மனித வரலாற்றில் விண்வெளியைக் குறித்த கேள்விகளும் ஆர்வமும் காலம் காலமாக இருந்து கொண்டே இருந்திருக்கின்றன. விண்ணில் நிகழும் மாய விளையாட்டுக்களும், வர்ணஜாலங்களும் மனிதனின் சிந்தனையையும் கற்பனையையும் எப்போதும் தூண்டிக்கொண்டே இருந்திருக்கின்றன. விண்வெளித் துறையில் நிகழும் சாதனைகளைக் குறித்த ஒருமித்த ஆவல் அனைத்து தரப்பு மக்களிடமும் இருப்பதை இன்றளவும் கண்கூடாகக் காண்கிறோம். நாம் வாழும் பூவுலகுக்கு வெளியே இருக்கும் நிலவையும், கதிரவனையும், கோள்களையும், விண்மீன்களயும், அண்டவெளியயும் பற்றிய வியப்பு மனிதனின் மனதில் எப்போதும் இருக்கின்றது. விண்வெளி என்பது இன்னும் அறியப்படாத மர்மமான பல இரகசியங்களைத் தன்னகத்தேக் கொண்டிருப்பதாகவே எண்ணப்படுகிறது. அந்த மர்மங்களை உடைத்து இரகசியங்களைக் கைகொள்ள மனிதன் முன்னெடுத்த முயற்சிகள் பலப்பல. மேலும் மக்களின் வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் விண்வெளியை பயன்படுத்துவதில் அவன் படைத்த சாதனைகளும் எண்ணிலடங்கா.
நம் அன்றாட வாழ்வின் பகுதிகளாகி, நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் பல, நமக்குக் கிடைத்திருப்பதற்கு விண்வெளித் துறையின் முன்னெடுப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. இப்படி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் சாதனைகள் செய்திருக்கும் விண்வெளித்துறை, மனிதனின் வாழ்வானுபவத்திலும் ஒரு மகத்தான சாதனையைச் செய்துள்ளது. அதுதான் விண்வெளிப்பயணம்.
விண்வெளி என்பது பல உன்னதனமான அனுபவங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. புவியோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கும் புவியீர்ப்பு விசையிலிருந்து நம்மை விடுவிக்கும் எடையில்லா நிலையை அங்கே அனுபவிக்க முடியும். புவியின் காற்று மண்டலத்தாலும் மேகத்திரைகளாலும் மறைக்கப்படாமல் விண்வெளியின் அதிசயங்களை அங்கிருந்து நேரிடையாக கண்டு வியக்கலாம். புவியின் இயற்கை அழகை அதன் முழுமையானப் பரிமாணத்தில் கண்டு ரசிக்கலாம். மனதைக் கவரும் இத்தகையப் பலப்பல சாத்தியங்களைக் கொண்டுள்ள விண்வெளியின்பால் மனிதன் பெரிதும் ஈர்க்கப்பட்டான். அங்கே நேரில் சென்று வரும் தனது விருப்பத்தை ஈடேற்றப் பல தீவிர முயற்சிகளைச் செய்துள்ளான். அவற்றில் வெற்றிகரமான சாதனைகளையும் படைத்துள்ளான்.
பல வகையான சாகசச் செயல்பாடுகளும் விளையாட்டுக்களும் உலகில் இருந்தாலும் அவற்றின் உச்சமாகக் கருதப்படுவது விண்வெளிப் பயணமே. அனைவருக்கும் கிட்டாத, மிகச்சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய வாய்ப்பாகவே அது இன்றுவரை இருக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் பயணம் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நிறைவடைவதற்குப் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பும் மிகப்பெரும் பொருட்செலவும் தேவைப்படுவது விண்வெளிப் பயணத்திற்கு மட்டுமே.
ஒரு சாகசப் பயணமாக மட்டுமின்றி மக்கள் வாழ்வியல் மற்றும் அறிவியல் முன்னேறங்களுக்கும் விண்வெளிப் பயணங்கள் பயன்படுகின்றன. இப்படிப்பட்ட விண்வெளிப் பயணத்தின் வரலாற்றையும், வழிமுறைகளையும், பயன்பாடுகளையும், அதன் சாதக பாதகங்களையும் படிப்பவர்களுக்கு நேரடியான அனுபவமாக வழங்குவதே இந்நூலின் நோக்கம்.
