புவியின் உயிரினங்கள் தோற்றத்திற்கு முதலில் தோன்றிய ஒரு செல் உயிரி வித்திட்டது. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாகப் பல உயிரினங்கள் உருவாகின. இன்று லட்சக்கணக்கான உயிரினங்கள் இந்தப் புவியில் வாழ்ந்த போதிலும், அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த உயிரினமாகப் பறவையினம் திகழ்கிறது. இந்த உலகில் உள்ள ஜீவராசிகளில் பறக்கும் திறன் படைத்த உயிரினங்கள் பல இருந்தபோதிலும், நெடுந்தூரம் பறக்கக்கூடிய தனித்திறமையைக் கொண்ட ஒரே உயிரினம் இந்தப் பறவைகள் தான். அதனால்தான் பறவைகள் வாழ முடியாத இடங்களில் வேறு எந்த ஒரு உயிரினமும் வாழத் தகுதி இல்லாமல் இருக்கின்றது.
இறந்த விலங்கினங்களை உண்டு சுற்றுப்புறச் சூழலை காப்பதில் பறவைகளின் பங்கு கணக்கிலடங்காது. இறக்கையை அடிக்காமல் பறவை எப்படிப் பறக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமளிக்கிறது. சிறகு விரித்து ஆடும் மயிலை கண்டு ஆனந்தம் அடையாத வரும் உண்டோ!. வித விதமாக ஒலி எழுப்பும் பறவைகளின் சங்கீதத்திற்கு எவையும் ஈடாகாது. இதுபோல் பறவையைப் பற்றிப் பல சிறப்பம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
பறவைகளைப் பார்க்கும் பொழுது குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களின் மனமும் குதூகலம் அடைகிறது. சிட்டுக்குருவியின் பாடலில் மயங்கிய பாரதி, குடும்பத்திற்காக அவரது மனைவி கடன் வாங்கிக் கொண்டுவந்த அரிசியைக் குருவிக்கு அள்ளி வீசினார்.
விதவிதமான பறவைகளைப் பற்றியும் அவற்றின் வாழ்விடங்கள், அவற்றின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பலவாறு நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பறவைகள் எப்படி இந்த நிலைக்கு வந்தன. அவற்றின் பறக்கும் திறன் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிவியல் தமிழில் அலசுவது தான் இந்த நூல்.
பறக்கும் தொழில்நுட்பத்தை எப்படி ஒவ்வொரு பறவையும் கையாளுகிறது, பறவையின் இறகுகளும் இறக்கைகளின் வடிவமைப்புகளும் ஏன் மாறுபடுகின்றன, பறவைகள் கூட்டமாகப் பயணிப்பதின் காரணம், பறவை பறக்கும் இடங்கள், தொலைதூர பயணத்திற்கான காரணங்கள், ஆற்றல் செலவீனம் இல்லாமல் பறக்கும் தந்திரம், பறவை மேலே கிளம்புவதற்கு இயற்கையின் உதவி, பறக்கும் இயந்திரங்கள் வடிவமைப்பில் பறவையின் பங்கு எனப் பல கேள்விகளுக்கு அறிவியலின் பார்வையில் இந்தப் புத்தகம் பதில் சொல்ல விழைகிறது.
என்.மாதவன் –
பரவசமூட்டும் பறவை வாழ்வியல்
வேடந்தாங்கலுக்குப் பலமுறை செல்லும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அந்த ஏரியிலிருந்து அங்கிருக்கும் மரங்களிலெல்லாம் ஒரு போர்வை போர்த்தியது போன்ற நெருக்கமாக பறவைகள் அமர்ந்திருக்கும். அருமையான அந்த பறவைகளுக்கு அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் என நாம் வைத்திருக்கும் கரடுமுரடான பெயர்களைப் பார்க்கப் பார்க்க பரிதாபமே மிஞ்சும். காலை நேரங்களில் உணவுக்காக அவை புறப்படும் நேரமாகட்டும், மாலை நேரங்களில் அவை திரும்பும் நேரமாகட்டும் எப்போதும் ஒரே மாதிரியான பரவசத்தை அவற்றிடம் காணமுடியும். இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலையை,சமூக வாழ்க்கையை,கூட்டுறவு மனப்பான்மையை அவைகள் கற்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் கற்பிக்கவே பிறந்தவர்கள் என்ற மனநிலையோடு வாழ்ந்து மடிகிறோம்.
