கேற்ப புத்தக வாசிப்பை மாணவர்களுக்கு ஊக்கப் படுத்தவேண்டும் ஆலமரம் விதை சிறியது ஆனால் அது ஆலமரம் உருவாவதை போன்றது என்பதற்கு ஏற்ப மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஏற்படுத்த வேண்டும். முறையாக திட்டமிடுதலும் செயல்பாடும் மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சராசரி மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் இதற்கு எடுத்துக்காட்டாக காட்டிற்கு விறகு வெட்டும் தொழிலாளி தனது கோடாரியை கூர்மையாக்க நேரம் எடுத்துக் கொண்டாள் மரத்தை வெட்ட குறைவான நேரமே எடுத்துக் கொள்ளும் என்பதை மாணவர்களின் அறிவையும் முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் மாணவர்களும் நாடும் வளர்ச்சி அடையும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தேவையறிந்து வாங்குவதும் தேவைக்கேற்ப செலவு செய்வதும் நமது வளர்ச்சிக்கு முக்கியமாகும் எப்படி தவறு எங்கு நடக்கிறது என்பதை கண்டறிந்து அதனை சரி செய்வதே தளத்தின் முதல் வெற்றியாகும் என்பதை தரக்கட்டுப்பாட்டு அறிஞர்கள் கூறியுள்ளார்கள் 1939 க்கு பிறகு அமெரிக்கா தொழில்நுட்பத்தில் தர நிலைமையை அடைந்தது ஜூரான் எழுதிய குவாலிட்டி ஹேண்ட் புக் 1951 முதல் பிரதி அச்சிடப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது மேலும் பல மாநாடுகள் நடத்தி அதன்மூலம் தொழிலாளர்களுக்கு கருத்துக்களை கூறி உற்பத்தியில் எவ்வாறு திறம்பட செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள் மேலும் வேலை செய்யும் இடம் கேம் பா ஜப்பானிய மொழியில் மாத இதழ் 1 வெளியானது இதில் தரம் பற்றிய நுணுக்கமும் உற்பத்தித் திறனும் அறிவுறுத்தப்பட்டது மேலும் கட்டுரை வானொலி தொலைக்காட்சி என அனைத்திலும் தரத்தைப் பற்றி முன் நிறுத்தினார்கள் மேலும் ஹிட்லரின் அனைவருக்கும் வானொலி ஆயிரம் பேருக்கு ஒரு கார் என்ற திட்டமும் மக்களுக்கு மிகவும் பயன்பட்டது மேலும் இது உற்பத்தியை அதிகரிக்கவும் தரத்தினை மேம்படுத்தும் வழிவகை செய்தது தொடர்ந்து கற்றல் தவறை தவிர்த்தல் திறனறிந்து செயல்படுத்துதல் படிப்புக்கேற்ற வேலை சோதனை மூலம் அறிவை தளத்தையும் பெறுதல் என்று நமக்கு அறிவுறுத்துகிறார் வீட்டில் வாங்கும் மளிகை பொருட்கள் முதற்கொண்டு பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் வரை தேவையறிந்து தரமானதை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணவர்கள் கல்வி தரம் சரியானதை தேர்ந்தெடுத்தல் உழைப்பு நேரம் தவறாமை என்பது நம் நாட்டிற்கும் மிகவும் முக்கியமாக முக்கியமானதாகும் .
எனவே தரமே தாரக மந்திரம் ஒரு புத்தகம் மட்டுமல்ல ஒரு பொக்கிஷம் ஆகும் இது மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அனைத்து மக்களுக்குமான ஒரு முக்கிய நூலாகும் இறுதியாக தரமே நிரந்தரம் என்றும் தாரக மந்திரமே நம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு விதையாக இருக்கும் என்பதை கூறி நமது ஆசிரியர் முனைவர் சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் இறுதியாக யூசப்செய் மலாலா கூறிய ஒரு “குழந்தை ஒரு எழுதுகோல் ஒரு புத்தகம் நினைத்தால் உலகத்தையே மாற்றிவிடலாம்” என்பதற்கு ஏற்ற மிகவும் தரமான ஒரு புத்தகம்தான் தரமே தாரக மந்திரம் நமது அனைத்து வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் இருக்கவேண்டிய ஒரு புனித நூல் இதுவாகும் என்பதைக் கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்
Selva, Teacher