ம.கா. சச்சின் சூர்யா –
என்னைக் கவர்ந்த “விண்வெளி மனிதர்கள்”. (விஞ்ஞானிகள் சசிகுமார் மற்றும் அரவிந்த் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய எனது கருத்துக்கள்)
~~~~~~
ம.கா. சச்சின் சூர்யா
ஏழாம் வகுப்பு ஏ பிரிவு
பாரதி வித்யா பவன், ஈரோடு
~~~~~~
நாம் அனைவரும் அறிந்திருப்போம், விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி காகரின், முதலில் சென்ற விண்கலம் ஸ்புட்னிக்-1 , விண்வெளியில் ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது . ஆனால் சிலருக்கு மட்டும்தான் தெரியும் அதில் உள்ள சில நுணுக்கமான விஷயங்கள். அந்த சிலரை பலர் ஆக்குவதாக இந்த “விண்வெளி மனிதர்கள்” புத்தகம் உள்ளது. நமது சிறுவயது காலங்களில் வியந்து போயிருப்போம். நாம் சிறு வயதில் மனிதர்கள் நிலாவுக்கு எப்படி சென்றிருப்பார்கள் என்று யோசித்து வியந்திருப்போம். இந்த புத்தகத்தில் அதற்கான பதில்கள் இருக்கின்றன. இந்த புத்தகத்தில் நிறைய ஆச்சரியமூட்டும், சிரிப்பூட்டும் வியக்க வைக்கும் தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளி ஓடங்களுடைய தயாரிப்பின் போதும், சோதனையின் போதும் தோல்விகளை படிக்கும் போது கவலையாக இருக்கும். அதேசமயம் வெற்றிகளை படிக்கும் போது மகிழ்ச்சியில் இதயம் குதிக்கும். இதில் விண்வெளி மனிதர்கள் தாண்டும் சோதனைகள் தரப்படும் பயிற்சிகள், அனுபவிக்கும் கஷ்டங்கள் ஆகியவற்றை படிக்கலாம். இதில் விண்வெளிக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்புடைய பற்றிய முழு வரலாற்றை தெரிந்து கொண்டேன். நான் இதுவரை ஒரு Nonfiction புத்தகத்தை இவ்வளவு ரசித்து படித்தது இல்லை. அவ்வளவு சுவாரஸ்யமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
விண்கலங்களால் மனிதர்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதை ஒவ்வொரு துறைவாரியாக கூறுகிறார். இது மேலும் புத்தகத்தை படிக்கத் தூண்டியது. Parabolic flight என்கிற முறை மூலம் O gravity அல்லது Micro gravity என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். இந்த புத்தகத்தில் Parabolic flight என்கிற வழிமுறை அல்லாமல் வேறு எந்த வகையில் O gravity அல்லது Micro gravity அடைய முடியும் என்று கூறுகிறது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டியிட்டு விண்வெளிக்கு முதலில் விண்கலம் அனுப்ப போவது யார் என்று சண்டை நடந்தது. அடுத்து நடந்தது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா அந்த போட்டியில் ஜெயித்தது. இதன் அடுத்த பனிப் போர் ஆரம்பமாயிற்று. அதன் பிறகு தான் பனிப்போர் சமயத்தில் அப்பலோ 11 நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் குழுவை சுமந்து சென்று நிலவில் இறக்கிவிட்டது. அதன் பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் அப்பலோ விண்கலத்தையும் சோயூஸ் விண்கலத்தையும் இணைத்து நாங்கள் சமாதானம் அடைந்து விட்டோம் என்று உலகுக்கு பறை சாற்றியது.
விபத்துகளை சில நிகழ்வுகள் மனதுக்கு சோகம் அளிக்கும். கண்களில் நீர் தேக்க வைக்கும். அந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கும் நிகழ்வுகளை படிக்கும் போது நிம்மதியாக ஆறுதலாக இருக்கும்.