கதைகளில் மட்டும் பறவைகளை சிலாகித்துப் பேச நாம் தயங்கியதே இல்லை. கூட்டுறவுக்கும், ஒற்றுமைக்கும் சின்னமாக பஞ்சதந்திர கதைகளில் பறவைகள் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன. சித்திரகிரீவன் கதையில் தலைவன் சொல் கேளாமல் இன்னலுக்கு ஆளாகும் பறவைகள் மீண்டும் தலைவன் சொல் கேட்டு உயிர்பிழைக்கும். ஆனால் நம்மில் பலரும் எந்த தலைவன் சொல்வதையும் கேட்கமாட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தானே.
பறவைகள் எப்போதாவது உணவுக்காக சண்டையிட்டுப் பார்த்திருக்கிறோமா? வீடுகளில் வளர்க்கப்படும் கோழி,சேவல்,வாத்து போன்றவையும் வீடுகளை அண்டிவாழும் காகம்,குருவி,மைனா போன்றவையும் உணவுக்கான சண்டையின்றி தத்தம் உணவை எவ்வளவு நேர்த்தியாகக் கண்டு உண்டு மகிழ்கின்றன. சமூக வாழ்வில் கூட்டுறவின் அவசியத்தை இதனைவிட வேறு எவ்வாறு விளக்கிவிடமுடியும். ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் பெரும் மரங்களில் வாழும் பறவைகளை உற்றுநோக்குவோம். காலை எழுந்தவுடன் கூடுகளைவிட்டு பறந்து எங்கெங்கோ சென்று கிடைக்கும் இரையினைத் தின்று திரும்புகின்றன. காலையில் அது செல்வதும்,மாலையில் திரும்புவதும் எத்தனை அழகானது. கிராமங்களில் நடைபயிற்சி செய்யும்போது வானின் குறுக்காக அவைகள் பறக்கும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
தேவையான காலங்களில் இறக்கைகளை உதிர்த்து வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். இறக்கைகளின் மூலம் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளவும் அவைகளுக்குத் தெரியும். நாம்தான் குளிருக்கேற்ற ஆடை,கோடைக்கேற்ற குளிர்பதனம் என இயற்கையிலிருந்து எவ்வளவு விலக இயலுமோ அவ்வளவு தூரம் விலகி சூழலுக்கு மாசு சேர்க்கிறோம்.
தமது கூடுகளை அவை அமைக்க அவை எடுக்கும் முன்முயற்சிகளைப் பாருங்கள். ஒரு பொறியாளர் தோற்றுவிடுவார். குறைவான வெளிச்சம், நிறைவான காற்று. மனிதர்களால் தொந்தரவின்மை போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றன. பின்னர் கிடைக்கின்ற நார்,குச்சி,பஞ்சு போன்றபொருட்களைக் கொண்டு நேர்த்தியான கூடுகளைக் கட்டுகின்றன. பின்னர் அதில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறிக்கின்றன. பின் அவற்றிற்கு உணவூட்டி அவை பறக்கும் வரை உடனிருந்துவிட்டு நீ யாரோ நான் யாரோ என பிரிகின்றன. ஒரு ஆதார் கார்டோ, குடும்ப அட்டையோ நமக்குத் தான் தேவை. கடவுசீட்டில்லாமல், விசா இல்லாமல் கண்டம் தாண்டும் சாதுக்கம் அவை. அவைகள் எளிமையின் சிகரங்கள்.
புதிய ஏற்பாடும் இதனாலேயே பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை என சிலாகிக்கின்றது.. விதைக்காமல் அறுக்காமல் சாப்பிடுவது மட்டும் சரியா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவைகள் தானியங்களை மட்டும் சாப்பிடுவதில்லை. தானியங்களை உண்ணும் பூச்சி புழுக்களையும் உண்டு, உணவுச் சங்கிலியினை பராமரிக்கின்றன.
பறவைகளை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகளால் சேதப்பட்ட தேசங்களின் உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் உண்டு. கடந்த ஆண்டு ராஜஸ்தான் போன்ற வடமேற்கு மாநிலங்கள் பட்ட இன்னல்களை அவ்வளவு விரைவில் மறக்கமுடியுமா என்ன? பூச்சிகொல்லி தெளிப்பால் ஏற்படும் இரசாயன மாற்றங்களால், முட்டை ஒடுகள் மெலிதாகி முட்டை குஞ்சாகப் பொரியாமலேயே அழியும் உதாரணங்களும் உண்டு.
உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை இவ்வளவு எளிமையாக நிறைவு செய்துகொள்ளும் வாழ்வியல் கல்வி அவை பெற்றுள்ளன.அவற்றின் மொழி நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவைகள் ஒன்றோடு ஒன்று பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உணவு கிடைத்தவுடன் காகம் கரையத் தொடங்கி அழைப்பது இதற்கான உதாரணம். நிசப்தமான நேரத்தில் சட்டென தோன்றும் ஒலியைக் கேட்டு அவைகள் புறப்படும்போது அவை எழுப்பும் ஒலிக்கும், இயல்பான மாலைநேர இளைப்பாறலில் அவை வெளிப்படுத்தும் ஓசையயும் ஆய்ந்து பாருங்கள். அவற்றின் மொழி நாம் அறியாமலிருப்பதன் சோகம் விளங்கும்.
இப்படிப்பட்ட பறவைகளின் வாழ்வியல் அறிவியலைப் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமானது. இந்நூலின் நோக்கமே அதுதான். பறவைகள் எத்தனைவிதங்களில் காணப்படுகின்றன, அவற்றின் இறகுகளிடையே காணப்படும் வேற்றுமைகள்,அவை எவ்வாறு பறக்கின்றன, பறப்பதற்கு உதவியாக உள்ள அதன் உடலமைப்பு என்ன? கண்டம் விட்டு கண்டம் பறப்பதற்கான தேவை அவற்றிற்கு ஏன் உண்டாகிறது, பறவையைக் கண்ட மனிதன் எவ்வாறு விமானம் படைத்தான், விமானத்தின் அறிவியல் பின்னணி என்ன? பறவைகளைப் பற்றிய இப்படியான ஒவ்வொரு கூறுகளும் ஆச்சரியமூட்டுவன. அவற்றை அறிவியல் பூர்வமாக விளக்க எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் சுவைபட எழுதுவது இன்னும் எவ்வளவு சவாலான பணி. இத்தகைய அரிய பணியை நண்பர் சசிகுமார் செய்துள்ளார். சிறுவர்கள் மேற்கொள்ளும் களப்பயணம் போல இதனை வடிவமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. அறிவியலை புனைவு போல சொல்வது மிகவும் சவலானது. அறிவியலும் தெரிந்திருக்கவேண்டும். படைப்பாற்றலும் வேண்டும். குழந்தைமொழியும் கைவரவேண்டும். இவை அனைத்தும் சசிகுமாருக்கு வாய்த்திருப்பது சிறப்பே.
திருவனந்தபுரம் இஸ்ரோ நிலையத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் இவரது முந்தைய வெளியீடு……விண்வெளி மனிதர்கள் பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. சசிகுமார் தொடர்ந்து பல வெற்றிகரமான படைப்புகளும் படைத்துப் படைப்புலகில் தொடர்ந்து சிறகடிக்க மனமார வாழ்த்துகிறேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்
அன்புடன்
என்.மாதவன்
ஆசிரியர் குழு உறுப்பினர்,துளிர் (சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
76 மதூர் கிராமம் மற்றும் அஞ்சல் வழி எலப்பாக்கம் செங்கற்பட்டு மாவட்டம்
thulirmadhavan@gmail.com
வே.சங்கர் –
வானவாசிகள் – நூல் அறிமுகம்
வே.சங்கர்
நூலின் பெயர் : வானவாசிகள்
நூலின் ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 128
விலை : 120
பரந்துபட்ட வாசிப்பில், ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது விசயம் மூளைக்கும் உட்கார்ந்துகொண்டு அச்செய்தியோடு தொடர்புடைய மற்ற செய்திகளையும், உள்மனம் நினைவுகூர்ந்து கிளறிக்கொண்டே இருக்கும்.
அப்படித்தான் முனைவர் பெ.சசிக்குமார் அவர்களின் “வானவாசிகள்” (பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை) என்னும் நூல் விளக்கிச் சொல்லும் செய்திகள்.
உண்மையில், வானவாசிகளான பறவைகள், கூட்டமாகப் பறந்தாலும் அழகு, தனியாகப் பறந்தாலும் அழகு. இந்நூலை வாசித்த பிறகு, காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சியின் போது பறவைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
புதரில் இருந்து விர்ரென்று குறுக்கே பாய்ந்தோடும் பறவைகள், ஆங்கில ‘வீ’ வடிவத்தில் பறந்து செல்லும் பறவைகள், மரத்தின் உச்சிக்கொம்பில் அமர்ந்துகொண்டு பாட்டுப்பாடும் பறவைகள், தோரணம் கட்டியதுபோல் கரண்ட் கம்பிகளில் வரிசைகட்டி அமர்ந்துகொண்டு அழகுகாட்டும் பறவைகள், மெல்லிய பூவின் காம்பில் அமர்ந்துகொண்டு தேனெடுக்கும் பறவைகள், பலம்கொண்ட கழுகைத் துரத்தியடிக்கும் குட்டிப்பறவைகள், கீச்சிட்டுக்கொண்டே இருக்கும் குஞ்சுகளுக்கு உணவூட்டும் பறவைகள், விசிலடித்தால் எதிர்பாட்டுக் குரல் கொடுக்கும் பறவைகள் என்று நாள்தோறும் ஏதேனும் ஒரு பறவை அல்லது பறவைக் கூட்டத்தை தொடர்ந்து கவனிக்கவும் அவற்றை நேசிக்கவும் முடிந்தது.