அவர்கள் அணியும் உடை சில சமயங்களில் போட்டிருப்பவரை விட கனமாக இருக்கும். இந்த புத்தகத்தில் கதிரியக்கம் காரணமாக வரும் பிரச்சினைகள் நோய்கள் அவற்றைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விண்வெளியில் கிடைக்கும் உணவு பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் அதைப் பற்றி மேலும் தெளிவான விளக்கத்தை படித்தறிந்து தெறிந்து கொண்டேன். விண்வெளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படும் இதில் நன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நான் ஒரு விபத்து பற்றி கூற விரும்புகிறேன். பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற மனிதர் யூரி காகரின் உடைய நண்பர் இறந்து விட்டார். இதனால் விண்வெளிக்கு செல்ல அவர் மறுத்தார். இவரை சமாதானப் படுத்துவதற்காக நீங்கள் இப்போது விண்வெளிக்கு சென்றால் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதராக வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் என்று கூறினர். அதன் பிறகே காகரின் சம்மதித்தார். உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு மிகச் சிறந்த விண்வெளி பற்றிய புத்தகம் படித்தது நிறைவாக இருக்கிறது.
வே.சங்கர் –
விண்வெளி மனிதர்கள் – ( மதிப்புரை )
வே.சங்கர்
( சிறார் இலக்கிய எழுத்தாளர் )
நூலின் பெயர் : விண்வெளி மனிதர்கள்
ஆசிரியரின் பெயர் : பெ.சசிக்குமார் / பா.அரவிந்த்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 296
விலை : ரூ.270/-
”விண்வெளி மனிதர்கள்” என்ற இந்த நூலை, இதில் விவரிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்தே எனது மதிப்புரையைத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
”அப்பல்லோ – 11 திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்ற மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காலின்ஸ் கட்டுப்பாட்டுக்கூடத்தில் தங்கி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவருவது எனவும், நிலவில் இறங்கும் விண்வெளி ஓடத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் பயணம் செய்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அப்பல்லோ-11 திட்டம் துவங்குவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக மனித குலத்திலிருந்து முதன்முதலில் நிலவில் காலடி வைக்கப்போகும் அந்த மனிதர் யார்? என்ற ஆர்வம் அமெரிக்கா முழுவதும் தொற்றிக்கொண்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்கைக் காட்டிலும் பஸ் ஆல்ட்ரின் அதிக கல்வித் தகுதி உடையவராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் இடம் முதலில் நிலவில் யார் கால் வைப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டார். ஆனால், அதைப் பற்றி இப்பொழுது கூற இயலாது நமது பயணத்தின்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் நிலவில் இறங்கியவுடன் அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இடம் கூறியிருந்தார்.
நிலவில் இறங்க முயற்சி செய்து கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் திட்டமிட்ட இடத்தில் பெரிய பள்ளங்கள் இருப்பதைக் கண்டார். அங்கே இறங்கினால் பின்னர் மேலே எழும்ப இயலாது என்ற காரணத்தால் பக்கவாட்டில் அவர் விண்கலத்தை நகர்த்திக்கொண்டே சென்றார். அவர் இவ்வாறு நகர்த்திக்கொண்டே சென்றதால் கீழே இறங்குவதற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைந்துகொண்டே வந்தது.
நிலவில் விண்கலத்தை நிலை நிறுத்திய பொழுது மேலும் 25 வினாடிகளுக்கு இயக்கக்கூடிய எரிபொருள் மட்டுமே இருந்தது. ஜூலை மாதம் 21 ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு, விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்திய பிறகு, நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடியை நிலவில் பதித்தார்.
நிலவில் இருந்து கிளம்பி கட்டுப்பாட்டுக் கூடத்திற்கு செல்லத் தயாராகும்போது ஆல்ட்ரின் தவறுதலாக கட்டுப்பாட்டுக் கருவியின் ஒரு பொத்தானை உடைத்துவிட்டார். அது இல்லாமல் அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பல்லோ திட்டத்தைப் பற்றி காலின்ஸ் இடம் ஒரு முறை கேட்ட பொழுது, திட்டத்தின்படி நிலவில் இறங்கிய விண்கலத்திற்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அதைப்பற்றிக் கவலை இல்லாமல் நீங்கள் மட்டும் புவிக்கு திரும்பவேண்டும் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை என்று கூறியுள்ளார்”.
இந்தத் தகவல் ஒரு உதாரணம்தான். இதுபோன்ற நாம் கேள்விப்பட்டிராத, மயிருகூச்செரியும் தகவல்கள் இந்நூலில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் எதை வாசித்தாலும் அது பள்ளிக்கூடப் புத்தகங்களை நினைவுபடுத்தும் தன்மைகொண்டது என்ற எண்ணம் என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்த புத்தகம் என்று சொன்னால் அது இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளான பெ.சசிக்குமார் மற்றும் பா.அரவிந்த் ஆகியோர் எழுதி வெளிவந்திருக்கும் “விண்வெளி மனிதர்கள்” என்ற புத்தகம்தான்.