இத்தனை நாட்கள் பார்த்த அதே பறவைகள்தான் என்றபோதும், படிப்படியாக பறவைகள் பறக்கும் விதத்தை உற்று நோக்க வைத்தது இந்தநூல்தான்.
வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு மனநிலையில், பறவைகளைப் பற்றிக் கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றியது தற்செயலா அல்லது திட்டமிட்டா என்று வேறுபடுத்திபச் சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், சில பறவைகளின் சிறகடிப்பும், சிருங்காரமும் சிலிர்ப்பூட்டுபவை.
இறகும் இறக்கைகளும் என்று தலைப்பிடப்பட்ட உரையாடலை வாசித்தபிறகு, நடந்துசெல்லும் சாலையின் ஓரத்தில் ஏதாவது ஒரு இறகு தட்டுப்பட்டால்போதும், பள்ளிக்கூடச் சிறுவனைப்போல், உடனே அதைப் பொறுக்கி எடுத்து அது எந்தப் பறவையின் இறகாக இருக்கும் என்ற ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது என்னளவில் பெருங்கதை.
இந்நூல், இரண்டாம் வகுப்பு படிக்கும் கௌதம் தனது அண்ணன் கோகுல் மற்றும் அத்தை மகள்களான சிருஷ்டிகா மற்றும் கௌசிகா ஆகியோருடன் ஈரோடு அருகில் உள்ள வெள்ளோடு சரணாலயத்திற்கு செல்கிறான். அவனது சந்தேகங்களுக்கும் மற்ற மூன்று குழந்தைகளுக்குமான உரையாடல் மற்றும் அவர்களது சந்தேகங்களுக்கு அவர்களது மாமா தரும் பதில்கள் என்ற அளவில் இந்நூல் நம்மையும் அவர்களோடு நடைபோட வைக்கிறது.
சற்றேரக்குறைய 15 தலைப்புகளின்கீழ் உரையாடல் வடிவிலும், அதே சமயம் கதைசொல்லும் வடிவிலும் இந்நூலை வடிவமைத்திருப்பது சிறப்பிலும் சிறப்பு. பரவசமூட்டும் பறவைகளின் வாழ்வியலை குழந்தைகளுக்கேற்ற நடையில் எழுதப்பட்டிருப்பதால். பறவை ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்.
பறவைகள் பலவிதம் என்று அனைவருக்கும் தெரியும். அவைகள் பறக்கும் விதமும் பலவிதம் என்பதை படம்போட்டு விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண பாமரனுக்கு எழும் “என்னால் பறக்கமுடியுமா?” என்ற கேள்விக்கு விடை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு பறவை அதிகபட்ச வேகத்தில் செல்லும்போதும், முன்னோக்கிச் செல்லும்போதும், பின்னோக்கிச் செல்லும்போதும், பறந்துகொண்டே ஒரே இடத்தில் நிற்கும்போதும் தனது சிறகை எவ்வாறு உபயோகித்துப் பறக்கிறது என்ற தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எப்போதெல்லாம் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகமாக இருக்க்கும்?, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பறவைகளின் பங்கு என்ன? பறவைகள் வலசை செல்லும் பயணத்திற்க்கு எவ்வாறு தயாராகின்றன? என்று ஏராளமான கேள்விகளுக்கு மிக எளிமையாக ஒரு கதை சொல்லும் பாணியில் பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.
தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளும் பறவைகள் ஏன் கூட்டமாகவே செல்கின்றன? என்ற கேள்வி மற்றவர்களுக்கு எழுவதைப்போல் எனக்கும் எழுந்ததுண்டு. இந்நூலைப் படித்தபிறகுதான் அதற்கான விடையை அறிந்துகொண்டேன்.
அதைவிட ஹைலைட்டான விசயம், வல்லூறு, நாரை, பிஞ்ச், மரங்கொத்தி, காகம் போன்ற பறவைகள் பறக்கும் விதத்தை வாசித்தபிறகுதான், அட! ஆமாம்! இத்தனை நாட்களாக இதனைக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வெட்கம்கொள்ள வைத்தது.