இதுதான் இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் புத்தகம் என்று சொல்லப்பட்டாலும், நம்மால் சிறிதும் நம்பமுடியவில்லை. அத்தனை தகவல்களை நேர்த்தியாக திரட்டியும், கருத்துச் செறிவுடனும், எளிய நடையோடும் எழுதப்பட்டுள்ளது. முதல் வாசிப்பிலேயே இந்நூல் மீதான ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் ஒருசேர உணரமுடிகிறது.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன.. அதில் சில வார்த்தைகள் புரியும் பல வார்த்தைகள் கடைசிவரை புரியவே புரியாது. ஒருவேளை தப்பித்தவறி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அதற்கு ஆங்கிலமொழியே பரவாயில்லை என்ற எண்ணம் துளிர்த்துவிடும். அந்த அளவுக்கு அதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் படுத்தி எடுத்துவிடும்.
ஆனால், இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எளிய மொழி நடையில். அதுவும் நேரடித் தமிழ்மொழியில், ஒரு கைதேர்ந்த கதை சொல்லி ஒரு நீள்கதையை சுவாரசியமாகச் சொல்லிச் செல்வதைபோல எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நாசாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு சாமானிய வாசகன் ஒரு திகில் கதையை எப்படி வாசித்துப் புரிந்துகொள்வானோ அதைப்போல, ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்திச் செல்வதாலேயே இந்நூல் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. இந்நூலை பாரதிபுத்தகாலயம் மிகச்சரியாக அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதற்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
நம் வாழ்நாளில் காணமுடியாத பிரம்மாண்டம் என்று எதையெல்லாம் கற்பனை செய்துவைத்திருந்தோமோ அதையெல்லாம் கண்முன்னே கொண்டு நிறுத்தினால் எப்படியிருக்கும் அப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்நூல்.
நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் அடிக்கடி கேள்விப்படும், மனிதர்களைக் கொண்டுசெல்லும் விண்கலம், அவற்றில் யார் யார் பயணித்தார்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுஅறிவுச்செய்திகள் அடங்கிய ஒருகாலப்பெட்டகம் இந்நூல். பள்ளிக்கூட மாணவர்களும், அறிவியல் ஆசிரியர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் என்று சொன்னால் அது மிகையல்ல.
அறிவியலில் ஆர்வம் கொண்ட எல்லா சிறார்களுக்கும் வானத்தில் பறக்கும் வானூர்தி உட்பட விண்கலங்கள், விண்வெளி ஓடம் விண்வெளி நிலையம் போன்றவற்றின் மேல் ஒருவித ஈர்ப்பு இயல்பாகவே இருக்கும்.
இந்நூலை வாசிக்க வாசிக்க நம் ஆர்வம் கூடிக்கொண்டே செல்வதற்கு காரணம், விண்வெளி என்றால் என்ன?, ஏவூர்தி உருவான வரலாறு, விண்வெளி நிலையம் எவ்வாறு இருக்கும்? விண்வெளியில் ஏற்பட்ட விபத்துக்கள், பயணத்திற்கு முன்பான பயிற்சிகளின்போது இறந்தவர்கள், ஏவுவாகனத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட விண்கலங்கள் என்று ஏராளமான தகவல்கள்தான்.
இதுமட்டுமல்ல, விண்வெளி உடை பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தவையாக இருக்கின்றன. அதில் ஒன்று வாசகர்களின் பார்வைக்காக; “ அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட், தன் பயணத்திற்கு காலை 6 மணிக்குத் தயாரானார். சுமார் 4 மணி நேரம் காலதாமதம் ஆகியும் குறிப்பிட்டபடி ஏவு ஊர்தி கிளம்புவதாக இல்லை. நீண்ட நேரம் ஊர்தியில் அமர்ந்து இருந்ததாலும், பயணத்திட்டம் தள்ளிப்போன காரணத்தாலும் இயற்கை உபாதையால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.