இன்னும் சொல்லப்போனால், பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கைகொண்ட பறவை மயில் என்றுதான் இத்தனை காலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஆல்பட்ரோஸ் என்னும் பறவைதான் இப்புவியில் இருக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கை கொண்ட பறவை என்ற தகவல் எனக்கு முற்றிலும் புதிது.
படித்தவர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேங்களைத் தீர்ப்பதற்காகவும், இக்கால பள்ளி மாணவர்கள் எளிதாக அறிந்துகொள்வதற்காகவும் எழுதப்பட்டுள்ள இந்நூல் இயற்கை எவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பேருதவியாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இந்நூல் முழுவதும் விரவிக்கிடக்கும் பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்நூலை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தபிறகு, பறவையின் காதலன் ஆகியிருக்கிறேன். வரப்போகும் கோடைகாலத்தில் பறவைகளுக்குத் தண்ணீரும் உணவும் தரத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் குழந்தைகளே. நீங்களும் என் கருத்துக்குச் செவிசாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாசியுங்கள் இந்நூலை. ”வானவாசி”களோடு வசியுங்கள் சிலகாலம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தருணிகா –
ஆண்டுவிழா
#அறிவியல்
பெயர்: தருணிகா
வயது: 12
வகுப்பு: ஏழாம் வகுப்பு
புத்தகத்தின் பெயர்: வானவாசிகள்
ஆசிரியர்: முனைவர் பெ.சசிகுமார்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: 120/-
வணக்கம் என் பெயர் தருணிகா ஏழாம் வகுப்பு படிக்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தமிழில் சிறகின் ஓசை என்ற தலைப்பில் பறவைகள் பற்றி படித்திருக்கிறேன்.
பறவைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். வானவாசிகள் என்ற புத்தகத்தில் பறவைகள் பற்றி நிறைய detailed information’s இருக்கிறது இதை படிப்பதற்கு மிகவும் interesting ஆக இருக்கிறது.
பறவைகள் எத்தனை வகைப்படும், அதனுடைய இறக்கைகள் எப்படி இருக்கும் ,எப்படி பறக்கிறது , இப்படி அறிவியல் சம்பந்தமாக பல செய்திகள் இதில் இருக்கின்றன.
எனக்கு இதில் பல விஷயங்கள் பிடித்திருந்தன. படிப்பதற்கு வியப்பாகவும் இருந்தது.
அவை;
*இப்போது உலகத்தில் 18 ஆயிரம் பறவைகள் இருக்கிறதாம்.
* ரீங்கார பறவைகள் பறந்து கொண்டே நிற்கும் திறன் பெற்றவை.
*தூக்கணாங் குருவிக்கு அழகாக தொங்கும் கூட்டைக் கட்ட தெரியும்.
*நெருப்புக்கோழி மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலாக ஓடக் கூடிய பறவை.
* பென்குயின் ஒரு காலத்தில் பறவையாக இருந்தது பிறகு மீனை பிடிப்பதற்கு பறப்பதை விட நீந்தி போனால் தான் மீனை பிடிக்க முடியும் அதனால் பறப்பதை நிறுத்திவிட்டு தண்ணீரில் நீந்த அது இறக்கைகளை மாற்றிக்கொண்டது.
*கழுகை எடுத்துக்கொண்டால் அது வேட்டையாடி உண்ணும் ஒரு பறவை. அது வேட்டையாடி முடிந்தவுடன் இரையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் அதன் இறக்கைகள் strong ஆக அமைக்கப்பட்டுள்ளது
கழுகு மேலிருந்து வேட்டையை பிடிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால் அதன் வேகம் மணிக்கு 100 km க்கு அதிகமாக இருக்கும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இரையை பிடித்து கொண்டு மேலே பறக்க ஆரம்பித்துவிடும்.
*பருந்து அதன் இரையை பிடிக்கமுடிவு செய்து விட்டால் மணிக்கு 200 km வேகத்திற்கு மேலாக வந்து சீக்கிரமாக தூக்கி கொண்டு அதே வேகத்தில் மேலே செல்வதற்கு அதன் இறக்கைகள் பேருதவியாக இருக்கின்றன.
* பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கை கொண்ட பறவை ஆல்பட்ரோஸ் ரொம்ப நாள் பறக்கும் திறன் இதற்கு இருக்கிறது. கடல் மீன்கள் தான் இதன் முக்கிய உணவு. இந்த பறவைகளை பார்த்துதான் விமானங்களும் தயாரிக்கப்பட்டன.
*காகம் அதிக மூளை கொண்ட பறவையாகும்.
*பறவைகள் பறப்பதற்கு மூன்று விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றன.முதலில் சிறகடித்து பறக்கும் பறவைகள். இந்தப் பறவைகள் எப்பொழுதும் சிறகை அடித்துக் கொண்டு மட்டுமே பறக்கும். இந்தப் பறவைகள் சிறிய தூரம் மட்டுமே பறக்கும். அடுத்த வகை பறவைகள் மிதக்கும் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன இவை நீண்ட தூரம் பயணத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள கொண்டவை. மூன்றாவது வகை பறவைகள் தேவைப்படும் பொழுது சிறகை அடிக்கும் தேவை இல்லாத பொழுது மிதக்கும். இப்படி மூன்று விதமாக இருக்கிறது.
* ஒரு continent விட்டு இன்னொரு continent க்கு போகும் பறவைகள் குளிர் காலத்திற்கு முன்பாக தனது பயணத்தைத் தொடங்குகின்றன ஏனென்றால் அதற்கு குளிர்காலத்தில் உணவு கிடைப்பது ரொம்ப சிரமமாக இருக்கும்.
*வலசை என்ற தமிழ்ச் சொல் பறவைகள் ரொம்ப தூரம் பயணம் செய்வதை குறிப்பதாகும்.
*பூச்சி வகைகளில் பட்டாம்பூச்சியின் இறகு மட்டும் தான் சற்று பெரியதாக இருக்குமாம் பூச்சி வகைகளில்
மிதந்து கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டவை வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே அவற்றின் இறகுகள் மற்ற பூச்சிகளை காட்டிலும் பெரிதாக இருப்பதால் அவற்றால் மிதந்துகொண்டு பறக்க முடிகிறது .
*பறவை பறப்பதற்கு காற்றடிக்கும் திசையும் மிகவும் முக்கியமானது அதேபோல் பறவை பறக்கும் திசையில் காற்று அடிக்கும் போது அது பறவை முன்னே செல்வதற்கு உதவுகிறதாம்.
“பறவையின் இறகுகள் பற்றி பல செய்திகளை இந்த புத்தகத்தில் படித்தேன். பறவையின் உடலில் உருவாகும் புரதப் பொருட்கள் தான் இறகுகளாக மாறுகின்றனவாம்.
*பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை பார்த்துக்கொண்டிருந்த மனிதன்தான் பறக்கும் விமானத்தை கண்டுபிடித்தார் இதை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் இவர்கள் தான் முதன் முதலில் பறக்கும் விமானத்தை கண்டுபிடித்தார்கள்.
பறவைகள் எப்படிப் பறக்கின்றன.
பறக்கும் தொழில்நுட்பம் என்ன , இறகுகளும் இறக்கைகளின் designs ஏன் மாறுபடுகின்றன, பறவை எப்படி மேலே கிளம்புகிறது அது எப்படி நீண்ட தூரம் பயணம் செல்கிறது அது எப்படி கூட்டமாக பயணம் செய்கிறது என்பதை மிகவும் எளிமையாகவும் interesting ஆகவும் அறிவியல் ரீதியாகவும் உதாரணத்துடன் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் படியாக ஆசிரியர் எழுதி இருக்கிறார்.
இந்தப் புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
இந்தப் புத்தகத்தில் வரைந்திருந்த படங்கள் மூலம் பறவைகளின் இறைக்கைகள் பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இன்னும் பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளது அதை பற்றி என் அம்மாவிடம் நான் கேட்டு தெரிந்து கொள்வேன்.
நன்றி
வெ.கிருபாநந்தினி –
வானவாசிகள்
(பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை)
ஆசிரியர்- முனைவர் பெ.சசிக்குமார்
பதிப்பகம்- Books of Children
பாரதி புத்தகாலயம்
வானவாசிகள் புத்தகம் முழுவதும் உரையாடலாக எழுதியுள்ளதும், தகவல்களை பரிமாறிக் கொள்ளுதலும் தான் இந்த புத்தகத்தின் முதல் சிறப்பே. அடுத்து நேரடியாகவே சென்று பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக எழுதியுள்ளார். அடுத்து பறவைகளைப் பற்றியது என்றாலும் பூமி எப்படி உருவானது, உயிரினங்கள் எப்படி இந்த பூமியில் உருவாகின? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
பறவையின் சிறப்பே பறப்பதும் அதற்கு பயன்படும் இறக்கையும் தான். அப்படியான இறக்கை எப்படி பரிணாமம் அடைந்துள்ளது என விளக்கமாக எழுதியுள்ளார். நம்மாள் ஏன் பறவைகளைப் போல் பறக்க முடிவதில்லை, என்பதற்கு காற்றின் அழுத்தம், காற்றின் திசை, பறவைகளின் எடை, நமது எடை என அனைத்தையும் புரியும் விதமாக எழுதியுள்ளார். பின்பு இறகின் வகைகள், பாகங்கள், அமைப்பு மற்றும் சிறகுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.