அவர் இதை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உடனடியாக உபாதையை கழிக்க வேண்டும் என்று தெரியப்படுத்தினார். அவருக்கு உடுத்தப்பட்டிருந்த உடையில் இதற்கான வசதி செய்திருக்கப்படவில்லை. ஒருகட்டத்தில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் இந்த விண்வெளி உடையிலேயே உபாதையை கழிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு அதைப்போல் செய்தார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு சிறுநீர் அங்குள்ள மின்சார பொருட்களில் படும்பொழுது அதன் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று பயந்தனர். ஆனால் விண்வெளி வீரரின் உடை ஒரு தகுந்த சீதோஷ்ண நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், சுமார் ஒரு மணி நேரத்தில் ஈரப்பதம் அனைத்தும் ஆவியாகி, உடை உலர்ந்துவிட்டது. அதன்பிறகு, விண்வெளி பயணத்திற்கு தயாரிக்கப்பட்ட உடைகளில் இயற்கை உபாதைகளை உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் வைக்கப்பட்டன”.
வளர்ந்த நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்கலங்கள், அவற்றில் பயணிக்கும் விண்வெளி மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்திவிட்டுச் செல்லும் இந்நூல் கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளியில் வாழ்வதால் ஏற்படும் சவால்களையும் தெளிவாக சொல்லிச்செல்கிறது.
விண்வெளியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாக பல சவால்கள் இருப்பதை இந்நூல் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. “ முதலாவதாக, இரவுபகல் வேறுபாடுகள். புவியில் 12 மணி நேரம் இரவு, 12 மணி நேரம் பகல் என்று சீராக உள்ளது. விண்வெளி மனிதர்கள் புவிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புவியை ஒருமுறை சுற்றி வருகிறார்கள். இதில் ஒரு மணிநேரம் வெளிச்சத்திலும் அரைமணி நேரம் இருட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அடுத்ததாக விண்வெளி நிலையத்தை இயக்கத்தில் வைத்துக்கொள்ள இயங்கும் கருவிகளில் இருந்து ஏற்படும் இரைச்சல்கள். அதுமட்டும் இல்லாமல் நாம் வீட்டில் உறங்குவதுபோல் விண்வெளி நிலையத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் உறங்குவதற்கான வசதிகளும் இல்லை” போன்ற தகவல்கள் வாசிக்கும் நமக்குப் புதிதிலும் புதிது…
ஒரு வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைப்பதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டுமோ, அந்த அளவுக்கு இந்த நூலை பாதுகாத்து வாசிப்பது அவசியம் என்பதை இதைவாசிக்கும் வாசகர்களால் உணரமுடியும்.
விண்வெளி என்றால் என்ன? ஏன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவேண்டும்? விண்வெளிப்பயணத்தில் உள்ள பயன்கள் என்ன?, ராக்கெட் உருவான வரலாறு, ராக்கெட்டின் அமைப்பு, அதன் பாகங்கள், மற்றும் சுற்றுவட்டப் பாதைகளில் ஏற்படும் நிகழ்வுகள் ஆகியவை வாசிக்க வாசிக்க சுவாரசியத்தைக் கூட்டிக்கொண்டே செல்கிறது.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போட்டியில் முதன்முதலில் எவற்றையெல்லாம் மற்றும் யார்யாரையெல்லாம் அனுப்பினார்கள், விண்வெளியில் முதலில் உணவுண்ட மனிதர் யார்? விண்வெளி மனிதருக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் என்னென்ன? விண்வெளியில் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், தாவரங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், நெருப்பு எரிதல் பற்றிய ஆராய்ச்சிகள், விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்? போன்ற தகவல்கள் வாசிக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
முதல் விண்வெளி வீராங்கனை யார்? விண்வெளித்திட்டங்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது மேலும் இதுவரை விண்ணிற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களின் பெயர்கள் ஆகியவை கோர்வையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
283 ஆம் பக்கத்தில் விண்வெளி சாதனையாளர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுயிருந்தது மிகச்சிறப்பு. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.
இந்நூலைப்பற்றி மதிப்புரை எழுத ஏராளமான விசயங்கள் இருக்கிறது. இம்மதிப்புரையின் நோக்கம் இந்நூலை வாசித்து ஒருவர் மற்றவருக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல, இன்றைய இளம்தலைமுறையினருக்கு அறிவியலின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுவும் ஆகும். இந்நூலை வாசிப்பதற்கு முன்பாக இளம்மனங்களில் இருந்துவந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றாக தீர்ந்துபோவதை உணரமுடியும். இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய புத்தகம் இந்த “விண்வெளி மனிதர்கள்” என்ற நூல்.
செ. கார்த்திகேயன் –
நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம்
இஸ்ரோ விஞ்ஞானிகள் பெ.சசிக்குமார் – பா.அரவிந்த் அவர்கள் இணைந்து எழுதிய
விண்வெளி மனிதர்கள்
நூல் கிடைக்குமிடம்
பாரதி் புத்தகாலயம் சென்னை
தொடர்பு கொள்ள
044 24332424
விலை ரூ.270/-
பக்கங்கள் – 294.
அறிவியல் எழுத்தாளர்களில், அடுத்த தலைமுறை அடர்ந்த செறிவுடன் தயாராகிக் கொண்டு வருகின்றது.
பொதுமக்களுக்கான /சமூகத்துக்கான அறிவியல் எழுத்துக்களில் பங்களிப்பை செலுத்திவருபவர்கள் சொற்பமான அளவில்தான் உள்ளனர்.
அதிலும் சிலர் துறைப்பின்புலம் இல்லாமல் , அறிவியலின் மேல் உள்ள ஆர்வத்தினால் அதனைப் பற்றி 360°யில் தரவுகளையும் தகவல்களையும் முன்வைக்கக்
கூடியவர்களாக இருக்கின்றனர்.
எஞ்சியுள்ள வெகுசிலரே துறைப் பின்புலத்தில் இருந்து எழுதுகின்றனர்.
அப்படியாக, தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்வரவாக இந்நூலும் , நூலாசிரியர்களும் அமைந்துள்ளனர்.
சாதாரணமாக வானத்தை அண்ணாந்து பார்த்து வியக்கத் தொடங்கும் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்புடன் கட்டிப்போடும் அறிவியலின் ஒரு பிரிவு
விண்வெளி அறிவியல்
ஏவூர்தி (Rocket), செயற்கைக் கோள் (Satellite),விண்வெளி ஓடம்(Space Ship),நூலில் பயணம், ஹபிள் டெலஸ்கோப், கிரகணங்கள், செவ்வாய் பயணம்,ஏலியன்ஸ்,வால் நட்சத்திரம், ISS(சர்வதேச விண்வெளி நிலையம்),ஏரோப்ளான் என , பலரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் மேலே பூமியை சுற்றி வருகின்றன.
எனக்கு இந்த ஆர்வத்தை அறிமுகம் செய்து , அதனை மேலும் செழுமைப்படுத்திய எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் விஞ்ஞானி TV. வெங்கடேஸ்வரன், நெல்லை முத்து, அறிவியல் எழுத்தாளர்கள் என்.ராமதுரை, ஏற்காடு இளங்கோ,
சி.ராமலிங்கம்,
பேரா.சோ.மோகனா உள்ளிட்டோர்.
இவர்களுடைய எழுத்துகளில் இருந்து இந்நூல் வேறுபடுகிறதா ? எனக் கேட்டால் , நிச்சயம் ” ஆம்” என்றே சொல்வேன்.
2018ல் இந்தியா மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் என்கிற பிரதமரின் அறிவிப்பால் எழுத உந்தப்பட்டதாக நூலாசிரியர் நூல் வெளியீட்டன்று கூறினார்.
உண்மையில் இந்தியாவால் மனிதரை விண்வெளிக்கு அனுப்ப இயலுமா ? என்கிற கேள்விக்கான பதிலை விண்வெளித்துறைக்கான துவக்க வரலாற்றில் இருந்து துவங்கி, எதிர்கால செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது வரையிலும் 17 அத்தியாயங்களாகப் பிரித்து , ஒவ்வொன்றிலும் மிக சமீபத்தைய ஆய்வுப் போக்குகளையும் இணைத்து பதிலைக் கொடுத்திருப்பதில் இந்நூலின் தனித்தன்மை தெரிகின்றது.
ஏற்கனவே விஞ்ஞானி த.வி.வெ யின் “நிலவுக்குள் பயணம்” நூலில் கிடைத்த சில விபரங்கள் இதிலும் கிடைத்தாலும் , இந்நூல் முழுமூச்சாக, தமது இலக்கில் இருந்து தவறாமல் சேர்க்க வேண்டிய விசயத்தை வாசகனுக்கு எளிதில் கடந்திவிடுவதில் மட்டும் நூலாசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி
இருக்கின்றனர்.
இதுவரை வெளிவந்த விண்வெளி தொடர்பாக ஹாலிவுட் முன்வைத்த திரைப்பார்வையை மாற்றி அவற்றை கேள்விகேட்க வைக்கின்றது.