பறக்கும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உள்ள வேறுபாடு, பறவை இறக்கைகளின் நீளம், பறவைகள் இடம் பெயர்வதின் அவசியம், வலசை போதலுக்கு எப்படி பறவைகள் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றன, வலசை செல்லும் பொழுது உணவு, இறக்கை, தங்குமிடம் என அனைத்தையும் எப்படி திட்டமிட்டுக் கொண்டு பல ஆயிரம் கிலோ மீட்டர் மாதக் கணக்கில் பறக்கின்றன. வேட்டையாடும் பறவைகள் எப்படை அதனைவிட அதிக எடையுள்ள உயிரினங்களை வேகமாக தூக்கிச் செல்கின்றன?.
பறக்கும் பொழுது ஏன் V வடிவத்தில் பறக்கின்றன. ஏன் சில பறவைகள் கூட்டமாகவும், சில பறவைகள் தனியாகவும் பறக்கின்றன, எப்படி தரையிலிருந்து மேலே பறக்க ஆரம்பிக்கின்றன, எப்படி தரையிரங்குகின்றன. பறவைகளை பார்த்து சிந்தித்து விமானம் கண்டுபிடித்த முதல் விமானம், தற்போது விமானங்கள் எத்தனை தொழில்நுட்ப வசதிகளுடன் முன்னேற்றமடைந்துள்ளன?. ஆகிய கேள்விகளுக்கு எளிமையாக விவரித்துள்ளார்.
இறுதியாக பறவைகளை கவனியுங்கள், மகிழ்ந்திருங்கள் என்ற தலைப்புடன் புத்தகத்தை முடித்துள்ளார். இயற்பியல், வேதியியல், விலங்கியல் என அனைத்தையும் அனைவருக்கும் எளிதாக புரியும் விதமாக எழுதியுள்ளார், தினசரி வாழ்வில் நாம் கடந்து செல்லும் செயல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, சிந்தித்தால் எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்.
மாணவர்களும், பறவை ஆர்வளர்களும், ஆசிரியர்களும், ஏன் வன உயிரின புகைப்படக் கலைஞர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் வானவாசிகள்.
இப்படிக்கு
முனைவர். வெ.கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
logesh –
விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே..
இறக்கை விரித்தே இறக்கை விரித்தே வானம் ஏறி….
விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பறத்தல் என்பது குறியீடு. மனுச பய புள்ளையான நம்முள் எல்லாருக்கும் விமானத்தில் பறத்தலே பெரும் பரவச அனுபவம், உண்மையாகவே இறக்கை முளைத்து பறக்க முடிந்தால்… ஆம் தேவதைகளாகி இறக்கை விரித்து பறந்தோமானால்…அந்த நாள் என்று வரும் என ஏக்க பெருமூச்சு விடலாம்… இல்லை இறக்கை போன்ற ஒரு செயற்கை பொருள் வைத்து பறக்கும் காலமும் வரலாம். அப்பொற்காலம் வெகுவேகமாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், உங்களைப் போலவே நானும்.
பறவையை கண்டான்… விமானம் படைத்தான் என்ற அளவே என்னுடைய அறிவியலறிவு… ஆனால் பறத்தல் என்பது எப்படி சாத்தியமாகிறது.. அது ஏன் ஒரு பறவைக்கு இறக்கை நீளமாகவும்.. இருங்கள் இருங்கள்… முதலில் இறகு என்பது இறக்கை என்பது வேறு என்பதும் எனக்கு புரிந்தது இப்புத்தகத்தில் தான். அதாவது இறகு என்பது பலது சேர்ந்ததுதான் இறக்கையாம்.. என்னத்தே 12 வரைக்கும் படிச்சு.. என்னத்தே அதற்கு பிறகு பிஸிக்ஸ் இளங்கலை வேற படிச்சு… அடப்போங்கப்பா.. இது தெரியலயே எனக்கு என அசிங்கமா போச்சு.
பறவைகளில் எவை எவை பறக்கும்? பறக்காது இருக்கும் கோழிக்கும், அதன் பெரியம்மா நெருப்புக்கோழிக்கும் என்ன ஆச்சு? எல்லாப் பறவைகளுக்கும் இறக்கை ஒரே அளவா.. சிறியதும் பெறியதும் ஏன் ஆச்சு.. அதாவது கொஞ்சமா பறந்தா சிறிய இறக்கை போதுமாம், ரொம்ப தூரம் பறக்கிற மாதிரி இருந்தா பெரிசா வேணுமாம்… புறா, காக்கா, குருவி என்பவை நம் வீட்டில் பறந்துகொண்டு கீழே லேண்ட் ஆவதற்கும், ஒரு கழுகு லேண்ட் ஆவதற்கும் வித்தியாசம் இருக்காம், அதற்கு ஒரு அறிவியலும் இருக்காம்.
கழுகு லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும், காக்காய் அண்ணன் லேண்ட் ஆகும் ஸ்பீடிற்கும் கூட வித்தியாசம் இருக்காம், கழுகு செம ஸ்பீடு.. 200 கிமீ வேகமாம். இது காக்கா இறகு, மயிலிறகு என புஸ்தகத்தில் வைக்கிறோமே, அது தானா விழுகாதாம்.. அவங்களா மனசு வைச்சு சரி இது தேவையில்ல, புதுசு வேணும் என நினைச்சாதான் விழுமாம். இத்தனூண்டு இறகுதான் என்னென்ன வகையில் அதற்கு பறப்பதற்கு, உணவிற்கு, தேவைப்படும் வெப்பத்திற்கு உதவுதாம்… பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கும் என்ன காரணம் என்ன, ஏழு கடல் தாண்டி வேடங்தாங்கல் வந்தடையும் பறவை பறந்துகிட்டே தூங்குமாம், தண்ணீரை சேர்த்து வைச்சு குடிச்சுக்குமாம், ஒரு பறவை (ரீங்காரப் பறவை என நினைக்கிறேன்), பறந்துகிட்டே ஒரே இடத்தில் நின்னு அப்படியே பூவின் தேனை ஸ்ட்ரா இல்லாமலே, பூவும் கசங்காமல் குடிக்குமாம்…
அடப் போங்கப்பா… பறவைகள் பறக்கும் நுட்பம் குறித்து ஏராளமான தகவல்கள், எளிய புரிந்துகொள்ள கூடிய வகையான மொழியில்.. தமிழில் இவ்வளவு எளிமையா சுவாரசியமா ஒரு அறிவியல் புஸ்தகம் நான் படிச்சு நாளாச்சு. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்னும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு ஒன்னு இருக்கு.. அது செம்ம சூப்பராக இருக்கும். அது போலவே இது இருக்கு.
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.. சொற்பிழை எழுத்துப்பிழை இல்லாம, ஒவ்வொரு பக்கத்திற்கும் அதன் வலது பக்க மேல் மூலையில் ஒவ்வொரு வகையான பறவையின் படம், என உண்மையிலே அமர்க்களமான வரவு.
ஆனா என்ன இப்படியான புத்தகங்களில் நான் காணும் ஒரே குறை இருக்கு. தேவையான இடங்களில் வண்ணங்களை பயன்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் பறவைகள் பறத்தல் என்பதற்கெல்லாம் என்ன என்ன வண்ணத்தில் படங்கள் கிடைக்கின்றன, அதையும் பயன்படுத்தி இருக்கலாம். கேட்டா இதன் விலையே ரூ.120/-.. அதையும் போட்டா விலை இன்னும் கூடும் என சொல்வாங்க (எங்காளுங்க தான்!) . அதற்கும் ஒரு பதில் இருக்கு என்கிட்டே. அதாவது ஆங்கிலத்தில் பேப்பர்ப்பேக் ஹார்ட்பவுண்ட் வடிவங்கள் என இரு வடிவங்கள் பயன்படுத்துகிற மாதிரி பாரதி புத்தகாலயமும் ஒன்றை பேப்பர்பேக் என்ற வடிவத்தில் வண்ணங்கள் இல்லாம குறைந்த விலையில் நிறைய பிரதிகளாகவும், ஹார்ட்பவுண்ட் வடிவமாக வண்ணங்களுடன் வழவழ தாளில் தேவைப்படும் விலையை வைத்து குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து அதையும் வெளியிடலாம்..
சீக்கிரம் செய்யுங்க தோழர்களே..
வானவாசிகள் என்னும் முனைவர் பெ. சசிக்குமார் அவர்களின் பிரமாதமான இந்நூலிற்கு ஆசிரியருக்கும், புக்ஸ்பார் சிலரன் (பாரதி புத்தகாலயம்) நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்…
இவரின் இதே நிறுவனத்தின் விண்வெளி மனிதர்கள் என்னும் மற்றொரு அறிவியல் புத்தகத்தையும் கையில் எடுத்துள்ளேன், இதே போன்ற சுவாரசியத்தை எளிய வகையில் அறிவியலை சொல்லும் மொழியை கொண்டிருக்கும் என்ற உறுதியில்…..
Bharathi Puthakalayam Puthagam Pesuthu #வானவாசிகள் #அறிவியல்