மனிதரை விண்ணுக்கு அனுப்புவதென்பது மந்திர தந்திரம் போன்ற நிகழ்வு அல்ல. அதற்கு முறையான பயிற்சியும், துல்லியமான கணக்கீடும், லாவகமக சூழ்நிலையைக் கையாளுந்திறனும் மிக முக்கியத்தேவை என்பதை சுவைபட எடுத்துரைக்கின்றது.
இவற்றில் ஒன்றின் அளவு , கடுகளவேனும் குறைந்தாலும் கூட பல நூறு கோடிகள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
விண்வெளியில் மனிதர்களின் உடல் நிலை எப்படி இருக்கும் ? அங்கு தகவமைந்து கொள்ள என்னென்ன அம்சங்களைக் கைக்கொள்ள வேண்டும் ? அங்கே நடைபெறுகின்ற நுட்பமான ஆராய்ச்சிகள் , மீண்டும் புவிக்கு திரும்புகின்ற உயிரைப் பணயம் வைக்கும் புறப்பாடுகள்,புவிக்கு வந்தபின் அவர்களது உடலில் ஏற்படுகிற மாற்றங்கள் , இடையே கவனக்குறைவால் ஏற்பட்ட விண்வெளி விபத்துகள், விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் உலக நாடுகளின் பங்களிப்பு , ஸ்பேஸ் எக்ஸ் ம் எலான் மாஸ்க்கும் , எதிர்காலப் பயணங்களை சாத்தியப்
படுத்துவதற்கான நடைமுறைகள்
என, இந்நூல் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பலவற்றையும் அதன் நம்பகத்தன்மை
குறையாமல் எடுத்துக்கூறுகிறது என்றால் அது மிகையில்லை.
இத்துறையில் நிலவும் பெண்கள் மீதான பாராமுகமும் அங்கங்கே வெளிப்படுகின்றன.
ஒரு வாசகர் இந்நூலை எந்த அளவு வாசித்துள்ளார் என்பதற்கு அவராகவே சுயமதிப்பீடு செய்யும் பொருட்டு பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள 70 கேள்விகள் புதிதாகவும் , சுவாரஸ்யமாகவும் இருந்தன.
நாஜி ஜெர்மனியின் இருபெரும் விஞ்ஞானிகள் அமெரிக்காவையும் , ரஷ்யாவையும் தஞ்சமடைந்ததில் இருந்து நவீன விண்வெளித்துறையின் வரலாறானது துவங்குகின்றது.
ஹிட்லரிடம் இருந்தவரை அறிவு அழிவிற்குப் பயன்பட்டது. அதுவே சனநாயகப் பாதையில் மாற்றம் கண்டபொழுது, இன்றைய தொலைதொடர்பு வசதிகளை நாம் சுகமாக அனுபவித்துக் கொள்வதற்கு உதவியாக இருந்திருக்கன்றது.
எனவே அறிவை யார் கைக்கொள்ள வேண்டும் , எதைச் சார்ந்துள்ள அறிவு எல்லோருக்குமானதாக இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வே பெரும் உதாராணம்.
பின்னாளில் முதலாளித்துவம் அதனை வெகு சுலபமாக மாற்றீடு செய்துவிட்டது தனிக்கதை.அதற்கும் நூலுக்கும் தொடர்பு இல்லை.
நேற்று ஏதோ ஒன்றில் பின்வரும் வரிகளைப் படித்தேன்.
அனைத்து மதங்களும் மனிதர்கள் விண்ணிற்குச் செல்வது எப்படி எனக் கூறுகின்றன
ஆனால் அறிவியல் மட்டுமே அந்த விண்வெளி எப்படி இயங்குகிறது என்பதை நமக்கு விளக்குகிறது
அப்படியான விண்வெளி அறிவியலின் துறைசார் விஞ்ஞானிகள் இருவரும் இணைந்து எழுதியுள்ள இந்நூலும் அந்த மேற்கோளைப் போலவே அறிவியலின் உண்மையான அணுகுமுறைக்கு வலுவாக நியாயம் சேர்க்கின்றது
6ம் வகுப்பு முதல் அனைத்துக் குழந்தைகள் உள்ள வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய நூலாக நண்பர்களுக்கு பரிந்துரை செய்கின்றேன்
செ. கார்த்திகேயன்
ஆசிரியர்
26/04/2021